Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்கள் கைகளில் கல்விச் சீர் கொடுத்து அனுப்பிய ஊர் மக்கள்! - அசத்தும் கரூர் பள்ளி

அரசுப் பள்ளி

'ரசாங்கப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைச் சேர்க்க கசந்து வடியும் மக்களும் இருக்கிறார்கள். ஆனால், தங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதோடு, அவர்களின் கைகளில் பள்ளிக்குத் தேவையான கல்விச் சீர்வரிசை பொருள்களைக் கொடுத்து அனுப்பும் ஊரும் தமிழ்நாட்டிதான் இருக்கிறது. கரூர் மாவட்டம், ஆண்டான்கோயில் கிழக்குக் கிராமத்தில்தான் அந்த அதிசயம். அந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வசதியாகத்தான் கல்விச்சீர் பொருள்களைக் கையோடு கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். பதிலுக்கு அந்தப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தனியார் பள்ளிக்கு இணையான சிறந்த கல்வியைத் தருவது, தொடுதிரையில் பாடம் நடத்துவது, மாதாமாதம் போட்டிகள் வைத்து மாணவர்களுக்கு பரிசளிப்பது, ஆறு மாதத்திற்கு ஒருதடவை இயற்கை உணவு திருவிழா நடத்தி மாணவர்களுக்கு நல்ல உணவு எது என்பதை அடையாளப்படுத்துவது என்று பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள்.

அரசுப் பள்ளி

நாம் இந்தப் பள்ளியைப் பற்றி கேள்விப்பட்டு, ஆச்சர்யத்தோடு அந்தப் பள்ளிக்கு சென்றோம். அன்றும் நாலைந்து மாணவர்கள் கல்விச்சீர் பொருள்களைக் கொண்டு வந்தார்கள். அதோடு, அன்றுதான் பாரம்பர்ய உணவுத் திருவிழாவும் நடைபெற்றது. அந்தப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர், மாணவியின் தாயும் நமது பாரம்பர்ய தானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு, ராகியில் செய்து எடுத்து வந்த சத்தான உணவுகளை ஒரு அறையில் பார்வைக்கு வைத்தனர். அவற்றை இரண்டு ஆசிரியர்கள் எல்லா மாணவ, மாணவிகளையும் அழைத்து, 'நாம் இப்போது சாப்பிடும் உணவில், தானியங்களில் எவ்வளவு விஷம் இருக்கிறது என்பதையும், இங்கே இருக்கும் நமது பாரம்பர்ய உணவுகளில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதையும் ஆர அமர விளக்கினர். 'உங்க வீடுகளில் இன்னமும் பல் கொட்டிப்போன தாத்தா,பாட்டிகள் இருக்கிறார்களா?. அப்படி இருந்தால், அவர்கள் இன்னமும் உயிர் வாழ இந்த உணவுகள்தான் காரணம். அதேபோல், உங்க பகுதிகளில் முப்பது, நாற்பது வயதுகளில் யாராவது இறந்து போகிறார்களா?. அதுக்குக் காரணம் நாம் இப்போதும் சாப்பிடும் விஷம் தோய்ந்த முறையற்ற உணவுகள்தான்' என்று ஆழமாகவும் விளக்க, வியப்பு மேலிட அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள் மாணவர்கள். 'இனி எந்த உணவை சாப்பிடுவீர்கள்?' என்று தலைமை ஆசிரியை சுமதி கேட்க,ஒட்டுமொத்த மாணவ குழாமும், 'பாரம்பரிய உணவைதான்' என்று கோரஸாக சொல்லியது.

அடுத்து, சீர்வரிசையைப் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்ட பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் அந்த உணவை ருசித்தனர். அதன்பிறகு, பெற்றோர்களுக்கு முன்பே மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சு, ஓவியம் வரைதல், பாட்டு, விளையாட்டு போட்டிகள், மாறுவேட போட்டி, நடனம் என்று பல்வேறு வகையான போட்டிகளை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியாக நடத்தினர். அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பெற்றோர்கள் கைகளாலேயே பேனா, பென்சில், சிந்தனையைத் தூண்டும் புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் என்று பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, மாலை ஆறு மணிபோல் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுக்கு வந்தன. அதுவரை, அவ்வளவு நிகழ்வுகளையும் வாய்பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்த நாம், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை தே.சுமதியிடம் ஆச்சர்யம் விலகாமல்,'எப்படி இப்படி?' என்று கேட்டோம். 

"நான் 2011ல் இந்தப் பள்ளிக்கு மாறுதலில் வந்தேன். நான் வந்தப்ப இந்தப் பள்ளியை இடித்து போட்டிருந்தார்கள். காரணம், இந்தப் பள்ளி சுமதி - அரசுப் பள்ளிகரூர் நகரத்தைத் தாண்டி பிரியும் கோவை, ஈரோடு ரோடுகளுக்கு இடையில் தீவுபோல் இருந்ததால், சாலை விரிவாக்கத்திற்காக ஒருபகுதியை இடித்து வைத்திருந்தனர். நான் வந்தப்புறம், போராடி பள்ளியைச் சீரமைத்தேன். குடிக்க நல்ல தண்ணீர், ஸ்பான்சர் மூலமாகக் கட்டடங்கள், ஸ்மார்ட் கிளாஸ்கள், கம்ப்யூட்டர் வசதி, ஒன்றிலிருந்து நான்காவது வகுப்பு வரை ஆங்கில மீடியம், மாணவர்களுக்குத் தரமான உடைகள், இங்குள்ள கரூர் வைஸ்யா மற்றும் கனரா வங்கிகளின் நிதி உதவியோடு கட்டடங்கள் என்று பள்ளியைத் தரம் உயர்த்தினோம். ஆறு ஆசிரியர்கள் மட்டுமே நான் வந்தப்ப இருந்தாங்க. அதுக்குப் பிறகு, கூடுதலாக ஒரு போஸ்டிங்கில் ஒரு ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமா இரண்டு ஆசிரியைகள்னு நியமிச்சோம். யோகா, ஹிந்தி கிளாஸ்களுக்குத் தனியாக ஆசிரியர்களைப் பயிற்சி கொடுக்க நியமிச்சோம். இப்படிப் பள்ளியைப் படிப்படியாக வளர்ச்சி நோக்கி கொண்டு போனதால், பல பெற்றோர்களும் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் பிள்ளைகளை டி,சி வாங்கி கொண்டு வந்து எங்க பள்ளியில் சேர்த்தனர். இதனால், நூறாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை இப்போ 225 ஆக உயர்ந்திருக்கு. அதுக்கு காரணம் எல்லோரும்தான். அப்புறம் வருஷாவருஷம் கரூர் மாவட்டத்திலேயே யாரும் செய்யாத அளவுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவு பண்ணி ஆண்டு விழா நடத்துறோம். 

