Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களை குறிவைக்கும் காவல்துறை... சளைக்காத கதிராமங்கலத்து மக்கள்!

கதிராமங்கலம்

ஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி போராட்டத்தில் பங்கேற்றப் பெண்களைப் போலீசார் தரக்குறைவாகத் திட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2002 -ல் எண்ணெய் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி  நிறுவனம் செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிய நாளிலிருந்து இப்பகுதி மக்களுக்குப் பிரச்னைகளும் ஆரம்பமானது. செழிப்பான தண்ணீர் வசதியுடன் பச்சைப் பசேலென்றிருந்த கதிராமங்கலம் தற்போது வறண்டுபோன பாலைவனப் பூமியாகிவிட்டது. அது மட்டுமன்றி குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரிலும் ஆயில் கலந்து வருவதாகக் கூறி, தற்போது பொதுமக்கள்  ஓ.என்.ஜி.சி-க்கு எதிரானப் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

இந்நிலையில், நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாயில் இருந்து கடந்த 30 -ம் தேதியன்று திடீரென எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இந்தக் கசிவிலிலிருந்து தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்து மக்கள் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சம்பவ இடத்துக்குத் திரண்டு வந்து போராடினர். அப்போது அப்பகுதியைப் பார்வையிட வந்த அதிகாரிகளையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு  தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தைக் கலைக்க முடிவு செய்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இன்றி போலீசார் கடுமையாகத் தாக்கியதால், போராட்டக்காரர்கள் கலைந்துசென்றனர். 

ஆயில் கலந்த தண்ணீர்

இதனால், அப்பகுதி முழுவதும் பதற்றச் சூழலானது. போராட்டத்தில் ஈடுப்பட்ட கலையரசியிடம் இதுகுறித்துப் பேசியபோது, "போராட்டத்தில் பங்கேற்றிருந்த எங்களைப் போலீசார் விரட்டி விரட்டி அடித்தனர். அதில், ஒரு பெண்ணுக்குக் காலில் காயம். மற்றொரு பெண்ணுக்கு முதுகில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் வலி தாங்கமுடியாமல் அங்கேயே விழுந்துவிட்டார். மேலும், ஆண் பெண் வித்தியாசமின்றி பெண்களின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியப் போலீஸார், 'கலைந்து போய் விடுங்கள்... இல்லை என்றால், அனைத்துப் பெண்களையும் விபச்சார வழக்கில் கைது செய்துவிடுவோம்' என மிரட்டினர். 4 பெண்களையும் கைது செய்து அழைத்துச்  சென்றனர். இதற்கு நாங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்பிறகே, கைது செய்யப்பட்ட பெண்களை விடுவித்தனர்.

தெருவில், இரண்டு பெண்கள் சேர்ந்து நடக்க முடியாத நிலை உள்ளது. எங்களுடைய இயற்கை வளத்தை கொள்ளையடித்துவிட்டு திருடர்களைப் போல் எங்களை நடத்துகின்றனர் போலீசார். ஆனால், போலீசாரின் இந்தக் கெடுபிடிகளுக்கு எல்லாம் பயந்தவர்கள் நாங்கள் இல்லை. நிலத்தில் பதிக்கப்பட்ட எண்ணெய்க் குழாய்கள் பிடுங்கி எறியப்படும் வரை எங்களின் போராட்டம் ஓயாது'' என்றார் ஆவேசமாக. 

 போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளான மற்றொருபெண் குணசுந்தரியிடம் பேசிய போது, "யாரையும் நிலத்துக்குள் விடாமல் போராடிக் கொண்டிருந்த எங்களை எங்கிருந்தோ வந்த போலீஸார் விரட்டி விரட்டி அடித்தார்கள். எங்களை லத்தியால் தாக்கிய அத்தனை போலீசாரும் ஆண்கள். அவர்களின் இந்தச் செயல் சட்டத்துக்கே எதிரானது. உடலுறுப்பில் எந்த பகுதிகளில் எல்லாம் தாக்கக் கூடாதோ அங்கெல்லாம் போலீசாரின் லத்தி பதிந்திருந்தது” எனக் காயத்தைக் காட்டினார். தாக்கப்பட்ட இடங்கள் கன்னிப்போய் கருமை படர்ந்து அந்த பகுதியே வீங்கியிருந்தது. பின்னர் கண்ணீருடன்  தொடர்ந்தவர் , ”நாங்கள்  பதிக்கப்பட்டதற்காக மட்டும் தற்போது  போராடவில்லை.. எங்களை போன்ற நிலைமை நாளை தமிழகத்தில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு வந்துவிடக் கூடாது. அவர்களைக் காப்பாற்ற இயற்கைக்கு எதிரான இவர்களின் இந்தச் செயலை இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தப் போராட்டம்” என்றார் .

 

கதிராமங்கலத்தில் போலீசார் முற்றுகை

இது குறித்து முகிலனிடம் பேசியபோது, "கதிராமங்கலத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில், மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் உள்ள சாலைகளில் எல்லாம் திட்டமிட்டு தடுப்பு ஏற்படுத்திய போலீசார், அதன்பிறகே போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். அப்பாவிப் பெண்கள் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, சட்டவிரோதமாக நடந்துகொண்டது கிராம மக்கள் அல்ல... போலீஸார்தான். ஒட்டு மொத்தமாகவே இங்கு மனித உரிமை மீறப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த அராஜகத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம். போராட்டக்காரர்களை ஒடுக்க நினைக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரானக் குரல்கள் மேலும் எழுச்சிப் பெற வேண்டும். இயற்கை வள கொள்ளைக்கு எதிரானப் போராட்டம் இது. எனவே கதிராமங்கலம் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement