Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.நாவில் பேசப்பட்டது, எதிர்கட்சிகளால் எதிர்க்கப்பட்டது! - சத்துணவு எனும் சாகாவரம் பெற்ற திட்டம்!

சத்துணவுத் திட்டம்

திரைப்பட நடிகராகத் தன் வாழ்க்கையைத்துவக்கி தமிழகத்தின் முதல்வராக 10 ஆண்டு காலம் அசைக்க முடியாத சக்தியாக தமிழகத்தில் ஆட்சியை நடத்தியவர் எம்.ஜி.ஆர். அவரது நூற்றாண்டைக் கொண்டாடி வரும் இதே நாளில் அவரால் கொண்டு வரப்பட்ட சிறப்பானத் திட்டம் ஒன்று இன்று 35- வது ஆண்டினைத் தொட்டிருக்கிறது. அது சத்துணவுத் திட்டம்! 

படிக்கும் வயதில் மிகமோசமான வறுமைச் சூழலுக்கு ஆளானவர் எம்.ஜி.ஆர். இரண்டரை வயதில் அவர் தமிழகத்திற்கு வந்தபோது வறுமை அவரது குடும்பத்தை வாட்டியது. பல நாள்கள் இரவு உண்ண உணவின்றி ஈரத்துணியை வயிற்றில் கட்டியபடி தாய் சக்கரபாணி தமையனார் எம்.ஜி.சக்கரபாணியுடன் அவர் உறங்கியது உண்டு. ஆனந்தவிகடனில் 1971- ஆம் ஆண்டு அவர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற தொடரில் பதிவு செய்திருக்கிறார். வறுமையால் பள்ளிப் படிப்பைக் கூட முழுமையாகப் பயில முடியாமல் தவித்தவர் எம்.ஜி.ஆர். பள்ளிக் கூடம் சென்ற நாள்களிலும் பல நாள்கள் பட்டினியுடனே கழித்திருக்கிறார். அந்தப் பாதிப்பின் வெளிப்பாடாகவே அவரது ஆட்சிக் காலத்தில் அமலாக்கப்பட்டது சத்துணவுத் திட்டம். காமராஜர் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் இடையில் நின்று போனது. இந்நிலையில் 2-ம் முறை தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்றார். அந்த ஆட்சிக் காலத்தில்தான் ஏழைப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். 

5 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடங்களிலும், 2 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்குக் குழந்தைகள் நல்வாழ்வு நிலையங்களிலும் சத்துணவு வழங்கப்படும் என எம்.ஜி.ஆர் அறிவித்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், அரங்கநாயகம், கோமதி சீனிவாசன், மேலவை உறுப்பினர்கள் ஜி.சாமிநாதன், தாரா செரியன் மற்றும் சென்னை நகர செரீப் சிவந்தி ஆதித்தன், டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், டாக்டர் அறம், தலைமைச் செயலாளர், பல்வேறு துறை செயலாளர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. 

தமிழக பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 60 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் எனவும் 17 ஆயிரம் சமூக நல மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளின் பசி போக்கும் இந்தத் திட்டத்தினை 1982-ம் ஆண்டு ஜூலை முதல் தேதி திருச்சி அருகே உள்ள பாப்பாகுறிச்சியில் எம்.ஜி.ஆர் துவக்கி வைத்தார். வரிசையாக அமர்ந்திருந்த 2 ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்குச் சாம்பார் சாதம், கீரை, பாயாசம், வாழைப்பழம் ஆகியவற்றைத் தன் கையால் பரிமாறிய எம்.ஜி.ஆரும் அப்போது குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். அங்கு சிவந்தி ஆதித்தனால் நன்கொடை மூலம் கட்டப்பட்ட சத்துணவு கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய எம்.ஜி.ஆர், சத்துணவுத் திட்டம் பற்றி உரையாற்றிய சக்திவேல் என்ற 6 வயது சிறுவனுக்குப் பேனா வழங்கினார். 

