Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலம் தாக்குதல் இந்தியக் கோட்பாட்டுக்கு எதிரானது..! சீமான் ஆவேசம்

அறவழியில் போராடும் மக்கள் மீது தடியடித் தாக்குதல் நடத்துவது இந்தியக் கோட்பாட்டுக்கே எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய் பதிப்பால் விவசாய நிலங்கள் முழுவதும் பாழ்பட்டு நிலத்தடி நீர்வளம் முழுதாக மாசுபட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியற்று நிற்கிற நிலையில் தங்கள் நிலத்தின் மீது நிகழ்த்தப்படும் இந்தச் சுரண்டலையும், அதிகார அத்துமீறலையும் கண்டித்து அறவழியில் போராடிய கதிராமங்கலம் மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது சகித்துக் கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும்.

இம்மண்ணும், நீரும் நாளைய தலைமுறைக்கானது எனும் இயற்கையின் இயங்கியலை உட்செரித்துக் கொண்ட மக்கள் அவற்றிற்கு ஒரு பங்கம் விளையும்போது அதற்கெதிராய் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் எனும் உலகநியதியின் பாற்பட்டு உலகம் முழுதும் நிகழும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் போலவே கதிராமங்கலத்திலும் மக்கள் தங்களது நிலமீட்புப் போரை முன்னெடுத்திருக்கிறார்கள்.  ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க் குழாய்க் கசிவினால் நிலத்தில் ஏற்பட்ட தீப்பிழம்பையும், நிறம் மாறி மாசடைந்த நீரின் தன்மையையும் கண்டு நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து அதற்கெதிராய் வெகுண்டெழுந்து உணர்வெழுச்சியோடு போராடிய கதிராமங்கலம் மக்களை அதிகார வலிமை கொண்டு அடக்கி ஆள முற்படுவது அரசப் பயங்கரவாத நடவடிக்கையாகும்.

ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையை எட்டிய நாடுகளுக்கு மத்தியில் அறவழியில் போராடி விடுதலை பெற்ற நாடாகப் போற்றப்படும் இந்நாட்டில், அறவழியில் போராடும் மக்கள் மீது தடியடித் தாக்குதல் தொடுக்கப்படுவது என்பது இந்தியாவின் அடிப்படைக் கோட்பாட்டுக்கே எதிரானது. மண்ணின் உரிமைக்காகப் போராடுவோரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதும், கொடுஞ்சட்டங்களின் கீழ் சிறையில் அடைப்பதும், அதிகாரத்திமிர் கொண்டு அச்சுறுத்துவதும், போராட்டக்காரர்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரிப்பதும், போராட்டங்களை வன்முறைக்களமாக்கி வெறியாட்டம் போடுவதும் என காவல் துறையினரின் அடக்குமுறைகள் நீள்கிறது.

இதன் உச்சமாக பாலியல் தொழில் செய்ததாக வழக்குப் போட்டு சிறைப்படுத்தி விடுவதாகக் கதிராமங்கலத்தில் போராடிய பெண்களைப் பகிரங்கமாக மிரட்டியிருக்கிறது. இது வாக்கு செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்கிற பச்சைத்துரோகமாகும். இந்நாடு ஏற்றிருக்கிற மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் ஜனநாயக விரோதமாகும். பா.ஜ.கவிடம் சரணாகதி அடைந்துவிட்ட அ.தி.மு.க அரசின் தொடர் மக்கள் விரோத ஆட்சியானது விரைவில் வீழ்ந்து தமிழரின் அறம்சார்ந்த ஆட்சி மீண்டும் மண்ணில் தழைத்தோங்கப்போவது திண்ணம். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசானது, வளர்ச்சி எனும் ஒற்றை மந்திரச் சொல்லைக் கொண்டு இயற்கையைச் சீரழித்திடும் அபாயகரமான திட்டங்கள் அத்தனையையும் தொடர்ச்சியாகத் தமிழர் மண்ணில் திணித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

எண்ணெய் வளத்திலும், எரிகாற்று(மீத்தேன்) வளத்திலும் உள்நாட்டிலே தன்னிறைவு பெறத் துடிக்கும் இந்தியப் பேரரசு, இந்திய மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு என்ன திட்டத்தை முன்வைத்திருக்கிறது எனும் எளிய கேள்விக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் என்ன பதிலுண்டு? உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்காற்றும் வேளாண்மையை அழித்துவிட்டு, வேளாண் நிலங்களைப் பிளந்து எரிகாற்று(மீத்தேன்) எடுத்துவிட்டு யாருக்கு வளர்ச்சியை அளிக்கப் போகிறார்கள்? புவி வெப்பமாதலைத் தடுக்கும்பொருட்டு பூமிக்கடியிலுள்ள வளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு மாற்று எரிபொருள் வளத்தை நோக்கி உலகம் முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் இயற்கைக்கு எதிரானதில்லையா? இயற்கைக்கு ஒவ்வாத நடவடிக்கைகள் மேற்கொண்டு அதனைச் சிதைத்து அழிப்பதுதான் இவர்கள் கூறும் வளர்ச்சியா? தேசப்பிதா காந்தியடிகளால் வேளாண் நாடு எனப் போற்றப்பட்ட இந்நாட்டில் வேளாண்மையை வளர்த்தெடுப்பதுதான் ஆகச் சிறந்த வளர்ச்சித் திட்டம் எனும் அறிவியல்பூர்வமான உண்மை நாட்டை ஆளும் கார்ப்பரேட் மூளைகளுக்கு உரைக்காமல் போனது ஏனோ எனும் தார்மீகக் கேள்விகள் இவ்விவகாரத்தில் மக்கள் மனங்களில் எழுகின்றன . 

இத்தகைய கட்சிகளின் நிலையை இனியாவது உணர்ந்து, காலம் காலமாகப் பிழையானவர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்து அடிமைபட்டுக் கிடக்கும் அடிமை மனநிலையிலிருந்து விடுபட ஒவ்வொருவரும் அமைதிப்புரட்சிக்கு ஆயத்தமாக வேண்டும். மண்ணின் மக்களின் உரிமைகளும், உணர்வுகளும் நசுக்கப்பட்டுக் கதிராமங்கலம் கிராமத்தை இன்னொரு காஷ்மீர் ஆக்க ஆட்சியாளர்கள் முயன்று வரும் வேளையில் ஜனநாயகத்தைப் பற்றி மண்ணின் மக்களுக்குப் பாடமெடுக்கும் ஜனநாயகப்பற்றாளர்கள் இந்த ஜனநாயக அத்துமீறல்கள் குறித்து வாய்திறக்க மறுப்பதும், களத்திற்குச் செல்லாது தவிர்ப்பதும் ஏன் என்று புரியவில்லை. ஆனால், மக்களுக்கான களத்தில் சமரசமற்று நிற்கும் நாம் தமிழர் கட்சியானது வழக்கம்போல கதிராமங்கலத்தில் நடந்தேறிய கொடுமைகளுக்கு எதிராகவும் களத்தில் நின்று வருகிறது.
 
ஆகையினால், நெடுவாசல், கதிராமங்கலம் எனத் தமிழர் நிலத்தின் மீது தொடுக்கப்படும் நாசாகாரத் திட்டங்கள் யாவற்றையும் திரும்பப்பெற வேண்டும் எனவும், கதிராமங்கலத்தில் மக்கள் மீது தடியடித் தாக்குதலை அரங்கேற்றிய காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடைபெறும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close