Published:Updated:

``சொத்துக்காக என் மகனே என் கையை உடைச்சிட்டான்!" - 94 வயதிலும் போராடும் அலமேலு பாட்டி

94 வயது அலமேலு பாட்டி
News
94 வயது அலமேலு பாட்டி

தன் அம்மாவுக்கு உரிமையான கோயில் சொத்துகளை தனக்கு உரிமையாக்கிக் கொடுக்க வேண்டும் என்று பாட்டியின் மூத்த மகன் 2017-ம் தேதி பொன்னேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை 2020 நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சென்னையை அடுத்த மீஞ்சூரில் வசித்து வரும் அலமேலு என்ற 94 வயது மூதாட்டிக்கு பலகோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தும் 5 மகன்களும், 3 மகள்களும் வீட்டைவிட்டு விரட்டியடித்ததால் கோயிலில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 2010-ம் ஆண்டு அலமேலுவின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இதன்பிறகு ஒருசில சொத்துகளை விற்று மகன், மகள்கள் ஆகியோருக்கு பங்கு பிரித்துக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மகன், மகள்கள் யாரும் அலமேலுவைக் கவனிக்கவில்லை. சொத்துகளை அபகரிக்கும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் என்று செய்தி பரவியது.

Old woman (Representational image)
Old woman (Representational image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து அந்தப் பாட்டியைத் தேடி மீஞ்சூர் பகுதிக்குச் சென்றோம். மீஞ்சூர் மார்கெட் அருகில், குறுகலான தெருவொன்றில் அவர் தங்கியிருப்பதாக அப்பகுதி மக்கள் வழிகாட்டினார்கள். பச்சை நிற பெயின்ட் அடிக்கப்பட்ட ஒரு வீட்டின் முன்னால் நின்று குரல் கொடுத்தோம். பாட்டியின் மருமகள் துர்காதேவிதான் நம்மை வரவேற்றார். ``அலமேலு பாட்டியைப் பார்க்கணும்!" என்றதும், நம்மைப் பற்றி விசாரித்த பின்னர் உள்ளே அனுமதித்தார். முன் அறையில் பழைய பாயில், பிங்க் நிற நைட்டி அணிந்தவாறு படுத்திருந்தார் பாட்டி. அவரின் மேல் ஒரு போர்வை போர்த்தப்பட்டிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்த நேரத்தில் அவருடைய கடைசி மகன் சிவக்குமாரும் வந்து சேர்ந்தார். ``எங்க அம்மாவுக்கு 5 பசங்க, 3 பொண்ணுங்கன்னு மொத்தம் 8 பிள்ளைங்க. எங்கம்மாவுக்கு சொத்தா ஒரு கடை, வீடு, குடோனும் இருக்கு. இதெல்லாம் கோயில் சொத்துன்றதால பரம்பரை பரம்பரையா அதைப் பயன்படுத்திக்கலாம். ஆனால், விக்க முடியாது. அதுல வர்ற பணத்தை வெச்சு எங்கம்மா வாழ்ந்துடலாம். ஆனா, என்னோட அண்ணன்கள் நாலு பேரும் அதிலருந்து வர்ற பணத்தை வாங்கிக்கிறாங்க. ஆனா, அம்மாவைக் கவனிக்கிறதில்லை.

 அலமேலு பாட்டி
அலமேலு பாட்டி

நானும் செங்கல், சிமென்ட் வாங்கிக் கொடுக்குற இடைத்தரகராதான் வேலை பார்க்குறேன். ஒருநாள் வேலை இருக்கும். இன்னொரு நாள் வேலை இருக்காது. ஒரு கட்டத்துல வறுமை ரொம்ப அதிகமாயிடுச்சு. குழந்தைங்களுக்குக்கூட சாப்பாடு கொடுக்க முடியல. குழந்தைங்க வயிறாவது நிறையட்டும்னு என் மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு குழந்தைங்ளை அழைச்சிட்டுப் போயிட்டா. கிட்டத்தட்ட மூணு வருஷம் வறுமையால பிரிஞ்சிருந்தோம். அந்த நேரத்துல எங்கம்மா பசியப் போக்குனது எங்கப் பகுதியில இருக்கிற சிவன்கோயில் அன்னதானம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தள்ளாத வயசுல அம்மா போய் அன்னதானம் வாங்கி சாப்பிடுவாங்க. எங்கம்மாவைப் பாக்குறவங்க தெரிஞ்சவங்க, அக்கம் பக்கத்துல உள்ளவங்க கையில அஞ்சு, பத்து கொடுத்துட்டுப் போவாங்க. அண்ணனுங்க அம்மாவை கவனிக்கவேயில்லை. வறுமையினால என்னால அம்மாவை வெச்சுப் பார்த்துக்க முடியலைன்னு என்கூடப் பொறந்த பொண்ணுங்ககிட்டயும் சொல்லிப் பார்த்தேன். அவங்களும் எங்கம்மாவைக் கூட வெச்சுக்கல. அப்பப்போ வந்து பார்த்துட்டு மட்டும் போவாங்க" என்பவரைத் தொடர்ந்தார் துர்கா தேவி.