சத்துணவுத் திட்டம்

சத்துணவுத் திட்டத்தினை எம்.ஜி.ஆர் துவக்கி வைத்த அதே வேளையில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த மகத்தான திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டுகோள் விடுத்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆர் உரையாற்றினார். ஜெயலலிதா தனது தாயார் வேதா ஜெயராம் பெயரில் சத்துணவுக் கூடம் அமைக்க ரூ.40 ஆயிரம் நன்கொடை வழங்கினார். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிராமத்தில் சத்துணவுக் கூடம் இன்றும் இயங்கி வருகிறது. சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்ததால் 'சத்துணவு தந்த சரித்திர நாயகன்' என்ற பட்டத்தை மக்கள் எம்.ஜி.ஆருக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். 

சத்துணவுத்திட்டத்தை இன்று சிலாகித்துப் பேசினாலும் எம்.ஜி.ஆர் அதை அமல்படுத்தியசமயம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார். அன்றைய எதிர்கட்சியான திமுக அந்தத் திட்டத்தை பிச்சைக்கார திட்டம் என வர்ணித்தது. எம்.ஜி.ஆர் குழந்தைகளைப் பிச்சைக்காரர்களாக்குகிறார். பெற்ற பிள்ளைக்குச் சோறு போட பெற்றவர்களால் முடியாதா...” என விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி. 

அத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் சத்துணவுத்திட்டத்தை அவர் கைவிட விரும்பவில்லை. சத்துணவுத்திட்டத்துக்கு ஆகிற செலவு வருமானமில்லாத அதிகப்படியான செலவு என ஓர் ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைக் கூட்டம் முடிந்தபின் வறுத்தெடுத்தார் எம்.ஜி.ஆர். என்ன செலவானாலும் சத்துணவுத்திட்டத்தைக் கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக நின்றார் அவர். அடுத்த சில வருடங்களில் அதன் அருமையை உணர்ந்தனர் தமிழக மக்கள். பள்ளிகளில் சேர்க்கை விகிதம் உயர்ந்தது. எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுகள் குவிந்தன. 

ஐ.நா நிறுவனம், சத்துணவுத்திட்டத்தின் செயல்பாட்டை அறிந்து அதுபற்றிய விரிவான அறிக்கையை தமிழக அரசிடமிருந்து கேட்டுப்பெற்றதோடு தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுத் தெரிவித்தது. அந்த வருடத்தில் நடந்த ஐ.நா சபையின் ஒரு கூட்டத்தில் தமிழகம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட வரைவு, சத்துணவுத்திட்டம் பற்றியது. அதில் கலந்துகொள்ள தனது அமைச்சரவையிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பிவைத்தார் எம்.ஜி.ஆர். 

பல லட்சம் குழந்தைகளைப் பள்ளிக்கூட வாசலைத் தொட வைத்த இந்த மகத்தான திட்டம் 35 ஆண்டுகளாகத் தொய்வின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொலை நோக்கு திட்டத்தைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரின் புகழும் அவர் மறைந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னும் மங்காது உள்ளது.

சத்துணவுத்திட்டத்திற்கு தமிழக அரசியலில் இன்னொரு பெருமையும் உண்டு. ஒரு கட்சி தன் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரும் திட்டத்தை, அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி மூடுவிழா நடத்துவது என்பது தமிழக அரசியலில் இன்றுவரை தொடர்ந்துவரும் சாபக்கேடான ஒரு விஷயம். இதில் கடந்த 35 ஆண்டுகளாக மூடுவிழா நடத்தப்படாமல் அடுத்துவரும் ஆட்சியாளர்களாலும் நிதி ஒதுக்கப்பட்டு மேம்படுத்துப்பட்ட ஒரே திட்டம் என்ற பெருமை சத்துணவுத்திட்டத்துக்கு மட்டுமே உண்டு. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close