உங்கள் குழந்தை செல்லும் ஸ்கூல் வேன் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்? #GoodParenting

பள்ளிப் பேருந்து

குழந்தைகளின் கல்விக்காகப் பெற்றோர் செய்யும் விஷயங்கள் ஏராளம். கால்கடுக்கக் காத்திருந்து விண்ணப்பம் வாங்குவதிலிருந்து, சீருடை, புத்தகம், காலணிகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள். அரசுப் பேருந்தில் சென்றால் சரியான நேரத்துக்குச் செல்லமுடியாது, கூட்டம் அதிகமாக இருந்தால் பயணிக்கச் சிரமமாக இருக்கும் என்றும் ஸ்கூலிலிருந்து அனுப்பப்படும் ஸ்கூல் வேன் அல்லது பஸ்ஸில் பணம் கட்டி, அனுப்புகிறார்கள். மாணவர்கள் மீது அக்கறை உள்ள பள்ளியாகப் பார்த்துதான் நீங்கள் சேர்ந்திருப்பீர்கள், இருந்தபோதும், இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது தவறில்லைதானே. ஏனெனில், இழப்பைச் சந்திப்பதற்கு முன் அதைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

உங்கள் குழந்தை செல்லும் ஸ்கூல் வேன் அல்லது பேருந்து பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

1. ஸ்கூல் வேன் / பஸ் : உங்கள் குழந்தைப் பயணிக்கும் வாகனம் எந்த நிலையில் உள்ளது எனத் தெரிந்துகொள்ளுங்கள். வாகனத்தின் உள்ளே சென்று ஓட்டை ஏதேனும் இருக்கிறதா... ஜன்னல் வழியே வெளியே விழுந்து விடும் ஆபத்து இருக்கிறதா... ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அவசர வழி இருக்கிறதா... வாகனத்தின் கதவு சாத்திய பின் திறக்க முடியாதளவு இருக்கிறதா... எனச் சோதித்துப் பாருங்கள்.  மழைக்காலத்தில் வாகனத்தில் எங்கேனும் ஒழுகுமா என்பதையும் பாருங்கள். பள்ளியைச் சார்ந்தவர்கள் ஏதேனும் சொல்லி, உங்களைத் தடுக்கப் பார்த்தாலும் வாகனத்தைச் சோதித்துப் பார்க்க தயங்காதீர்கள். இப்படிச் சோதிப்பதை மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்வதையும் மறக்காதீர்கள்.

2. டிரைவர்: வாகனத்தை இயக்குபரைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். அவரின் பெயர், செல் எண் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு அவசரமாக ஏதேனும் சொல்வதென்றாலோ, விசாரிக்க வேண்டுமென்றாலோ இது நிச்சயம் உதவும். டிரைவரோடு நிச்சயம் ஓர் உதவியாளரையும் வைத்திருப்பார்கள். அவரைப் பற்றிய தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள். கண்டிப்புமிக்க விசாரணைப் போல இவற்றைச் செய்யாமல் நட்பு ரீதியாகப் பேசுவதைப் போல விவரங்களைச் சேகரியுங்கள்.

3. அமரும் இடம்: உங்கள் குழந்தை வழக்கமாக எந்த இடத்தில் அமர்கிறது எனத் தெரிந்துகொள்ளுங்கள். அந்த இடத்தில் ஏதேனும் சிறு தகடு அல்லது வேறு ஏதேனும் குழந்தையின் உடலில் காயம் உண்டாக்கும் விதத்தில் இருக்கிறதா எனப் பாருங்கள். இருக்கையில் மூட்டைப் பூச்சிகள் போன்ற பூச்சி தொந்தரவு ஏதேனும் இருக்கிறதா என்பதையும் கவனிக்கத் தவற வேண்டாம்.

4. ஃப்ரெண்ட்: உங்கள் குழந்தையின் அருகே அமரும் குழந்தையின் யாரென்று பார்த்து, அவரோடு நீங்களும் ஃப்ரெண்டாகி கொள்ளுங்கள். அவர்கள் இருவரும் சண்டை போட்டுகொண்டிருந்தால் சமாதானப்படுத்துங்கள். வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் கை குலுக்கச் சொல்லி, நட்பை இறுக்கமாக்குங்கள்.

5. வழி முக்கியம்: பள்ளி வாகனம், உங்கள் வீட்டிலிருந்து எந்த வழியாகப் பள்ளிக்குச் செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அந்த வழியில் ஏதேனும் பிரச்னை என்றால் டிரைவரிடம் கூறி வழியை மாற்றிச் செல்லச் சொல்லலாம். வாகனம் புறப்பட்ட பின் பிரச்னைப் பற்றித் தெரிகிறது என்றால் டிரைவருக்கு மொபைல் வழியே தகவலைச் சொல்லி, வாகனம் செல்லும் வழியை மாற்றலாம்.

இவற்றை முறையாகச் செய்யும்போதே இன்னும் எழும் சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் குழந்தையின் பாதுகாப்புகாக மட்டுமல்ல, உங்கள் குழந்தையோடு பயணிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பயன்தரக் கூடியதே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!