 Old age couple  (Representational image)
Old age couple (Representational image)
Pixabay

``என் மாமியாருக்கு 94 வயசானதால பாத்ரூம் கூட்டிட்டுப் போக, சாப்பாடு கொடுக்கன்னு கூட ஆள் இருந்துட்டே இருக்கணும். சொத்துச் சண்டை நடந்துட்டே இருக்கிறதால எப்போ என்ன நடக்கும்னு தெரியல. அதனால இவங்களை தனியா விட்டுட்டு எங்கேயும் போறதில்ல. இவங்க இப்படி இருக்கிறதால என்னாலயும் குழந்தைங்களை இவங்ககிட்ட விட்டுட்டு வேலைக்குப் போக முடியல" என்பவர், எம்.பி.ஏ படித்திருந்தும் வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்.

தன் அம்மாவுக்கு உரிமையான கோயில் சொத்துகளை தனக்கு உரிமையாக்கிக் கொடுக்க வேண்டும் என்று பாட்டியின் மூத்த மகன் 2017-ம் தேதி பொன்னேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை 2020 நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

Court- Representational Image
Court- Representational Image
Image by succo from Pixabay

``அம்மா அடிக்கடி எழுந்து நடமாட முடியாதுன்றதால டயாப்பர்தான் பயன்டுத்துறோம். இதை வாங்கிக்கொடுக்கக்கூட சில நேரம் காசு இருக்காது. மாசத்துக்கு ஒருமுறை சத்து ஊசி போடணும். ஆனா மாசாமாசம் அழைச்சிட்டுப் போய் ஊசி போடுறதுக்கு எங்களுக்கு வசதியில்ல. கையில எப்போ காசு இருக்கோ அப்போதான் போட முடியுது. முன்னாடிக்கு இப்போ எங்க நிலைமை கொஞ்சம் பரவால்லனாலும், கழுத்த நெறிக்கிற அளவு கடன் இருக்கு" என்று வேதனையுடன் தெரிவித்தார் சிவக்குமார்.

இந்நிலையில்தான் தன் சொத்துகளை மகன்களிடமிருந்து மீட்டுக்கொடுக்கும்படி எஸ்.பி அலுவலகத்திலும் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திலும் பாட்டி புகாரளித்துள்ளார். புகாரளித்தும் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அலமேலு பாட்டி
அலமேலு பாட்டி

``பாட்டிகிட்ட பேசலாமா?" என்றோம். அவரிடம் நாம் வந்திருப்பதைத் தெரிவித்து, கைத்தாங்கலாக எழுந்து உட்கார வைத்தார். ஒட்டிய கன்னங்களுடனும், கலைந்த கேசத்துடனும் இருந்த பாட்டி, சுவரில் சாய்ந்தவாறே பேசத் தொடங்கினார். ``சாப்பிட்டியாம்மா?" என்று கேட்டுவிட்டுத்தான் பேசத் தொடங்கினார். "ஒருமுறை என் மூத்த பையன்கிட்ட சொத்தைக் கேட்டதுக்குதான் அடிச்சு கையை உடைச்சுட்டான். நாலு நாள் ஆஸ்பத்திரியில இருந்தேன். தையல் போட்டு அனுப்புச்சாங்க. என் பேர்ல இருக்குற கடை, குடோன், வீடை மட்டும் எனக்கு வாங்கிக்கொடுத்தா போதும்மா. மிச்சம் இருக்கிறத நாள் நான் நிம்மதியா வாழ்ந்திடுவேன்" என்றவர், எலும்பு முறிந்ததால் வளைந்து போயிருக்கும் தன் கையையும் காண்பித்தார். பாட்டிக்கு ஆறுதல் சொல்லிட்டு, அங்கிருந்து கிளம்பினோம்.