வெளியிடப்பட்ட நேரம்: 22:07 (03/07/2017)

கடைசி தொடர்பு:22:07 (03/07/2017)

'எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு செய்தது பச்சைத் துரோகம்!'- அய்யாக்கண்ணு காட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைய உள்ள அனல் மின் நிலையத்துக்கு விவசாய நஞ்சை மற்றும் புஞ்சை விளை நிலங்களையும், குடிநீர் ஊரணிகள் மற்றும் பாசனக் கண்மாய்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து அனைத்து விவசாய பாதுகாப்புச் சங்கம்  மற்றும் மீனவர் அமைப்பினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் தலா 800 மெகாவாட்  திறன் கொண்ட 2 அனல் மின் நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 1300 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மின் திட்டத்துக்காக  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாகனேந்தல், உப்பூர், வலமாவூர், திருப்பாலைக்குடி, காவனூர், துத்தியேந்தல், மோர்ப்பண்ணை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களுடன் அப்பகுதி விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்களான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர இக்கிராமங்களில் நீராதாரமாக விளங்கும் ஊரணிகள் மற்றும் பாசன கண்மாய்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இப்பகுதியில் அமைய உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் கழிவு நீர் கடலில் கலக்கும் சூழலில் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு மீன்வளம் அழிந்துபோகும் சூழலும் உருவாகியுள்ளது. விவசாயத்தையும், கடல் வளத்தையும் ஒரு சேர அழிக்கும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் மீனவர்களும் உப்பூர் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் 3-வது நாளான இன்று தென் இந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முத்துராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றுப் பேசிய அய்யாக்கண்ணு, "விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களையோ விளை நிலங்களையோ அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்தக்கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால், இவற்றை மதிக்காத மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நிலங்களை எடுத்து வருகிறது. இதே நிலை இப்போது உப்பூர் சுற்று வட்டார கிராமங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க உயிரைக் கொடுத்தேனும் போராட வேண்டும்.

விவசாயிகளின் ஒட்டு மொத்த கடனையும் தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட எங்களிடம் சமாதானம் பேசிய முதல்வர் எடப்பாடி 'விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யமாட்டோம்' என்று உறுதியளித்தார். ஆனால், அதற்கு மாறாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தடை வாங்கியுள்ளது. இது எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு செய்த பச்சைத் துரோகம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்துவோம்' என்றார்.