Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலைமறைவு டி.எஸ்.பி. எங்கே? சிலைகடத்தலில் சிக்கப் போகும் போலீஸ் அதிகாரிகள் ?

சிலை கடத்தல்

வேலியே பயிரை மேய்ந்தது என்ற வரிகளுக்கு ஏற்ப சிலைகடத்தல் தடுப்புப் பிரிவின் டி.எஸ்.பி.யே, சிலை கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இடம் பிடித்துள்ளதுதான் கடந்த சில நாள்களாக ஹாட் டாபிக். இது தொடர்பாக உரிய, புலன்விசாரணை நடத்தக் கோரி , வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், கோர்ட்டுக்குப் போயிருக்கிறார். தன்னுடைய காரில் வைக்கப் பட்ட ஒரு கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு புலன் விசாரணையில் இறங்கியதாகக் குறிப்பிடுகிறார், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன். கடிதத்தில் இருந்த விஷயம் இதுதான்... "விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டைக்குப் பக்கத்தில் ஆளடிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆரோக்கியராஜ், வயலில் உழுதபோது, 6 பஞ்சலோகச் சிலைகள்  கிடைத்துள்ளன. சிலைகளைக் கிராம நிர்வாக அதிகாரியிடம்  ஒப்படைக்காமல், நண்பர் சந்தானத்துடன் கூட்டணி அமைத்து, வெளிநாட்டிற்கு விற்க இவர்கள் முடிவு செய்தனர். பஞ்சலோக சிலைகளின் மதிப்பு இருபது கோடி ரூபாய். இதுகுறித்து சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் பாட்ஷாக்குத் தகவல்போக, அவர் அந்த கிராமத்துக்குத் தலைமைக் காவலர் சுப்புராஜ் மற்றும் போலீசுடன் போய் சிலைகளைப் பறிமுதல் செய்கிறார். போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  சிலைகள் இப்போது யாரிடம் இருக்கிறது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.  'நீங்களாவது இதைக் கேளுங்களேன்' என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி அசோக் நடராஜனிடம் அளிக்கப்பட்ட புகார் மீதும் நடவடிக்கை இல்லை. சிலைகளைக் கண்டுபிடிக்கவும், சிலைகடத்தலுக்குத் துணைபோன போலீஸ் அதிகாரிகளுக்குத் தண்டனை வாங்கித் தரவும் உதவுங்கள் !" இவ்வாறு போகிறது அந்தக் கடிதம்.ஒருநாட்டை முற்றிலும் சீரழிக்க  அந்த நாட்டின் கல்வி, கலாச்சாரத்தை மட்டும் அழித்து விட்டால் போதும்  என்பார்கள். அப்படியொரு வேலையில்தான் இந்தியாவில் உலகளாவிய அமைப்புகள் பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள புராதன சிலைகளில் நவபாஷாண, பஞ்சலோகம் போன்ற மருத்துவ சேர்க்கைகள், கதிர்வீச்சு  மகத்துவங்கள் என்று பல அம்சங்கள் உள்ளதாக நம்பிக்கை உள்ளதும் சிலைகடத்தலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. 

சிலை கடத்தல்

திருத்துறைப்பூண்டி கோயிலில் 2008- ல் கொள்ளையடிக்கப்பட்ட மரகதலிங்கம்தான் கடந்த பத்தாண்டுகளில் அதிகபட்ச விலைக்கு பேசப்பட்டு 50கோடி ரூபாய்க்கு அட்வான்சு மட்டுமே கொடுக்கப்பட்ட மரகதலிங்கம் ஆகும். இந்த இடத்தில் சின்னதாக ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு முன் கதைக்குப் போய் திரும்பினால் பல சுவாரஸியமும், அதிர்ச்சியும் காத்திருக்கின்றன. திருத்துறைப் பூண்டி கோயில் மரகதலிங்கம் கொள்ளை போனபோது, சிலைகடத்தல் தடுப்புப் பிரிவுக்குக் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவர் திலகவதி. ஐ.ஜி. யாக இருந்தவர் ராஜேந்திரன். இந்த சிலைகடத்தல் குறித்த விசாரணை அப்போதைய டி.எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் காதர் பாட்சாவை உடன் வைத்துக் கொண்டே  நடந்தது. இன்ஸ்பெக்டர் காதர் பாட்சாவோ, சுப்புராஜ் என்ற ஏட்டுவை உடன் வைத்துக் கொண்டார்.  பல ரெய்டுகளுக்கு இன்ஸ்பெக்டர் காதர்பாட்ஷாவும், ஏட்டு சுப்புராஜூ வும் ஒன்றாகவே போய் வந்தனர். அப்போது, சிலைகடத்தல் குறித்து பேட்டியளித்த போலீஸ் அதிகாரிகள், " தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்  சிலைகடத்தல் தொடர்பாகத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்கள். அத்தோடு இந்த விவகாரம் அமைதியானது. ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போது ஏட்டுவாக இருந்த சுப்புராஜ், இப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும், இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்ஷா உதவி கமிஷனராகவும், சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு அல்லாத வேறு பிரிவில் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். இன்னமும் தொழில் ரீதியிலான 'சிலை' உறவில் இவர்களின் கூட்டணி சிதையாமல் இருந்து வருகிறதாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், போட்ட வழக்கும் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, காதர்பாட்ஷா, சுப்புராஜ் பெயர்கள் அங்கே உச்சரிக்கப்பட்டன. சின்ன ஆபீசர் என்பதால் சுப்புராஜ் மீது உடனடியாகவே உயரதிகாரிகள் நடவடிக்கை  எடுத்துவிட்டனர்.

காதர்பாட்ஷா இப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக இருக்கிறார். காதர்பாட்ஷா குறித்து கோர்ட்டின் கேள்விக்குப் பதிலளித்த போலீசும், அரசுத்தரப்பு வழக்கறிஞரும், 'காதர்பாட்ஷா மருத்துவ விடுப்பில் இருக்கிறார்' என்று சொல்லியுள்ளனர். பதிலுக்குக் கோர்ட்டும் இந்த விவகாரத்தில், "குற்றஞ்சாட்டப் பட்டிருக்கும் போலீஸ் உதவி கமிஷனரை இன்னமும் ஏன் கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள் "? என்று கேள்வி எழுப்பியுள்ளது. அதேவேளையில் மருத்துவ விடுப்பில் போன காதர்பாட்ஷா குறித்து எந்தத் தகவலும் போலீசுக்கே கிடைக்கவில்லை. 'டி.எஸ்.பி .காதர்பாட்ஷாவின் தலைமறைவு என்பது திட்டமிட்டு நடந்த ஒன்று' என்கிறார்கள் அதே போலீஸ் ஏரியாவில். சிலை விவகாரம் வெடிப்பதற்கு சில நாள்கள் முன்னரே டி.எஸ்.பி காதர்பாட்ஷா  மருத்துவ விடுப்பில் போய் விட்டதாகவும், அவருக்குச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஒவ்வொரு நகர்வும் இன்றளவும் கிடைத்து விடும் என்றும் போலீஸ் ஏரியாவில் சொல்கிறார்கள். தலைமறைவாக இருக்கும் போலீஸ் டி.எஸ்.பி. காதர்பாட்ஷா போலீசில் பிடிபடாமல் நீதிமன்றத்தில் போய் சரண் அடையவே வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. டி.எஸ்.பி. காதர்பாட்ஷா விடம்  உரிய விசாரணை நடத்தப் பட்டால், பல போலீஸ் அதிகாரிகள்   சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close