ஆன்மிகவாதியா அரசியல்வாதியா?...திருவண்ணா'மலை'யைக் குறிவைக்கும் விக்ரமாதித்யன் நித்தியானந்தா | Nithyananda allegedly encroached Temple land

வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (03/07/2017)

கடைசி தொடர்பு:12:10 (04/07/2017)

ஆன்மிகவாதியா அரசியல்வாதியா?...திருவண்ணா'மலை'யைக் குறிவைக்கும் விக்ரமாதித்யன் நித்தியானந்தா

திருவண்ணாமலை

திருவண்ணாமலையை விடுவதாக இல்லைபோல நித்தியானந்தா... திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் பவழக்குன்று பகுதியில்  சட்டவிரோதமாக ஆசிரமம் அமைக்க முயன்றதாக சாமியார் நித்தியானந்தா தரப்பைச் சில தினங்களுக்கு முன்புதான் கண்டித்து அனுப்பியது காவல்துறை. மலையில் நடந்த ஆக்கிரமிப்பைத் தடுத்துவிட்டதாகத் திருவண்ணாமலை மக்கள் நிம்மதிப்பெருமூச்சுவிட்டனர். ஆனால், அந்த நிம்மதியை நீடிக்கவிடமாட்டேன் என நித்தியானந்தா உறுதிமொழி எடுத்துக்கொண்டுவிட்டதைப்போல மீண்டும் தன் பக்தர்கள் மூலம் ஆசிரமம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்கிறார்கள். 

முதற்கட்டமாக ஆசிரமம் அமைக்கும் தங்கள் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்திவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப்பிரமுகர்கள் மீது அவதுாறு பரப்பும் வேலையை உள்ளுர் லெட்டர் பேடு கட்சிகள் மூலம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் நித்தியானந்தா என்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். 

நித்தியானந்தா

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவண்ணாமலை  மார்க்சிஸ்ட் கட்சியின் கலைப்பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைச் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளரான கருப்பு கருணா, “ பவழக்குன்று மலையில் உள்ள சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பை எப்படியாவது ஆக்கிரமித்து தங்கள் ஆசிரமத்தை எழுப்ப கடந்த 7 வருடங்களுக்கு முன்பே நித்தியானந்தா தரப்பு தனது செல்வாக்கினைப் பயன்படுத்தி முயற்சித்தனர். மக்களை திரட்டி போராட்டம் நடத்தி மார்க்சிஸ்ட் கட்சி அதை முறியடித்தது. முன்னை விடவும் பணமும் செல்வாக்கும் கூடிவிட்ட நிலையில், இப்போது மீண்டும் மலையைக் குறிவைத்திருக்கிறது நித்தியானந்தா தரப்பு. கடந்த 3-ம் தேதி சில உள்ளூர் பிரமுகர்கள் உதவியுடன் ஆசிரமம் கட்டுவதற்கான பூமி பூஜையை சத்தமின்றி நடத்திய நித்தியானந்தா இரவோடு இரவாக அங்கு கீற்றுக் கொட்டைகளை எழுப்பி வேலியை அமைத்தனர்.

தகவல் தெரியவந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வீரபத்ரன், மாவட்டச் செயலாளர் சிவகுமார் மற்றும் தொண்டர்கள் மக்களைத் திரட்டி காவல்துறையில் புகார் அளித்தோம். ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற தாசில்தார் சம்பிரதாயமாக மலையை பார்வையிட்டபின் அத்துடன் புகாரை கிடப்பில் போட்டுவிட்டார். ஆக்ரமிப்பை அகற்றவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என மாவட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விட்டபின் கடந்த மாதம் 16-ம் தேதி ஆர்.டி ஓ உமாமகேஸ்வரி தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர். அப்போது நித்தியானந்தா சீடர்கள் அவர்களைத் தாக்கினர்.  பெண் சீடர்கள் மூலம் பிரச்னையை திசைதிருப்பவும் முயன்றனர். ஆனால், உறுதியாக நின்று ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்களை வெளியேற்றியது வருவாய்த்துறை

நித்தியானந்தா

ஆனால், அதன்பிறகும் அடங்காத  நித்தியானந்தா தரப்பு தன் செல்வாக்கினால் உள்ளூர் பிரமுகர்களையும் இங்குள்ள சில லெட்டர் பேடு கட்சிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு மீண்டும் கடந்த 27-ம் தேதி மலையில் குடிசை போடும் வேலையில் இறங்கியது. புகார் அளித்ததன்பேரில் 6 பேரை பிடித்தது காவல்துறை. ஆனால், இன்னமும் அவர்கள்மீது வழக்குப் பதியவில்லை. கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கெனவே  தடையாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் சட்டத்தை கேலிக்குள்ளாக்கும் விதமாக மீண்டும் மீண்டும் நித்தியானந்தா ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். அவர்மீது எந்த சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தங்களது முயற்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள மார்க்சிஸ்ட் கட்சியை முடக்க வழி தெரியாமல் குறுக்கு வழியைக் கையாள ஆரம்பித்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான வீரபத்ரன் நித்தியானந்தாவிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், நித்தியானந்தா சீடர்களை தாக்கிய குண்டர்கள் மீது நடவடிக்கை எடு என எங்களை குண்டர்கள் போல் சித்திரித்தும் ஏதோதோ கட்சிப்பெயர்களில் இன்று திருவண்ணாமலை நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். 

அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் வளைத்துக்கொண்டு அதன்மூலம் எப்படியாவது மலையை ஆக்கிரமித்துவிடுவதென முடிவெடுத்து அதற்கான காரியங்களை ஆற்றிவருகிறது நித்தியானந்தா தரப்பு. அதன் முதற்படியாகத்தான் எதிர்ப்பு தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிப்பிரமுகர்களை வழக்குப் போட்டு முடக்க நினைக்கிறார்” என்றார். 

நித்தியானந்தா

வீரபத்ரனிடம் பேசினோம். “ பூஜையில் உள்ளவர்களைத் தாக்கியதாக சொல்வதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்து மதத்துக்கு விரோதமானது என்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார் நித்தியானந்தா. நான் பணம் கேட்டு மிரட்டியதாகவும் பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள். சம்பாதிக்க ஆயிரம் கட்சிகள் உண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் நேர்மைக்கும் சேவை மனப்பான்மைக்கு மட்டும்தான் முதலிடம். மற்ற கட்சிகளைப்போல் எங்கள் கட்சியில் யார்வேண்டுமானாலும் சேர்ந்துவிடமுடியாது. 7 வருடங்களுக்கு முன் விரட்டப்பட்ட நித்தியானந்தா முன்னைவிடவும் பலமாக திருவண்ணாமலை பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். காவல்துறை விரட்டியடித்தபின்னும் சீடர்கள் என்ற போர்வையில் சிலரை தினமும் அனுப்பி பூஜைகளை செய்ய வைப்பதன்மூலம் மாவட்ட நிர்வாகத்தை ஏளனம் செய்கிறார். அவரது இந்த சட்டவிரோத செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றதும் அதில் உறுதியாக நிற்கும் என்னைப்போன்றவர்களை தனிப்பட்ட முறையில் குறிவைக்கிறார்.

வீரபத்ரன்கார்ப்பரேட் சாமியாரான அவருக்கு உலகம் முழுவதும் சொத்துகள் உள்ளன. ஆனாலும், இந்த அரசு நிலத்தின் மீது ஏன் ஆர்வமாக இருக்கிறார் எனத்தெரியவில்லை. சுமார் 3500 குடும்பங்கள் இந்த பகுதியில் வசிக்கிறார்கள். அவர்களைப்போன்று தானும் உரிமைகொண்டாட  30 வருடங்களாக அங்கு தன் முன்னோர்கள் பூஜை செய்துவருவதாக பொய் பேசுகிறார். வருவாய்த்துறை அதை நிராகரித்ததும்  அங்கு தங்கியிருக்கும் மக்களையும் வெளியேற்றுங்கள் என போஸ்டர் ஒட்டுகிறார். உழைக்கும் வர்க்கத்தினர், அன்றாடங்காய்ச்சிகள் போன்றவர்கள்தான் அங்கு 50 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறார்கள். பாதிக்கு மேல் பட்டா வைத்திருக்கிறார்கள். தனக்கு இடமில்லை என்றதும் அவர்களை விரட்டச்சொல்லி போஸ்டர் ஒட்டுகிற இவரை எப்படி சாமியார் என்பார்கள் மக்கள்?...

தங்குவதற்கு இடமில்லாதவர்களும் பணத்தில் கொழுத்து ஆசிரமம் அமைக்க நினைக்கும் இவரும் ஒன்றா...? இப்போது தன் ஆட்கள் மூலம் தகராறை ஏற்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்துமதத்துக்கு விரோதமானது போல சித்திரிக்க முயல்கிறார். மாவட்டநிர்வாகம் நித்தியானந்தாவின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு காணவில்லையென்றால் திருவண்ணாமலையில் நித்தியானந்தாவினால் ஒரு பெரிய கலவரம் வர வாய்ப்பாகிவிடும்” என்றார்.

மண்ணாசை, பொன் ஆசை, பெண்ணாசை அற்றவர்கள்தான் சாமியார்கள்... நித்திக்கு இது தெரியாமலா இருக்கும் என முனுமுனுப்பு கேட்கிறது திருவண்ணாமலையில்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்