வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (03/07/2017)

கடைசி தொடர்பு:11:28 (04/07/2017)

``அழைப்பிதழில் சாதிப் பெயர் இருந்தால் நிரூபிக்கட்டும்!'' - சுப.வீரபாண்டியன் சவால்

ன் வீட்டுத் திருமண அழைப்பிதழில் சாதி பெயர் இருந்தால் நிரூபித்துக்காட்டுமாறு பேராசிரியர்  சுப.வீரபாண்டியன் சவால் விடுத்துள்ளார். 

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன் பற்றிய சில தகவல்கள், சமூக வலைதளங்களில் இரு நாள்களுக்கு முன் பரவியது. `பெரியார் கொள்கை, சாதி மறுப்பு பற்றியெல்லாம் பேசிவரும் சுப.வீரபாண்டியன், தன் சொந்த பிள்ளைகளைத் தன் சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொடுத்தார். அவரின் அண்ணன் வீட்டுத் திருமண அழைப்பிதழில், சுப.வீரபாண்டியன் பெயருடன் சாதிப் பெயரும் சேர்த்து அச்சடிக்கப்பட்டிருக்கிறது. சாதி சார்ந்த சங்கத்தில் இவர் உறுப்பினராக இருந்தார்' எனச் சரமாரியான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தில் வைக்கப்பட்டிருந்தன.

 சுப.வீரபாண்டியன் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியதன் பின்னணி என்ன?

சுப.வீரபாண்டியன்

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், யோகா குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திருப்பதி நாராயணண், மதிமாறன் உள்ளிட்ட சிலர் அதில் பங்கேற்றனர். விவாதத்தின்போது, சாதி குறித்த விவாதத்துக்குப் பேச்சுத் தாவியிருக்கிறது. நெறியாளரால் கட்டுப்படுத்த முடியாத சூழலில், அரை மணி நேரத்தில் நிகழ்ச்சி முடித்துவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நடிகர் எஸ்.வி.சேகர், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், `மதிமாறன் எங்கள் சாதியை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். சொந்த சாதியினரை உயர்த்திப் பிடியுங்கள். அதற்காக அடுத்த சாதியினரை இழிவுபடுத்தாதீர்கள்' எனப் பேசியிருந்தார்.

இந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் வகையில், எஸ்.வி.சேகருக்கு சுப.வீரபாண்டியன் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், `விவாத நிகழ்ச்சியில் உங்கள் சாதியைப் பற்றி மதிமாறன் இழிவுபடுத்திப் பேசியது என்னவென விளக்க முடியுமா?' எனக் கேட்டுள்ளார். சுப.வீரபாண்டியன், எஸ்.வி.சேகருக்குக் கடிதம் எழுதிய பிறகுதான், அவரைப் பற்றி முதல் பாராவில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வலம்வரத் தொடங்கின. இதுகுறித்து சுப.வீரபாண்டியனிடம் விளக்கம் கேட்டோம்.

``தொலைக்காட்சி விவாதங்களின்போது சர்ச்சைகள் ஏற்படுவது உண்டு. யாராக இருந்தாலும் நாகரிகமாகப் பேச முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த விவாதத்தின்போது, மதிமாறன் நாகரிகமற்ற எந்தக் கருத்தையும் பேசி நான் பார்த்துவிடவில்லை.  எஸ்.வி.சேகரிடம் கேட்டால், `உங்கள் இரண்டு பிள்ளைகளுக்கும் சொந்த சாதிக்குள்தானே கல்யாணம் கட்டிக்கொடுத்தீர்கள்... உங்க அண்ணண்  வீட்டுத் திருமண அழைப்பிதழில்கூட உங்கள் பெயருடன் சேர்த்து சாதிப் பெயர் போடப்பட்டிருக்கிறதே...' என்பது போன்ற ஆதரமற்றக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒன்று சொல்லிக்கொள்கிறேன், எனக்கு இரண்டு அல்ல, மூன்று பிள்ளைகள்  உள்ளனர். அதில், இருவர் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். 

 சுப.வீரபாண்டியன்

மூத்த மகன் லெனின், என் மைத்துனரின் மகளை விரும்பி திருமணம் செய்துகொண்டார்.  மகள் இந்திரா, இளைய மகன் பாரதிதாசன் ஆகியோர் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்தான். நானே என் பிள்ளைகளிடம் `தலித் பெண்ணையோ பையனையோ விரும்பி மணக்க வேண்டும் ' என்று சொல்லிச் சொல்லித்தான் வளர்த்திருக்கிறேன். எந்தச் சூழலிலும் நான் சாதியை மையப்படுத்தி இயங்கியதில்லை. என் வீட்டுத் திருமண அழைப்பிதழை உங்களுக்கு அனுப்புகிறேன். அதில் சாதிப் பெயர் குறிப்பிட்டிருந்தால் சொல்லுங்கள். நண்பர்கள் யாராவது திருமண அழைப்பிதழில் சாதி குறிப்பிட்டிருந்தால்கூட, அந்தத் திருமணத்தை நான் தவிர்த்துவிடுவேன். இது என் வீட்டுத் திருமணம். அதில், சாதி குறிப்பிட்டிருந்தால் திருமணத்துக்கே நான் வர மாட்டேன் என்பது குடும்பத்தினருக்குத் தெரியும். அப்படியிருக்கையில், அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள். 

என் சாதி சார்ந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன் என்பது அவர்கள் என்மீது வைக்கும் மூன்றாவது குற்றச்சாட்டு. என்னைப் பொறுத்தவரை, என் வாழ்நாளில் எந்தச் சாதிச் சங்கத்தின் வாசலையும் மிதித்ததுமில்லை; உறுப்பினராக இருந்ததுமில்லை. என்மீது குற்றம் சாட்டுபவர்கள் அதை நிரூபித்துக்காட்ட வேண்டும். போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போய்விடக் கூடாது.

இப்போது, இந்த விவகாரத்துக்குப் பிறகு என்னைப் பற்றி என்னவெல்லாமோ வீடியோ வெளியிடுகிறார்கள்.  2002-ம் ஆண்டு, ஜெர்மனில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேச ஏழு லட்சம் ரூபாய் கேட்டதாகவும், `இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நான் வெளிநாடுகளில் நடக்கும் கூட்டத்துக்கு வருவேன்' என  டிமாண்ட் செய்ததாகவும், அதனால் விடுதலைப்புலிகளே என்னைக் கூப்பிடக் கூடாது எனத் தடை போட்டதாகவும்கூட வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.  ஆனால், அவர்கள் கூறிய காலகட்டத்தில் நான் `பொடா' சட்டத்தின்கீழ் சிறையில் இருந்தேன். இப்படியெல்லாம் கூத்து நடக்கிறது'' என முடித்துக்கொண்டார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்