Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஏரியல் யோகாவில் 178 ஆசனங்கள்: இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு " அசரவைக்கும் அஸ்வினி

ஏரியல் யோகா

பெண்களைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் சராசரி குடும்பத்தில் இரண்டாவது மகளாகப் பிறந்தவர்தான் ராஜபாளையத்தைச் சேர்ந்த அஸ்வினி. அக்காவின் திருமணத்தில் தங்கை கலந்துகொள்வதையே தடுக்கும் நடைமுறைகொண்டது குடும்பம். பொது இடங்களுக்குச் செல்ல குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அனுமதி கிடையாது. இந்தச் சூழலில் வளர்ந்து, பல போராட்டங்களையும் சவால்களையும் சந்தித்து, இன்று இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார் அஸ்வினி. ஏரியல் யோகாவில் சாதனை நிகழ்த்தி, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார். 'நெக்ஸ்ட்... கின்னஸ்' எனப் பயிற்சியில் இருந்தவரைப் பிடித்தேன். 

ஏரியல் யோகா

‘‘என் அப்பா ராமராஜ் எலக்ட்ரிகல் கடை வெச்சுருக்கார். அம்மா விஜயலட்சுமி ஹோம் மேக்கர். என் அக்கா ராமகலா, ஆன்லைன் வொர்க் பண்றாங்க. அவங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. நான் பிடெக் ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சுட்டு, 'ராமகலாஸ் கலெக்‌ஷன்ஸ்' என்கிற ஆன்லைன் ஜவுளி பிசினஸ் பண்றேன். கிராஃப்ட் பொருள்களை வெச்சு, ராமகலா கிப்ஃட் ஷாப் நடத்தறேன். நான் யோகாவுக்குள்ளே வந்தது பெரிய கதை. ஸ்கூலுக்குப் போற வயசுல காலையில் ஆறு மணிக்கே முகத்தில் தண்ணியைத் தெளிச்சு எழுப்பி, யோகா கிளாஸுக்கு அனுப்புவாங்க. பிடிக்காமல்தான் போக ஆரம்பிச்சேன். ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல் போட்டிகளில் மெடல்களும் வாங்கினேன். ஆனாலும், யோகா மேலே தீவிர ஈடுபாடு வரலை. யோகா மாஸ்டர் நீரதிலிங்கம் சொன்னதால்தான் கலந்துக்கிட்டேன்னு வெச்சுக்கங்களேன். தொடர்ந்து யோகா பண்ணினதில் உடம்புல ஒரு பிளக்சிபிளிட்டியை உணர முடிஞ்சது. பீரியட்ஸ் சைக்கிள் 28 நாள் கரெக்டா இருக்கும். உடலளவில் எந்தத் தொந்தரவும் வந்ததில்லை'' என்கிற அஸ்வினி, யோகா தன்னோடு கலந்த நிகழ்வைத் தொடர்ந்தார். 

''யோகா போட்டிகள் எனக்குப் புதிய அடையாளத்தைக் கொடுத்தது. அதனால், மற்றவர்களுக்கு யோகா கத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன். காலேஜ் போனதும் அங்கே டான்ஸ் கலந்த யோகா வகுப்பு எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. நாம் விட நினைச்சாலும் இந்த யோகா நம்மகிட்டே திரும்பத் திரும்ப வருதுனு புரிய ஆரம்பிச்சது. அப்பவும், முழுசா அதிலேயே இறங்கிடலை. ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சு, ஆன்லைன் பிசினஸ் ஆரம்பிச்சேன். நண்பர்களோடு சேர்ந்து 6 முதல் 12 வயது குழந்தைங்களுக்காக 'நட்சத்திரா' என்கிற பெயரில் புரொகிராம் நடத்தினேன். யோகா, பேச்சுப் பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி, சிலம்பம் இப்படி ஒரு கலவையா இருக்கும். அந்த நிகழ்ச்சி குழந்தைங்ககிட்ட என்னை நெருக்கமா கொண்டுபோய் சேர்த்துச்சு. அப்போதான் யோகாவில் புதுசா ஏதாவது பண்ணும் எண்ணம் உண்டாச்சு. ஏரியல் யோகா பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். இந்தியாவில் அவ்வளவா பிரபலம் ஆகாதது. வெளிநாடுகளில் சர்க்கஸில் புழக்கத்தில் இருந்துச்சு. 

ஏரியல் சில்க் என்கிற துணியில் ரோப் கட்டி செய்வதுதான் ஏரியல் யோகா. அதன் அடிப்படைகளைத் தெரிஞ்சுக்கிட்டு வீட்டிலேயே பயிற்சிகள் எடுத்தேன். அதில், கின்னஸ் ரெக்கார்டு செய்யும் ஆசையில் விண்ணப்பிக்க முயற்சி பண்ணினேன். அதற்கான விதிமுறைகள் அதிகமா இருந்துச்சு. முதல்ல, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டுக்கு டிரை பண்ணுவோம்னு இறங்கி ஜெயிச்சுட்டேன். நான் எவ்வளவு பரிசுகள் வாங்கினாலும் வீட்ல ஸ்ட்ரிக்ட்தான். ஏரியல் யோகாவுக்கான பிராக்டிஸை கிரவுண்டுல பண்ணவே வீட்டில் அனுமதிக்கலை. இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு போட்டிக்குப் போகிறவரைக்கும் வீட்லதான் பிராக்டிஸ் பண்ணினேன். அப்ளை பண்ணி அனுமதி வாங்கியும் கடைசி நிமிஷம் வரைக்கும் வீட்ல ஓகே சொல்லலை. போராடித்தான் பெர்மிஷன் வாங்கினேன். ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் 178 யோகாசனங்களை ஏரியல் சில்க் ரோப்ல செஞ்சுக் காட்டினேன். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு அங்கீகாரம் கிடைச்சது. இது, அடுத்தடுத்த சாதனைகள் செய்யறதுக்கான அனுமதியையும் வீட்டில் கொடுத்திருக்கு. என்னை எப்பவும் உற்சாகப்படுத்திட்டே இருந்த நண்பர்களுக்கு நன்றி. அவங்கதான் என்னோட எனர்ஜி டானிக்’’ என்கிறார் உற்சாகமாக. 

விரைவிலேயே கின்னஸ் சாதனை படைக்க வாழ்த்துகள் அஸ்வினி! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement