வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (01/07/2017)

கடைசி தொடர்பு:18:19 (01/07/2017)

 ⁠⁠⁠ராஜயோகம் தரும் ராகு பகவான் - தோஷங்களும் பரிகாரங்களும்! #Astrology

``யோகக்காரகன் என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல்’’ என்கிறார் ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன். கூடவே, ராகு தோஷமும் அதற்குரிய பரிகாரங்களும் என்னென்ன என்பதையும் விளக்குகிறார்.

ராகு

மண்ணுலகில் பிறந்த மனிதர்களனைவரும் செல்வச் செழிப்புடன் வாழவே விரும்புகிறோம். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே அப்படி செல்வத்துடனும் செல்வாக்குடனும் வாழும் வாழ்க்கை கிடைக்கிறது. கடைக்கோடி நிலையில் இருந்தவர்கள் திடீரென வேகமாக முன்னேற்றம் அடைவதைக் காண்கிறோம். அதற்குக் காரணம் என்னவென்று ஆய்வுசெய்து பார்த்தால், அவர்களின் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரகம் வலுப்பெற்று, அவருடைய தசாபுக்தி நடைபெறும்போது முன்னேற்றம் ஏற்படும். ஆனால், ஒரு சிலருக்கு திடீரென அவர்கள் நினைத்துப் பார்த்திடாதபடி ராஜயோகம் அமையப்பெறுவதையும் காணலாம். `வித்யாதரன்யோகக்காரகன்’ என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல். 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து, அமுதம் எடுத்து, அதை உண்டபோது, தேவர்களுக்கு மத்தியில்,  ராகு எவரும் அறியாதவாறு தேவர்போல வேடந்தரித்து, அமுதத்தை அருந்தச் சென்றார். அப்படி அவர்  அமுதத்தை அருந்தும் நேரத்தில் சூரியன், சந்திரனால் கண்டுபிடிக்கப்பட்டார். 'அமுதம்' பரிமாறிக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, மிகவும் சினமுற்று தமது சக்கரத்தினால் அவரது சிரத்தைக் கொய்துவிட்டார். எனவே, அவரது உடல் தலை வேறு,  உடல் வேறு என இரண்டு துண்டுகளாக ஆகிப்போனது.

ஆனால், அமுது உண்டதால் இறவா வரம் பெற்ற ராகு, மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரியலானார். உடனே, மகாவிஷ்ணு அவர் முன் தோன்றி, ராகுவின் தவத்தைப் புகழ்ந்து, நவ கோள்களில் ஒருவனாக மனிதனின் சிரசும் (தலை), பாம்பின் உடலுடன் கருமை நிறம் கொண்டவராக இருந்து அருள்புரிய ஆணையிட்டார்.  மேலும், தென்மேற்கு திசைக்கு அதிபதியாக, கிரகங்களில் பெண் கிரகமாகவும், நிறங்களில் கருமை நிறமாகவும் வடிவத்தில் உயரமானவனாகவும், கிரக அவயங்களில் தொடை, பாதம், கணுக்காலுக்கு உரியவராகவும், உலோகப் பொருளில் கருங்கல்லாகவும் இருக்கும் ராகுதான் அந்நிய பாஷை களுக்கும் காரகத்துவம் பெறுகிறார்.

நவக்கிரகம்

ரத்தினங்களில் கோமேதகத்துக்கும், வஸ்திரங்களில் கருமை நிறத்துக்கும், வாகனங்களில் ஆடாகவும், சமித்தில் அருகாகவும், சுவையில் புளிப்பாகவும், உளுந்து அன்னத்தில் விருப்பம் கொண்டவராகவும், பஞ்ச பூதங்களில் ஆகாய கிரகமாகவும், நாடியில் பித்த நாடி உடையவராகவும் திகழ்கிறார்.

இவரின் அதிதேவதைகள் காளி, துர்கை, கருமாரியம்மன். குணங்களில் 'தாமஸ குணம்' கொண்டவராகவும், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.

ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிக்கிறார். இவரது தசாபுக்தி 18 ஆண்டுகளாகும். ‘ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை... ராகுவைப் போல் கெடுப்பவரும் இல்லை’ என்று இவ்வுலகம் புகழ்ந்து போற்றும்படியாகச் செயல்படுபவர் ராகு மட்டுமே.
சாயா கிரகமான ராகு அனைத்து ஜீவராசிகளிலும் அருளாட்சி புரிந்துவருகிறார். எனினும், மானிடர்களாகிய நமக்கு அவரவர் லக்னப்படி சில இடங்களில் சாதாரண பலன்களும், சில இடங்களில் மிகப் பிரபலமான ராஜயோகத்தையும் அள்ளித் தருகிறார்.

* லக்னத்தில் ராகு இருந்தால், ஜாதகர் தேகபலன் உடையவராகவும், பிடிவாத குணம் கொண்டவராகவும்,  வறட்டு வேதாந்தம் பேசுபவராகவும் இருப்பார்.
*  2-ம் இடத்தில் இருந்தால், முன்கோபம் கொண்டவர். சுடுசொல் சொல்பவராக இருப்பார். ஆடம்பரச் செலவு செய்வதில் ஆர்வம் இருக்கும். தனக்கு சரியெனப் படுவதை மட்டுமே செய்வார். 
 * 3 - ம் இடத்தில் இருந்தால், சகோதரி உடல் நலியும். அகால போஜனமும் ஏற்படும். சதா பிரயாணமும் செய்பவராக ஜாதகர் இருப்பார். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.
* 4 - ம் இடத்தில் இருந்தால், தாயாருக்கு  உடல் நலிவு ஏற்படும். அகால போஜனமும் சதா பிரயாணமும் செய்பவர். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.

காளஹஸ்தி

 * 5 - ம் இடத்தில் இருந்தால், புத்திரத் தடைகளும், தோஷமும் உண்டு.  பூர்வ புண்ணியத்தில் தடை இருக்கும்.
 * 6 - ம் இடத்தில் இருந்தால், நல்லறமான இல்லறம், செல்வம் செல்வாக்கு, தீர்க்காயுள் உண்டு.  
* 7 - ம் இடத்தில் இருந்தால், திருமணத்தடை, கலப்பு மணம், வீண் பழிச்சொல் ஏற்படும். திடீர் யோகமும் உண்டு.
 * 8 - ம் இடத்தில் இருந்தால், கடின மனம் கொண்டவராக இருப்பார். ஆயுள் விருத்தி உண்டு. 
 * 9 - ம் இடத்தில் இருந்தால், தந்தைக்கு நஷ்டம் ஏற்படும். பிதுர் சொத்துக்களில் வில்லங்கம் உண்டாகும். ஆனாலும், ஜாதகருக்கு பூமி, பொருள் சேர்க்கை உண்டு.
 * 10 - ம் இடத்தில் இருந்தால், கோடீஸ்வரர். பெண்கள் மூலம் பொருள் சேரும். நவரத்தினங்கள் சேரும். யோகமான வாழ்வு ஏற்படும். வெளிநாடு செல்வார். 
 * 11 - ம் இடத்தில் இருந்தால், பிதுர் தோஷம் உண்டு. ஜாதகருக்கு திடீர் தனவரவு உண்டு. அசையா சொத்துக்களான நிலத்தின் மூலம் யோகம் கிடைக்கும். 
* 12 - ம் இடத்தில் இருந்தால் தூக்கம் கெடும். சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதிகச் செலவுகள் செய்பவர். சர்ப்ப தோஷமும் உண்டு.
இவரது வீடான கன்னியில் ஆட்சியுடனும், விருச்சிகத்தில் உச்சமாகவும் இருப்பார். ராகு பகவான் பலன் தரக்கூடிய இடங்களாவன. கேந்திரஸ்தானங்களான 1, 4, 7, 10 -ம் இடங்களிலோ திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 -ம் இடங்களிலோ சுபக் கிரகங்களுடன் சேர்ந்தோ, சுபக்கிரகங்களால் பார்வையைப் பெற்று இருந்தாலோ, அவரது தசா புக்தி காலங்களில் திடீர் யோகம் ஏற்பட்டு ஜாதகர் பெரும் செல்வந்தராவார்.

கிரகங்கள்


ஜாதகத்தில்  லக்னம் மற்றும் ராசி ஆகிய இடங்களிலிருந்து 2,4, 5, 7, 8, 12-ம் இடங்களில் இருப்பது  நாகதோஷமாகும். நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும். 
திருமணத்தின் போது எத்தகைய ஜாதகங்களைச் சேர்க்கலாம்?
* ஜாதகத்தில் ஆண் பெண் இருவருக்கும் நாக தோஷம் இருந்தால், அத்தகைய ஜாதகங்களைச் சேர்க்கலாம்.
 * ஒருவருக்கு  ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது. 
* ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்குமானால் அத்தகைய அமைப்புள்ள ஜாதகத்தை சேர்க்கலாம்.
அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது தசை ஜன்ம நட்சத்திர தசையாக வருவதால் இவர்களுக்கு பாதிப்பு கிடையாது.

திருமணம்

* திருவாதிரை சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரங்களும் ஜன்ம நட்சத்திரமாக இருந்தால், தோஷமாகாது. 
ராகு தோஷமுள்ளவர்கள், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று பரிகார பூஜை செய்து வரலாம். ராகு காயத்ரி மந்திரத்தை காலை மாலை வேளைகளில் சொல்லி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
 ராகு காயத்ரி மந்திரம்:
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம அஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்