Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரனை வீழ்த்தப் போகும் ‘கடைசி ஆயுதம்’! - மதுரை விழாவும் மலைக்க வைக்கும் திட்டமும் #VikatanExclusive

எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் மூலம், அ.தி.மு.கவில் வலிமையான தலைவராக உருவெடுக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. ‘மதுரையைவிட மூன்று மடங்கு கூட்டத்தை திருப்பூரில் கூட்ட இருக்கிறார். சசிகலா குடும்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த இருக்கிறார்" என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 

‘அ.தி.மு.கவில் தினகரனின் தலைமையை ஏற்க வேண்டும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அவரை முன்னிறுத்த வேண்டும்' என்ற கோரிக்கைகளை, முதல்வர் பழனிசாமி ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இஃப்தார் விருந்து உள்பட அனைத்து விழாக்களிலும் தன்னை முன்னிலைப்படுத்தியே செயல்பட்டு வருகிறார். தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களிடம் பேசும்போதும், ‘உங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றால், நான் நினைத்தால்தான் முடியும். அந்தக் குடும்பம் சொல்வதால் எதுவும் நடந்துவிடாது. இப்போதைக்கு அமைச்சரவையை மாற்றும் எண்ணத்தில் நான் இல்லை' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இதன்பின்னர், தினகரனை சந்திக்கச் செல்லும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையும் குறைந்தது. ‘தினகரன் சொல்வதைக் கேட்டு ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால், மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா?’ என்ற அச்சத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்களும் ஒதுங்கிவிட்டனர். இருப்பினும், ‘கட்சியின் பிடி தனது கட்டுக்குள் வர வேண்டும் என்பதற்காக ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு அதிரடி நடவடிக்கையில் இறங்கப் போவதாகப் பேசியிருக்கிறார் தினகரன். 

தினகரன்இதற்குப் பதில் கொடுக்கும் கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், “ஆகஸ்ட் மாதம் மட்டுமல்ல. இன்னும் எத்தனை மாதங்கள் எடுத்துக் கொண்டாலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரனால் எந்த முடிவையும் செயல்படுத்த முடியாது. எம்எல்ஏ-க்களில் ஒரு சிலரைத் தவிர, அனைவரும் முதல்வர் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டனர். நேற்று மதுரை விழாவில் முதல்வர் காட்டிய பிரமாண்டம் தினகரனுக்கு மட்டுமல்ல, பன்னீர்செல்வத்துக்கும் சேர்த்தே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

வழி நெடுக கொடுக்கப்பட்ட வரவேற்புகளும் சிறு தெய்வ கோவிலுக்கு அவர் வருகை தந்ததும் அ.தி.மு.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நான் மட்டும்தான் அரசாங்கம்' என்பதை செயல் வடிவில் காட்டிவிட்டார் பழனிசாமி. பொதுவாக, முதல்வராக இருப்பவர்கள் மதுரை மாவட்டத்துக்கு வரும்போது, பெரும் தெய்வ கோவிலுக்குச் செல்வதுதான் வாடிக்கை. இதற்கு மாறாக, பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வழிபடும் சிறு தெய்வ கோவிலுக்கு அவர் வருகை தந்தது யாரும் எதிர்பாராதது. சாதாரண விவசாயக் குடிமக்களோடு தன்னை அடையாளப்படுத்தும் முயற்சிதான் இது.

அரசு விழாவில் பங்கேற்க ஜெயலலிதா செல்லும்போது கொடுக்கப்படும் அதே முளைப்பாரி வரவேற்பை பழனிசாமிக்கும் கொடுத்துள்ளனர். இதனை சசிகலா குடும்பத்தினர் ரசிக்கவில்லை" என்றவர், "நேற்று முதல்வர் பேசும்போது, ‘பேச்சைக் குறைத்துவிட்டு நாம் செயலில் இறங்க வேண்டும். நம்மை வெல்வதற்கு இன்னொரு இயக்கம் தமிழகத்தில் இல்லை. அண்ணாவின் பேச்சு, எம்.ஜி.ஆரின் வசீகரம், ஜெயலலிதாவின் உழைப்பு ஆகியவற்றைக் கட்சியின் மூவர்ணக் கொடியாகக் கருத வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சகிப்புத் தன்மையுடன் கட்சிப் பணியாற்ற வேண்டும்' என அறிவுறுத்தினார். 'அ.தி.மு.கவின் கொள்கைளை அடுத்து எடுத்துச் செல்லப்போவது நான்தான்' எனக் குறிப்பால் சுட்டிக் காட்டிவிட்டார். கூடவே, 'மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர், 60 ஆண்டு தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு' என மதுரை பன்னீர்செல்வம்மாவட்டத்துக்குக் கூடுதல் திட்டங்களையும் அறிவித்துவிட்டே சென்றார். 'முதல்வராக மக்கள் மனதில் நீடித்து நிற்க வேண்டும்' என நினைக்கிறார் பழனிசாமி. அதற்குக் கிடைத்த வாய்ப்பாகத்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் பார்க்கிறார்" என்றார் விரிவாக. 

“எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரன் தரப்பினருக்கும் நடந்து வரும் வார்த்தைப் போர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார் பன்னீர்செல்வம். 'இந்த ஆட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக பழனிசாமி பலம் பெற்றுவிடக் கூடாது' எனவும் அச்சப்படுகிறார். அதன் ஒருபகுதியாகத்தான், ‘பழனிசாமியும் ஸ்டாலினும் கூட்டு சேர்ந்துள்ளனர்' என்ற குற்றச்சாட்டை சுமத்தினார். முன்பு இதே குற்றச்சாட்டைத்தான் பன்னீர்செல்வம் மீது சசிகலா சுமத்தினார். இந்த ஆயுதத்தை எடுப்பதன் மூலம், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் மீண்டும் தனக்கான செல்வாக்கு உயரும் என நம்புகிறார். சசிகலா எதிர்ப்பையே மூலதனமாகக் கொண்டு பன்னீர்செல்வம் சென்ற பாதையில், புது உத்வேகத்தோடு பயணத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டார் பழனிசாமி. முதல்வரைப் பொறுத்தவரையில், சசிகலா அளவுக்குப் பன்னீர்செல்வத்தையும் எதிரியாகத்தான் பார்க்கிறார்.

இந்தநேரத்தில், தினகரன் விதித்துள்ள கெடு பற்றிக் கொங்கு மண்டல நிர்வாகிகள், முதல்வர் பழனிசாமியுடன் பேசியுள்ளனர். அப்போது நடந்த விவாதத்தில், ‘அந்த குடும்பத்துக்கு எதிராக எம்எல்ஏ-க்கள்தான் பேசுகின்றனர். நாம் எதுவும் பேசுவதில்லை. செயல் ஒன்றுதான் நம்மை நிலைநிறுத்தும். ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்பது தொண்டர்களின் நீண்டநாள் கோரிக்கை. அந்தக் கோரிக்கை அப்படியே நிலுவையில் இருக்கிறது. நமக்கு எதிராக சசிகலாவோ தினகரனோ சென்றால், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் விசாரணைக் கமிஷன் அமைப்போம். அப்போலோ மருத்துவமனையில் அப்போது இருந்த ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தையும் விசாரிக்கச் சொல்வோம். இதன்பிறகு, நம்மை எதிர்க்க ஒருவரும் இருக்க மாட்டார்கள்' எனப் பேசியுள்ளனர். ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு தினகரனின் நடவடிக்கையைப் பொறுத்தே, எடப்பாடி பழனிசாமியின் வேகம் இருக்கும்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close