Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''அவர் அழுகை நடிப்பில்ல... இப்பதான் உண்மை புரியுது'' - நெகிழும் நடிகர் வையாபுரியின் மனைவி! #BiggBossTamil

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணவர் வையாபுரியுடன் அவர் மனைவி ஆனந்தி

"கஷ்டங்களையும் போலித்தனமான அன்பையுமே பார்த்துப் பார்த்து வளர்ந்ததால் அவருக்கு மத்தவங்களிடம் பெருசா அன்பு காட்டத் தெரியாது. தான் உண்டு, தன் வேலை உண்டுனு வாழ்ந்து பழகிட்டாரு. எங்களிடம்கூட அதிகம் பாசம் காட்டாமல் இருந்துட்டார். அதை உணரணும்னுதான், 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குத் தைரியமா அனுப்பிவெச்சேன். ஆனா, இப்போ அவரைப் பார்க்கணும்போல இருக்கு" என்கிறார் நடிகர் வையாபுரியின் மனைவி ஆனந்தி. கணவரின் மீதான அன்பையும் பிரிவின் தவிப்பையும் அவர் குரலில் உணரமுடிந்தது. 

"பிளஸ் டூ வரை படிச்ச நான், தாராபுரத்திலுள்ள ஒரு நிறுவனத்துல வேலை செஞ்சுட்டிருந்தேன். சினிமா பத்தி எந்தப் புரிதலும் இல்லை. அவர் நடிச்ச 'என்னவளே' படத்தின் இயக்குநர், எங்க தூரத்துச் சொந்தம். வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டிருந்தப்போ, அந்த இயக்குநர் இவரை அறிமுகப்படுத்தினார். எங்களுக்குக் கல்யாணமாச்சு. கணவரின் பல நல்ல குணங்கள் ரொம்பவே பிடிச்சது. ஆனாலும், அவரின் தனிமையும், பாசம் வெளிப்படுத்த தெரியாத குணமும் ஒருவித வலியைக் கொடுத்துச்சு. அமைதியான குணம்கொண்டவர். யார்கிட்டேயும் அதிகம் பேசமாட்டார். தன் வேலை முடிஞ்சதும் ரூம்ல போய் உட்கார்ந்துடுவார். அதனால கல்யாணம் ஆகி குழந்தைப் பிறக்கிற வரைக்கும் அவர்கூட ரொம்பவே நெருங்கிப் பழகுற வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கல.  

குடும்பத்தினருடன் நடிகர் வையாபுரி

செல்லப் பேருவெச்சு கொஞ்சுறது, பாசத்தை வெளிப்படுத்துறதுன்னு ஒரு சராசரி பெண்ணுக்குரிய ஆசைகளை அவரிடமிருந்து எதிர்பார்த்தேன். எதுவும் செய்யமாட்டார். காரணம், அவர் கஷ்டப்பட்ட காலத்தில் எந்தச் சொந்தங்களும் அவருக்கு உதவலை. 'பணத்துக்குத்தான் இந்த உலகம் முக்கியத்துவம் கொடுக்கும்'னு எல்லோரையும் வெறுக்க ஆரம்பிச்சுட்டார். சென்னைக்கு வந்து, ரொம்பவே கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்திருக்கார். பாசம் சார்ந்த எந்த ஒரு சந்தோஷமும் அவருக்குக் கிடைக்கலை. அது ஆரம்பத்தில் எனக்குப் புரியலை. கணவரோடு சேர்ந்து சினிமா, ஷாப்பிங், கோயில் போகணும்னு நிறைய ஆசை இருந்துச்சு. ஆனால், எங்களோடு அதிகமா அவுட்டிங் வரமாட்டார். அவரைப் புரிஞ்சுக்கவே பல வருஷமாச்சு. இதுதான் அவர் குணம். கொஞ்சம் கொஞ்சமா மாறுவார்னு என்னைத் தேத்திக்கிட்டேன். ஆனா, எங்க பையன் ஷ்ரவன் மற்றும் பொண்ணு ஷிவானி ரொம்ப ஃபீல் பண்ணினாங்க. அவங்க ஏக்கத்தைப் போக்க, அடிக்கடி வெளியே கூட்டிட்டுப்போவேன்" என்கிற ஆனந்தி, இதுவரை வையாபுரியின் ஷூட்டிங்கைகூட பார்த்ததில்லையாம். 

"கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, அப்புறமும் சரி சினிமா மேல எனக்கு பெரிய ஆர்வம் இருந்ததில்லை. சினிமாவில் இருக்கிற சிலரின் கல்யாணம் மாதிரியான நிகழ்ச்சிக்குப் போகும்போதுதான், சினிமா நட்சத்திரங்களைப் பார்ப்பேன். எங்களுக்குக் கல்யாணமாகி ரொம்ப நாள் கழிச்சு, 'இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார்னு சிலரைப் பார்க்க ஆசைப்படுறே'னு அவர்கிட்டே சொன்னேன். என் ஆசையை நிறைவேற்றி வெச்சாரு. அதோடு சினிமா மீதான என் ஆசைகள் தீர்ந்திடுச்சு. சினிமா பிரபலங்கள் போன் பண்ணும்போது, 'வீட்டுல எல்லோரும் செளக்கியமா?'னு கேட்பாங்க. 'நலம்'னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவார். பதிலுக்கு, 'உங்க வீட்டுல செளக்கியமா?'னுகூட கேட்க மாட்டார். ஏங்க இப்படி இருக்கீங்கன்னு கேட்டால், 'எனக்கு அப்படி கேட்கத் தெரியாது'னு சொல்லுவார். உள்ளுக்குள்ளே பாசம் இருந்தாலும், வெளியே காட்டத் தெரியாதவர். ஆனால், வீட்டில் இருக்கும்போது, வீட்டு வேலைகளில் உதவி செய்வார்" என்கிற ஆனந்தி, 'பிக் பாஸ்' குறித்து பேசினார். 

நடிகர் ரஜினியுடன் வையாபுரி மற்றும் அவர் மனைவி

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கறதுக்கு நாலு நாள்க ளுக்குமுன்னாடிதான் அதில் கமிட் ஆனார். இதில் கலந்துக்கறது மூலமா, எங்க அருமை புரியலாம்னு நினைச்சுதான் அனுப்பிவெச்சேன். நினைச்ச மாதிரியே ஒரு வாரப் பிரிவுலயே, 'இதுவரைக்கும் மனைவி, குழந்தைங்களோடு ஒருநாள்கூட போன்ல பேசாம இருந்ததில்லை. அவங்க தேவைகளைப் பூர்த்திசெய்தது மட்டும்தான் என் முக்கியமான வேலையா நினைச்சுட்டிருந்தேன். ஆனால், பாசம் காட்டறது ரொம்பவே முக்கியம்னு இந்த நாள்கள் உணர்த்திடுச்சு'னு நிகழ்ச்சியில கலந்துகிட்ட சில நாள்லயே அவர் அழுததைப் பார்த்ததும், எனக்கு ஆனந்தக் கண்ணீர். 

'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்துக்காக அவர் ஒரு மாசம் மும்பைக்குப் போயிருந்தார். அதுதான் அவர் எங்களை அதிகபட்சம் பிரிஞ்சிருந்த நாள்கள். அப்போ, அவரைப் பார்க்கும் ஆசையில் குழந்தைகளைக் கூட்டிட்டு விமானத்துல முதல்முறையா தனியா போய்வந்தேன். அப்புறம் என்னதான் ஷூட்டிங்னாலும் ஒரு வாரத்துக்கு மேல பிரிஞ்சதில்லை. அந்த பிரிவு நாள்கள்லயும் போன்லயாவது அடிக்கடிப் பேசிப்போம். இப்போ, அவரைப் பிரிஞ்சு ஒரு வாரம்தான் ஆகுது. அவர்கிட்ட பேசாம இருக்கிறது மனசை என்னவோ பண்ணுது. உடனே அவரைப் பார்க்கணும்போல இருக்குது. இப்போ, நிகழ்ச்சியில் இருக்கிற மத்தவங்ககிட்டே ஒரு குடும்ப உறுப்பினர்போல பழகிட்டிருக்கார். இந்த நிகழ்ச்சியிலிருந்து திரும்பி வரும்போது, அவர் புது மனிதரா வருவார்னு உறுதியா நம்புறேன். அவர் வருகையை எதிர்நோக்கி நாங்க காத்திருக்கோம்'' என்கிற ஆனந்தியின் குரலில் நெகிழ்ச்சியும் உற்சாகமும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close