இதெல்லாத்தையும்விட, மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் முக்கியம் இல்லை, அவங்களுக்கு தனித்திறமை முக்கியம். அதோட, நல்லா படிக்கிற புள்ளைக்குத் தனித்திறமை இருக்காது. தனித்திறமை உள்ள பிள்ளை நல்லா படிக்காது. அதனால், எல்லா மாணவர்களின் எல்லா திறன்களையும் வளர்க்கத்தான் மாதாமாதம் ஒருநாள் ஒதுக்கி எல்லா வகை போட்டிகளையும் நடத்தி, இப்படிப் பரிசுகள் வழங்குகிறோம். இதனால், படிக்கிற மாணவர்களுக்குப் படிப்புத் திறனும், தனித்திறமை கொண்ட மாணவர்களுக்குத் தனித்திறமைத் திறனும் மெருகேறி இருக்கு. அதேபோல், இப்போ பலருக்கும் சிறு வயதிலேயே பல நோய்களும் ஏற்படுது. அதுக்கு,தவறான உணவு பழக்கமும் ஒரு காரணம். அதனால்தான், ஆறு மாதத்திற்கு ஒருமுறை இயற்கை மற்றும் நமது பாரம்பர்ய தானியங்களில் செய்யப்பட்ட பாரம்பர்ய உணவுத் திருவிழாவை நடத்துகிறோம். அதில், பாரம்பர்ய உணவுகளின் நன்மைகளையும், இப்போ உள்ள பாஸ்ட்புட் உணவுகளின் தீமைகளைப் பற்றியும் அப்போது மாணவர்களுக்கு விளக்குகிறோம். இதனால், மாணவர்களுக்கு சிறு வயதிலேயே உணவு பற்றிய விழிப்புஉணர்வு ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம். அதேபோல், பெற்றோர்கள் கல்விச்சீர் கொடுத்த நல்ல காரியம் இந்த வருடம்தான் தொடங்கியிருக்கு.

நாங்க பள்ளியைச் சிறப்பாக மாற்றியதைத் தொடர்ந்து, பெற்றோர்களே முன்வந்து எங்களிடம் பேசி, எங்களால் இயன்ற காசை போட்டு கல்விச்சீர் வரிசை தர இருக்கிறோம்னு சொல்லி, தினமும் தங்களால் முடிஞ்ச பொருளை வாங்கி பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். இதுவரை ஐம்பதாயிரம் மதிப்புள்ள பொருள்கள் பள்ளிக்கு வந்திருக்கு. அனைத்து பெற்றோர்களும் அன்றாடங்காய்ச்சிகள் என்பதுதான் இதில் வியப்பான விஷயம். இதுபோல், நான், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்று அனைவரும்
காயத்ரிஒன்றுசேர்ந்து, எங்க மாணவர்களின் கல்வித்திறனையும், தனித்திறனையும், ஒழுக்கப் பண்புகளையும் அடுத்த லெவலுக்குக் கொண்டு போக பாடுபடுகிறோம். மாணவர்களும் அதற்கு வளைந்து கொடுக்கிறார்கள் என்பதுதான் இதில் முக்கியம்" என்றார் உற்சாகமாக!.

இந்தப் பள்ளியில் தனது மகள்களைப் படிக்க வைத்திருக்கும் காயத்ரி என்பவரிடம் பேசினோம்.  "நானும், என் கணவரும் ஒரு பழக்கடையில் வேலை பார்க்குறோம். கஷ்ட ஜீவனம்தான். இருந்தாலும், கடன உடன வாங்கி என் பெரிய மகள் கனிஷ்காவையும், இளைய மகள் ஜோஸ்னியையும் தனியார் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தோம். ஆனால், இந்த அரசாங்கப் பள்ளிக்கூடத்துல சிறப்பா கல்வி தந்ததால், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இங்க கொண்டு வந்து சேர்த்தோம். தனியார் பள்ளியில் படிச்சப்ப சுமாரா படிச்ச ரெண்டு பிள்ளைங்களும், இப்போ சூப்பரா படிக்கிறாங்க. அதனால்தான், ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பிள்ளைகள் மூலமா கல்விச்சீர் கொடுத்தோம். வருடாவருடம் கல்விச்சீர் கொடுக்கும் வைபோகம் இன்னும் விமர்சையா தொடரும்" என்றார் அரசுப் பள்ளியை மெச்சும் பெற்றோராக!. 

எல்லா அரசுப் பள்ளிகளும் இப்படி மாறிவிட்டால், ஏழை பெற்றோர்களின் ரத்தத்தை உறிஞ்சும் தனியார் பள்ளி 'அட்டை'களை ஒழித்துவிடலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close