வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (03/07/2017)

கடைசி தொடர்பு:14:06 (04/07/2017)

“அ.தி.மு.க-வில், செல்வாக்கு பெற்ற தலைவர் யாருமில்லை!” - வானதி சீனிவாசன்

மிழக ஆட்சியில் தலையீடு, ஜி.எஸ்.டி வரி விவகாரம், ஊடக சர்ச்சை.... என எப்போதும் தலைப்புச் செய்திகளிலேயே இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது மத்திய பி.ஜே.பி அரசு! அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் நமது கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுப் பேசினோம்...

“தமிழக அ.தி.மு.க ஆட்சி, மத்திய பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறுகிறாரே....?”

“நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் ஏற்கெனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எங்கள் மீது சொல்லியிருக்கிறார்கள். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நுண்ணிய எல்லைக்கோடு ஒன்று இருக்கிறது. மக்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதில், இரண்டு அரசுகளும் நல்லதொரு புரிதலுடன் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படவேண்டும்.

வானதி சீனிவாசன்

'தமிழகத்தின் வளர்ச்சி என்பது இந்தியாவின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கினால், இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்' என்று பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்திருந்தபோது கூறினார். எனவே, இங்கே எந்த ஒரு அரசாங்கம் இருந்தாலும் ஒத்துழைப்பு கொடுத்து, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முனைகிறோம். 

அ.தி.மு.க-வில் மக்கள் செல்வாக்குப் பெற்ற அல்லது கட்சி செல்வாக்குப் பெற்ற ஒரு தலைவர் இன்று இல்லை. அதனால், அவர்கள் அடிபணிந்து கிடப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. உண்மையில், தமிழக ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களோடு இணைந்து நலத்திட்டங்களைச் செயல்படுத்தத்தான் மத்திய அரசு முனைகிறது!''

“வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் தலைமைச்செயலாளர் மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டாரே.... அவர் குற்றமற்றவராகிவிட்டாரா... என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளாரே...?''

''சந்தேகப்படும் நபர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. அதுசம்பந்தமான ஆவணங்களைச் சோதனை செய்து கண்டுபிடிக்கிறார்கள். இதில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களைக் கொண்டு வழக்குத் தொடர முகாந்திரம் உள்ளதா, குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமா அல்லது அமலாக்கத்துறையின் கீழ் ஒப்படைக்க வேண்டுமா என்பதையெல்லாம் சம்பந்தப்பட்ட அமைப்புகளோடு விவாதித்துதான் முடிவு எடுக்க முடியும். ஆனால், நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரிக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் மறுபடியும் பணி கொடுத்தாக வேண்டும் என்பதுதான் சட்ட விதி. எனவே, சோதனை நடத்தப்பட்டுவிட்டதாலேயே ஒருவரைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட வேண்டும் என்று சொல்ல முடியாது.''

“டி.டி.வி தினகரன் அணியினர் திடீரென ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதன் பின்னணியில் மத்திய பி.ஜே.பி அரசின் மிரட்டல் உள்ளதாகப் பேசப்படுகிறதே...?''

“ஒருமனதாக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முடிவு இல்லை எனக் காங்கிரஸ் அறிவித்துவிட்டது. அதன்பிறகு, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளராக மீரா குமார் முன்னிறுத்தப்பட்டார். எனவே, டி.டி.வி தினகரன் அணியினருக்கு இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டும். இல்லையெனில், வாக்களிக்காமல் விலகி நிற்க வேண்டும். ஏனெனில், தி.மு.க ஆதரிக்கும் வேட்பாளரை இவர்களால் ஆதரிக்கமுடியாது அல்லவா? அதனால், அ.தி.மு.க-வின் அனைத்து அணிகளும் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கின்றன. மற்றபடி, தினகரன் மிரட்டப்பட்டாரா அல்லது ஆசை வார்த்தைகள் ஏதேனும் கூறப்பட்டதா என்பதையெல்லாம் நீங்கள் அவரிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.''

தினகரன்

“தலைமைச் செயலகத்தில் புகுந்து வருமானவரித்துறை சோதனை, தமிழக ஆட்சியாளர்களுடன் வெங்கய்ய நாயுடு ஆலோசனை.... எனத் தொடர்ச்சியாக மத்திய பி.ஜே.பி அரசு தமிழக அரசியலில், ஆதிக்கம் செலுத்திவருவது உண்மைதானே...?''

''சட்டவிதிகளுக்கு உட்பட்டுத்தான் வருமான வரிச்சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அடுத்ததாக, மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது. அது இங்கே எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிப்பதற்கான முழு உரிமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. ஏற்கெனவே இதுகுறித்து வெங்கய்ய நாயுடுவே பதில் கூறிவிட்டார். அதாவது, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளோடு வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே இது ஒன்றும் முதல் முறையல்ல. நான் ஏற்கெனவே சொன்னதுபோல், எதிர்த்தரப்பில் பலமான தலைமை இல்லாதது, எங்கள் கை ஓங்கியிருப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது அவ்வளவுதான்!''

“என்.டி.டி.வி மீதான தாக்குதல், நியூஸ் 7 சேனல் விவாத சர்ச்சை... என ஊடகத்தையும் தனது கட்டுக்குள் கொண்டுவர நிர்பந்திக்கிறதா பி.ஜே.பி?''

“அப்படி எந்த நிர்பந்தத்தையும் பி.ஜே.பி செய்யவில்லை. ஊடக நிர்வாகத்தில், நிதி முறைகேடு, சட்ட விதிமீறல் இருக்கும் பட்சத்தில், ஊடகம் என்பதாலேயே அரசு தயவு காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. அந்தவகையில்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவேளை இது தவறு என்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் கருதுமேயானால், உரிய ஆவணங்களோடு அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். 
நியூஸ் 7 தொலைக்காட்சி விவாத சர்ச்சை பற்றி தமிழக பி.ஜே.பி-யின் அதிகாரபூர்வ அறிவிப்போ அல்லது இதுகுறித்து யாரிடமும் தொடர்புகொண்டு பேசியதாகவோ எந்தச் செய்தியும் இல்லை. அப்படி, கட்சி ஏதேனும் செய்திகளை வெளியிட்டால் மட்டுமே இதுபற்றி மேற்கொண்டு நான் பேசமுடியும்.''

ஜி.எஸ்.டி.

“ஜி.எஸ்.டி குறித்த விளக்க கருத்தரங்கில், 'மக்கள்தானே வரி செலுத்தப் போகிறார்கள். உங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லையே' என்று வணிகர்கள் மத்தியில் பேசியிருக்கிறாரே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்?''

''இந்தக் கூற்றை நீங்கள் நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜி.எஸ்.டி வரியை முழுவதுமாக வணிகர்கள் மட்டுமே செலுத்தப்போவதில்லை. பொருள்களை வாங்கும்போதே குறிப்பிட்ட சதவிகித வரியை வாடிக்கையாளரான மக்கள் செலுத்துகிறார்கள். மீதம் உள்ள வரித்தொகையைத்தான் வணிகர்கள் செலுத்துகிறார்கள். அடுத்ததாக, வணிகர்களிலுமே ஆண்டு வர்த்தகம் 20 லட்சம் ரூபாயைத் தாண்டாதவர்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்தவேண்டியதில்லை என்பது முக்கியமான விஷயம்.''

“அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிகப்படியான வரியும், ஆடம்பரப் பொருள்களுக்கு மிகக் குறைவான வரியுமாக நிறைய குளறுபடிகள் இருக்கின்றனவே...?''

“உற்பத்திப் பொருள் மற்றும் தொழில்சார்ந்து ஆய்வு செய்வதற்காகவே ஜி.எஸ்.டி சார்பில், 18 செக்டார் கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்தும் பலச்சுற்று ஆலோசனைப் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துதான் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில், ஜவுளித்துறையில்கூட ஜாப் ஒர்க்குக்கு 12 சதவிகிதமாக விதிக்கப்பட்டிருந்த வரியானது தற்போது 5 சதவிகித வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இதுதவிர, ஜி.எஸ்.டி கவுன்சில் எனப்படும் அமைப்பில், ஒவ்வொரு மாநில நிதி அமைச்சரும், மத்திய நிதி அமைச்சரும் உள்ளனர்.

அவர்களும் இறுதியாக ஆலோசனை செய்துதான் வரி நிர்ணயம் இறுதி செய்யப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் ஜவுளித்துறையில் சில விஷயங்களில் ஒரே மாதிரியான சிக்கல்கள் வருகின்றன. ஆக, இந்த மாநிலங்களைச் சார்ந்த நிதி அமைச்சர்கள் ஒன்றுசேர்ந்து கவுன்சில்களில் பிரச்னையை விளக்கி குறிப்பிட்ட வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவர முடியும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. முதன்முதலாக ஜி.எஸ்.டி எனும் மிகப்பெரிய பொருளாதார முன்னெடுப்பு நடவடிக்கையை எடுக்கும்போது, நடைமுறையில் இதுபோன்ற சில சிக்கல்கள் எழலாம். அதனை 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடும் கவுன்சில்களில் ஆலோசித்து மாற்றியமைக்க முடியும்.''


டிரெண்டிங் @ விகடன்