வெளியிடப்பட்ட நேரம்: 05:18 (04/07/2017)

கடைசி தொடர்பு:09:02 (04/07/2017)

தொழில்தொடங்க 1,800 கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது..! திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

 

'திருச்சியில் தொழில் முதலீட்டுக் கழகத்தின்மூலம் இந்த ஆண்டு 1,800 கோடி ரூபாய் கடனுதவி வழங்கத் திட்டமிட்டுள்ளோம்' என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். 

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கடன் பெற, ஆய்வுக் கட்டணச் சலுகை முகாம் நடைபெற்றது.

 

தொழில் கடன்

 

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மதியழகன், துணைப்பொது மேலாளர் சீனிவாசன், மண்டல அலுவலக முதுநிலை அலுவலர் ஆர்.கோவிந்தராஜ், கிளை மேலாளர் க.சுசில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், 'திருச்சி மாவட்டம் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் உயிர் நாடியாக விளங்கிவருகிறது. எந்தவொரு திட்டமாக இருந்தாலும், திருச்சியைத் தவிர்த்துவிட்டுத் தொடங்க முடியாது.

திருச்சியில் வர்த்தக மையம் அமைய ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு முழுப் பொறுப்பு இருக்கிறது. தங்களின் அடுத்தடுத்த திட்டம் என்பதற்கான வரைவைத் தயார்செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சிப்காட், சிப்கோ போன்ற அமைப்புகளுடன் 15 நாள்களுக்கு ஒருமுறை கூடி, அடுத்தடுத்து செய்யவேண்டியவை குறித்து விவாதிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 1,000 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள், வரையறுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்குறித்து விவாதிக்க வேண்டும். 65 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், பல்வேறு தரப்பினருக்குத் தொழில் தொடங்குவதற்கு நிதி உதவிகளை வழங்கியிருக்கிறது. தொழில் தொடங்குவதற்கான அறிவுரைகள், வழிமுறைகள், தொடக்கக் கால கடன்கள், வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு அளிக்கப்படும் வட்டிச் சலுகைகள், மானியங்களை வழங்கிவருகிறது.

மருத்துவம், இயந்திரம், போக்குவரத்து, சூரிய மின்னாற்றல் உற்பத்தி போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழில் தொடங்குவதற்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடனுதவிகளை வழங்கிவருகிறது. தற்போது கணினி மயமாகிவிட்டது. அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். தொழில் தொடங்குவதற்கு இருந்த சிரமங்கள் எல்லாம் குறைக்கபட்டுவிட்டன. அதே நேரத்தில், தொழில் தொடங்குவதற்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த ஆண்டில், 1,800 கோடி ரூபாய் கடன் வழங்க, தொழில் முதலீட்டுக் கழகம் இலக்கு நிர்ணயித்துச் செயலாற்றி வருகிறது. எனவே, தொழில் தொடங்குவோருக்கு 100 சதவிகிதம் நிச்சயமாகக் கடன் கிடைக்கும். 1 கோடி கடன் வாங்கினால், 25 லட்சம் மானியமாக வழங்கப்படும். ஒரு வார காலத்துக்கு நடைபெறும் இந்த முகாமை, தொழில் முனைவோர்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். இதுபோல, தமிழகத்திலும், இரண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தோர் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று அரசும் வலியுறுத்தி, அதற்குத் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.

இதேபோல, தொழில் நகரங்களில் தொழிற்சாலைகளை நடத்திட இடவசதி, அடிப்படை வசதி போன்றவை இல்லாது, மற்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல நினைக்கும் தொழிற்சாலைகளை திருச்சியில் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க