Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ஆறு மாத அவகாசம் போதும்!’ - சசிகலா நம்பிக்கையும் ‘கொங்கு லாபி’ கொதிப்பும் #VikatanExclusive

சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுவைப் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் சசிகலா. ‘மத்திய அரசின் நெருக்குதல்கள் இல்லாமல், ஜாமீன் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார். ‘ஆறு மாதம் வெளியே இருந்தாலே, கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்' எனவும் கணக்குப் போடுகிறார்' என்கின்றனர் அ.தி.மு.க அம்மா அணியினர். 

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, கடந்த ஜுன் 20 ஆம் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.அப்போது நடந்த விவாதத்தில், ‘மறு சீராய்வு மனுவுக்கு எதிராக, மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது. இப்போதுள்ள நிலையில், நமக்கு சட்டரீதியான உதவிகள் தேவைப்படுகின்றன. கட்சியையும் ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டியிருக்கிறது' என சசிகலா ஆதங்கத்துடன் கூற, ' நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். மத்திய அரசின் உதவிகள் நமக்குக் கிடைக்கும்' என ஆறுதல் கூறியிருக்கிறார் தம்பிதுரை. அதன்பிறகே, ‘பா.ஜ.க வேட்பாளரை ஆதரிப்பது எனப் பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனையின் பேரில் முடிவு செய்தோம்' என அறிவித்தார். இந்நிலையில், வரும் 6 ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான ரிவியூ மனு மீது விசாரணை நடக்க இருக்கிறது. 

எடப்பாடி பழனிசாமிகொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். “அ.தி.மு.க தலைமைக் கழகத்தை மூத்த நிர்வாகிகள் வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். ‘அவர்கள் ஆலோசனையின் பேரிலேயே பா.ஜ.க வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கிறோம்' என சசிகலா பெயரைத் தவிர்த்துவிட்டு பேட்டியளித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனை சசிகலா குடும்ப உறவுகள் எதிர்பார்க்கவில்லை. மறுபுறம், ஆட்சிக்கு எதிராக தினகரன் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும், அவரால் எதையும் சாத்தியப்படுத்த முடியவில்லை. ‘ஆகஸ்ட் 5 ஆம் தேதியோடு நான் விதித்த கெடு முடிவுக்கு வருகிறது' என அவர் கூறியதை, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புன்சிரிப்புடன் வரவேற்றனர். ‘60 நாள் கெடு முடிந்த பிறகு, அவரால் என்ன செய்துவிட முடியும்? எம்.எல்.ஏக்கள் அனைவரும் நம் பக்கம் உள்ளனர். ஆட்சிக்கு இவர்களால் எந்தவித ஆபத்தும் வரப் போவதில்லை. நம்மைக் கவிழ்ப்பவர்கள்தான் கவிழ்ந்து போவார்கள். ஆட்சி மட்டுமல்லாமல், கட்சி அதிகாரத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்' என அவர்கள் விவாதித்துள்ளனர்.

இந்தநேரத்தில், 'மறுசீராய்வு மனு மூலம் சசிகலா வெளியில் வந்துவிடுவாரா?' என்ற கேள்வியும் அவர்களுக்குள் எழுந்துள்ளது. அப்போது பேசிய கொங்கு மண்டல பிரமுகர் ஒருவர், 'ரிவியூ மனு மீது சசிகலாவுக்குச் சாதகமாக தீர்ப்பு வருவதற்கு சாத்தியமில்லை. கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகளுக்குச் சாதகமாக, எந்த ரிவியூ மனுவும் இருந்ததில்லை. தவிர, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை உறுதிப்படுத்திய அமித்வராய் முன்னிலையில்தான் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. 'தன்னுடைய தீர்ப்பு தவறு' என்று அவரே கூறுவதற்கு வாய்ப்பில்லை. நான்காண்டு சிறைத் தண்டனையை நிறைவு செய்துவிட்டுத்தான் சசிகலா வருவார். அவரோடு, தினகரன்இளவரசியும் சுதாகரனும் ரிவியூ மனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களது நிலையும் இப்படித்தான் இருக்கப் போகிறது' என விவரித்திருக்கிறார். இந்தக் கருத்தைக் கொங்கு மண்டல நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்" என்றார் விரிவாக. 

ஆனால், சசிகலா குடும்பத்தினரோ கொங்கு கேபினட்டைப் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறது. “எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள பலரும், சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய உறவில் உள்ளனர். அவர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமிக்குத் தேவையான உத்தரவுகள் செல்கிறது என்றும் பேசிக் கொள்கிறார்கள். ‘நம்முடைய கட்டுப்பாட்டில்தான் பழனிசாமி இருக்கிறார். தினகரனின் தலையீடுகளை அமைச்சர்கள் விரும்பவில்லை' என சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், தினகரனை வீழ்த்துவதற்கு, திவாகரன் தயவை கொங்கு லாபி பயன்படுத்திக் கொள்கிறது. இது முடிந்த பிறகு, திவாகரன் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதுதான் பழனிசாமியின் பிளான். ‘நரசிம்ம ராவ் போல எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருக்கக் கூடாது. தினகரனுக்கு எதிராகப் பேசுகின்றவர்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்' என வெற்றிவேல் எம்.எல்.ஏ கூற, 'நரசிம்ம ராவ்' என்ற வார்த்தை பிரயோகத்தால் கொதித்த முதல்வர், தனது ஆதரவாளர்களான திருத்தணி கோ.அரி மூலம், 'வாரிசு அரசியல்' என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாணியில் வாரிசு அரசியலை நாங்கள் எதிர்ப்போம்' என்ற வார்த்தையை, சசிகலா குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை. இந்த வார்த்தை ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்துக்கும் செக் வைத்துவிட்டது. இருப்பினும், ‘சிறையில் இருந்து வெளிவரும்போது, தன்னை வரவேற்கக் கூடிய முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி இருப்பார்' என நம்பிக் கொண்டிருக்கிறார் சசிகலா. இதையே குடும்ப உறவுகளும் எதிர்பார்க்கின்றனர்" என்கிறார் அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

ரிவியூ மனுவின் மீதான சசிகலாவின் நம்பிக்கையும் கட்சி அதிகாரம் மீதான கொங்கு கேபினட்டின் பார்வையும் அதிர்வைக் கூட்டிக் கொண்டே செல்கிறது. 'அரசியல் ஆட்டத்தில் யார் கை ஓங்கப் போகிறது' என்ற எதிர்பார்ப்பும் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் கூடியிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close