வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (01/07/2017)

கடைசி தொடர்பு:08:58 (01/07/2017)

“நாடகம் போட்டு ஏமாற்றிவிட்டார்!” அருண் ஜெட்லி மீது பாயும் அரசு ஊழியர்கள்

ழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்கள் வீட்டு வாடகைப் படி உள்ளிட்டவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் படிகள் உயர்வு, ஜூலை 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

அருண் ஜெட்லி

“ஏற்கெனவே, வழங்கப்பட்டு வந்த வீட்டு வாடகைப்படியை, தற்போதைய சூழலுக்கு ஏற்ப உயர்த்தித் தருவதற்குப் பதிலாக, முன்பிருந்ததைக் காட்டிலும் குறைத்துவிட்டார்கள்” என்று குமுறுகிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள். இது தொடர்பாக, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைப்பாண்டியிடம் பேசினோம்.

“மத்திய அரசு ஊழியர்களுக்கு, 5-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி 1996-ல் இருந்து அடிப்படைச் சம்பளத்தில் 30 சதவிகிதம் என வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டது. 6-வது சம்பளக் கமிஷனிலும் (2006-ல் இருந்து) 30 சதவிகிதம் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள 7-வது சம்பளக் கமிஷனில் 24 சதவிகிதமாக வாடகைப் படியைக் குறைத்துவிட்டார்கள். ‘முந்தைய இரண்டு கமிஷன்களில் 30 சதவிகிதமாக இருந்ததை, 24 சதவிகிதமாகக் குறைத்தது நியாயமல்ல என்று ஆட்சேபித்தோம். சரி, உங்கள் கோரிக்கையை ஆராய்கிறோம் என்று சொல்லி ஒரு கமிட்டி அமைத்தார்கள். அந்த கமிட்டியால் ஏதாவது மாற்றம் வரும் பார்த்தால், கமிட்டி அமைத்து 18 மாதங்களுக்குப் பிறகு, அதே 24 சதவிகிதம்தான் என்று சொல்கிறார்கள். இதற்கு ஏன் 18 மாதங்கள்? ஏற்கெனவே பரிந்துரைத்தை மீண்டும் பரிந்துரைப்பதற்கு ஒரு கமிட்டி எதற்கு? கமிட்டி அமைத்து ஒரு நாடகம் போட்டு எங்களை ஏமாற்றியிருக்கிறார்கள். 18 மாதங்களைக் கடத்தியதன் மூலம், எங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய 44 ஆயிரம் கோடி ரூபாயை ‘மிச்சப்படுத்தி’யிருக்கிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்கள் தலைவர் துரைப்பாண்டியன்அடிப்படைச் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் வாங்கினால், அவர்களுக்கான வாடகைப் படி 5,400 ரூபாய்தான் கிடைக்கும். 22,500 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வாங்குபவர்களுக்கு 30 சதவிகிதம் என்று கணக்கிட்டால், கூடுதலாக படி கிடைக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கும் 5,400 ரூபாய்தான் என்று சொல்கிறார்கள். இது நியாயமே கிடையாது.

உலகில் எந்த நாட்டிலும் ஏன் இந்தியாவிலும்கூட எந்தத் துறையிலும் சம்பளம் ஒரு நாளைக்கும், அலவன்ஸ் இன்னொரு நாளைக்கும் என யாரும் கொடுப்பதில்லை. இப்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு, வேறு வேறு நாள்களில் சம்பளத்தையும், படிகளையும் வழங்கப்போவதாகச் சொல்கிறார்கள். இது அவர்களின் ஏதேச்சதிகாரப் போக்கையே காட்டுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் 44 சதவிகிதம் பேர், அரசுக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். எந்தப் பராமரிப்பும் இல்லாமல், மிக மோசமான நிலையில் இருக்கும் அந்த வீடுகள் 5,400 ரூபாய் வாடகைக்கான தகுதியிலும் இல்லை. மீதி 56 சதவிகிதம்தான் வீட்டு வாடகைப் படி வாங்குகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பெருநகரங்களில் வசிப்பவர்கள். சென்னை போன்ற நகரங்களில் 5,400 ரூபாய் வாடகைக்கு சிங்கிள் பெட்ரூம் வீடாவது கிடைக்குமா?

படிகளில் பெரிய உயர்வு எதுவும் இல்லை என்றபோதிலும், மருத்துவப் படியை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியிருப்பதும், சியாச்சின் போன்ற ஆபத்தான இடங்களில் பணியாற்றும் ராணுவத்தினருக்கான படிகளை உயர்த்தியிருப்பதும் வரவேற்கத்தக்கது” என்றார்.

ஆனாலும், வாடகைப் படியைக் குறைத்திருப்பதற்கு எப்படி எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது குறித்து அகில இந்திய அளவில் பேசி முடிவுசெய்யவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்