Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"வெடித்த குழாய் தீப்பிடிச்சிருந்தா 10 கி.மீ.க்கு சாம்பல்தான்!” - கொதிக்கும் கதிராமங்கலம்

மீண்டும் பரபரப்பையும், பதற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது கதிராமங்கலம். இன்று அதிகாலை ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய்கள் வெடித்துக் கிளம்பிய தீ மற்றும் புகை மண்டலம் கதிராமங்கலத்து மக்களைக் கொதிக்கச் செய்திருக்கிறது. 

”நாங்க அப்பவே சொன்னோம் அதிகாரிகள்தான் கேட்கவில்லை. இப்படி எண்ணெய் குழாய் வெடிச்சு நிலத்திலெல்லாம் ஒரே எண்ணெய் படலம் வழிந்தோடுகிறது. தீப்படித்து எரிஞ்சிருந்தா 10 கி.மீ சுற்றளவில் உள்ள எல்லாமே எரிஞ்சிருக்கும். இதுவரை 3 முறை வெடித்துவிட்டது” என்று நெஞ்சு படபடக்க பேசுகிறார்கள் கதிராமங்கலத்து மக்கள்.

குழாய் கதிராமங்கலம்

''இன்று காலை 8 மணி இருக்கும். கதிராமங்கலத்திலிருந்து பந்தநல்லூருக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் எடுக்கப்பட்ட எண்ணெய்யைச் சுமந்து செல்லும் குழாய் வெடித்ததில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் எண்ணெய் படலமாகப் படர்ந்து பாழாய்போய்விட்டது. எல்லா அதிகாரிகளும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சமாதானப்படுத்தினார்கள். இப்போது வெடித்துவிட்டது யார் பதில் சொல்லப்போகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தார்கள், சிறையில் அடைத்தார்கள். மராமத்து பணிகள் என்று சொல்லி உள்ளே வந்தார்கள். 3 நாள்களில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு போர்கால அடிப்படையில் எண்ணெய் குழாய்களை அமைத்தார்கள். இப்போது கதிராமங்கலத்தில் அருகேயுள்ள துர்க்கையம்மன் கோயில்பகுதியில்தான் எண்ணெய் குழாய் வெடித்திருக்கிறது. இதுவரை மூன்று முறை  வெடித்துச் சிதறியிருக்கிறது. ஒரு பெண் தீக்காயமடைந்து பாதிக்கப்பட்டிருக்கிறார். அதையே முன்னுதாரணமாக வைத்து போராடினோம். அதிகாரிகளும், காவல்துறையினரும் எந்தப் பாதிப்பும் இல்லை, போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொன்னார்கள். இப்போது என்ன ஆச்சு, அதிகாரிகளும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினரும் வாய் திறக்கவில்லை. நாங்கள் கிராமத்திற்குள் எந்த அதிகாரிகளையும் அனுமதிக்கவில்லை.  

குழாய் கதிராமங்கலம்

நாங்கள் போரட்டத்தைத் துவங்கும்போது மக்களுக்கும், நிலத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று சொன்னார்கள். போராடியவர்களைக் கைது செய்தார்கள். அரசு அதிகாரிகளெல்லாம் வக்காளத்து வாங்கினார்கள். இப்போது எங்கே போய் மூஞ்சியை வைத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. எண்ணெய் தீப்பிடித்து எரிந்திருந்தால் எங்கள் கிராமத்தில் உள்ள ஆடு, மாடு, கோழிகளோடு சேர்ந்து நாங்களும் தீக்கு இரையாகி இருப்போம்.  

மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுகிறார்கள். யாருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சொன்னால் நாங்கள் அவர்களிடம் போய் கேட்போம். எங்களைப் போராட வேண்டாம் என்று சொல்லுவதற்குக் காவல்துறைக்கு என்ன உரிமை இருக்கிறது? தொடர்ந்து எண்ணெய் லீக் ஆகி எரிகிறது. இதனால் பாதிப்படைந்தவர்களிடம் பணத்தைக் கொடுத்து வெளியில் சொல்லாதீர்கள், சொன்னால் காவல்துறையை வச்சு கேஸ் போடுவோம் என்று மிரட்டுகிறார்கள் ஓ.என்.ஜி.சி ஊழியர்கள். எங்கள் கிராமத்தில் உள்ள தண்ணீரை எங்களால் குடிக்க முடியவில்லை. குடித்தால் நோய்கள் வரும் என்ற அச்சம். குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பக்கத்து கிராமத்தையே நம்பி வாழ வேண்டியிருக்கிறது. மாவட்டம் நிர்வாகம் எங்கள் கிராமத்தின் மீது அக்கறை கொள்ளவே இல்லை. எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், தாசில்தார், விஏஓ எல்லாம் யாருக்காகப் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. காவல்துறையினர் கதிராமங்கலம் என்றால் ஏதோ ஏளனமாக பார்க்கிறார்கள். 

குழாய் கதிராமங்கலம்

மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான ஜெயராமனிடம் பேசினோம்.“ இன்று காலை கதிராமங்கலத்திலிருந்து செல்லும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் 6 இடத்தில் கொப்பளித்து வெடித்திருக்கிறது. போராட்டத்தின்போது உலகத்தரத்தில் குழாய்கள் அமைக்கப்படுகிறது என பொய்யான உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறார்கள். உலகத்தரத்தில் போடப்பட்ட குழாய்கள் எப்படி வெடிக்கும்? சுற்றுவட்டார பகுதியிலிருந்து கொண்டுசெல்லப்படும் எண்ணெய் குழாய்கள் அனைத்தும் கதிராமங்கலம் வழியாகத்தான் கொண்டு செல்கிறார்கள். குடியிருக்கும் பகுதிகள், பள்ளி வளாகம் மற்றும் பொதுஇடங்களின் வழியாக கொண்டு செல்லும் குழாய்களை மாற்ற வேண்டுமென சொன்னோம். அதெல்லாம் ஒன்றும் ஆகாது, ஒன்றும் ஆகாது என்று சொன்னார்கள்  இப்போது குழாய் வெடித்துவிட்டது பொதுமக்கள் பீதியில் வாழ்ந்து வருகிறார்கள். சுற்றவட்டார பகுதியிலிருந்து வரும்பொதுமக்கள் போராட்டத்திற்கு வருபவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்திற்கு வந்து உத்தரவாதம் தரும்வரை நாங்கள் போராடுவோம்” என்று ஆவேசமானார் ஜெயராமன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close