Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நியமன எம்.எல்.ஏ. விவகாரம்... நாராயணசாமிக்கு ’செக்’ வைத்த பா.ஜ.க..!

காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். ஆளுங்கட்சியைச் சாராதவர்கள் நியமன எம்எல்ஏ-க்களாக நியமிக்கப்பட்டிருப்பது புதுச்சேரி அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை. மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பு முதல்வர் நாராயணசாமியை நிலைகுலைய வைத்திருக்கின்றது. 

கிரண் பேடியுடன் நாராயணசாமி

கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆனால், யார் முதல்வர் என்று கட்சியின் முன்னனித் தலைவர்களிடையே கடும் இழுபறி நிலவியது. முதல்வர் பதவியைப் பெற டெல்லிக்கும் புதுச்சேரிக்கும் இடையே தலைவர்கள் பறந்து கொண்டிருக்க, கிரண்பேடியை துணைநிலை ஆளுநராகக் களம் இறக்கியது மத்திய பா.ஜ.க அரசு. அதையடுத்து தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை முதல்வராக அறிவித்தது கட்சி மேலிடம். அதற்கு கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட எதிர்ப்பு அலையால் புதுச்சேரி கலவரச்சேரியானது. 

கிரண்பேடிக்கும் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் அன்று தொடங்கிய அதிகார யுத்தம் இன்று அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்எல்ஏ-க்கள் அங்கம் வகிப்பார்கள். இதுதவிர அரசே மூன்று பேரை எம்எல்ஏ-வாக நியமித்துக்கொள்ள அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கட்சி ஆட்சியமைக்கிறதோ அவர்கள் மூன்று எம்எல்ஏ-க்களை நியமித்துக்கொள்வது வழக்கம். அதன்படி 3 பேரைத் தேர்வு செய்து அந்தக் கோப்பை ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை ஆளுநர் சரிபார்த்துவிட்டு உள்துறைக்கு அனுப்பி வைப்பார். இறுதியாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு மத்திய உள்துறை உத்தரவைப் பிறப்பிக்கும்.

பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வரான நாராயணசாமி 6 மாதத்துக்குள் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலை. அதனால், பதவியேற்றதும் தொகுதியைத் தேடுவதிலேயே 6 மாதம் கடத்தினார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நாராயணசாமிக்கு கிரண்பேடியை சமாளிக்கவே நேரம் போதவில்லை. இதனால், வாரியத் தலைவர் மற்றும் நியமன எம்எல்ஏ பதவிகள் விவகாரத்தை கிடப்பில் போட்டார். இந்நிலையில்தான் பா.ஜ.க.வைச் சேர்ந்த மூன்று பேரை எம்எல்ஏ-க்களாக நியமிப்பதற்கான முயற்சிகளை கிரண்பேடி மேற்கொள்கிறார் என்று புகார் எழுந்தது. அதை வதந்தி என்று மறுத்த கிரண்பேடி, “எம்எல்ஏ-க்கள் நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது” என்று பொடி வைத்தார். ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த காங்கிரஸ் தரப்பு, மத்திய அரசின் எம்எல்ஏ நியமனத்துக்குத் தடை விதிக்கும்படி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில்தான் பா.ஜ.கவின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி தாளாளர் செல்வகணபதி உள்ளிட்டவர்களை எம்எல்ஏ-க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாராயணசாமியின் அலட்சியப் போக்கினால்தான் தங்களுக்கு வர வேண்டிய நியமன எம்எல்ஏ-க்கள் பதவி பா.ஜ.கவுக்கு போய்விட்டது என்று காங்கிரஸ்காரர்களே புலம்பி வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement