வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (04/07/2017)

கடைசி தொடர்பு:11:11 (04/07/2017)

“ஜி.எஸ்.டி, வடிகட்டிய எட்டப்பத்தனம்!” - வெளுத்துவாங்கும் வெள்ளையன்

‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை'யின்போது பிறந்த 'புதிய இந்தியா', இப்போது ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டப் பிறகு 'பொருளாதாரச் சுதந்திரம்' அடைந்திருப்பதாகச் சொல்கிறது பி.ஜே.பி.! 'அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிக வரியும், ஆடம்பரப் பொருள்களுக்குக் குறைந்த வரியுமாக ஏகப்பட்ட குழப்பங்களை உள்ளடக்கியதுதான் ஜி.எஸ்.டி' என்று குமுறுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

உண்மையில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நன்மையா... தீமையா?

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் த.வெள்ளையனிடம் பேசினோம்....

வெள்ளையன்

“ஜி.எஸ்.டி வரிவிதிப்பு பொருளாதாரச் சுதந்திரம் என்கிறது மத்திய அரசு. யாருக்குப் பொருளாதாரச் சுதந்திரம்?”

''1959-ம் ஆண்டு முதலே நம் நாட்டில் 'பொதுவிற்பனை வரி' என்ற வரிவிதிப்பு முறை இருந்துவந்தது. மத்திய அரசின் அறிவிப்பின் பேரில், அந்தந்த மாநில அரசுகளே இந்த பொதுவிற்பனை வரியை நிர்ணயம் செய்து வசூலித்துக்கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை. இந்த வரிவிதிப்பில் வரும் மொத்த வருமானமும் மாநிலத்துக்குத்தான் கிடைத்துவந்தது. ஆனால் உற்பத்தி வரி, ஆயத்தீர்வை உள்ளிட்ட சில வரிவிதிப்பு உரிமைகளை மத்திய அரசு தன்னிடம் வைத்துக்கொண்டது. ஆக இந்தப் பழைய வரிவிதிப்பு முறையிலேயே மத்திய - மாநில அரசுகளுக்குப் போதுமான வருமானம் கிடைத்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், திடீரென 2007-ம் ஆண்டு 'வாட்' எனும் 'மதிப்பு கூட்டு வரி'யைக் கொண்டுவந்தார்கள். இப்போது 10 ஆண்டுகால இடைவெளிக்குள் மறுபடியும் 'ஜி.எஸ்.டி'-யைக் கொண்டுவந்துள்ளார்கள். அப்படியென்றால், 'வாட்'-டுக்கு என்னாயிற்று? அப்போது தவறாகக் கொண்டுவந்துவிட்டோம். இப்போது சரி செய்கிறோம் என்று எந்தத் தலைவரும் சொல்லவும் இல்லை. 

இந்த வரிவிதிப்புகள் எல்லாமே நமது அரசியல்வாதிகள் தங்களது அறிவாற்றலால் கண்டுபிடித்தவை கிடையாது. அதிகாரிகளும் இதனைக் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, வெளிநாட்டினரின் வசதிக்காகக் கொண்டுவரப்பட்டதுதான்  இந்த வாட், ஜி.எஸ்.டி போன்ற வரிவிதிப்பு முறைகள். 'ஆண்டவன் சொல்றான்; அருணாச்சலம் செய்றான்' என்ற சினிமா வசனம்போல.... 'அமெரிக்கன் சொல்கிறான், இந்தியன் செய்கிறான்'. இன்றைய இந்திய அரசியல்வாதிகள், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் சொல்வதைக் கேட்டு நடக்கக்கூடியவர்களாத்தான் இருக்கிறார்கள்.''

“ஜி.எஸ்.டி வரியை மக்கள்தான் கட்டப்போகிறார்கள். வணிகர்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்கிறார். ஆனால், நீங்கள் ஜி.எஸ்.டி-யை எதிர்க்கிறீர்களே...?''

“மக்கள்தான் வரி கட்டப்போகிறார்கள். ஹோட்டலுக்குச் சென்று 100 ரூபாய்க்குச் சாப்பிட்டால், 12 ரூபாய் வரியோடு சேர்த்து 112 ரூபாயைக் கட்டப்போகிறார்கள்; ஆனால், வருத்தப்பட்டு, வேதனைப்பட்டு, திட்டிக்கொண்டே கட்டுவார்கள். அரசு விதிக்கிற வரியை மக்களிடம் வசூல் செய்து கட்டவேண்டியதுதான் ஹோட்டல்காரர்களுக்கும் வேலை. எனவே போராடத் தேவையில்லைதான். அப்படியிருந்தும், இந்த வரியைக் குறையுங்கள் எனச் சொல்லி ஏன் போராடுகிறோம்?

இந்த வரி விதிப்பு முறையையே அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் சொல்லித்தான் இந்தியா அமல்படுத்தியிருக்கிறது. அந்தப் பணக்கார நாடுகள் ஏன் இப்படியொரு வரிவிதிப்பை அமல்படுத்தச் சொல்கிறார்கள்? இந்தியாவில் உள்ள சில்லறை வணிகத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்களது குறிக்கோள். அவர்கள் ஜாம் ஜாமென்று இந்தியாவுக்குள் வணிகம் செய்ய வரவேண்டும். அதற்கு வசதியான வரி நடைமுறைகளை இப்போதே கொண்டுவந்துவிட வேண்டும். உள்ளாட்சி வரிகளை ரத்து செய்திட வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம். அதற்காகத்தான் இதுபோன்ற சட்டத்தையும் திட்டத்தையும் போட்டு உள்நாட்டு வணிகத்தைச் சீர்குலைக்கிறார்கள்.''

ஜி.எஸ்.டி.

“ 'ஒரு நாடு, ஒரே வரி, ஒரே சந்தை' என்ற பொருளாதாரத் திட்டம், இந்திய வணிகத்தை எப்படிப் பாதிக்கும் எனச் சொல்கிறீர்கள்?”

“ஒரு நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்றெல்லாம் சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டிலும், பீகாரிலும் ஒரே வரிதான். பருப்புக்கு 5 சதவிகிதம்தான் வரி' என்று சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், இங்கே சிந்தாதிரிப்பேட்டை குடிசைப் பகுதிக்குள் கடை நடத்திவரும் சிறுவியாபாரி ஒருவருக்கு இந்தத் திட்டம் எப்படிப் பயன்படும்? ஆன்லைனில் வியாபாரம் செய்துவரும் பெருமுதலாளிகளுக்குத்தான் இது நல்ல பலன் தரும். ஒரே இடத்தில் இருந்துகொண்டு இந்தியா முழுக்க ஒட்டுமொத்த வணிகத்தையும் இணையம் வழியாக இயக்கிவரும் வெளிநாட்டு முதலாளிகளுக்குத்தான் ஜி.எஸ்.டி பலன் தரும்.''

“வருடத்துக்கு 20 லட்சம் ரூபாய்க்குள் வணிகம் செய்துவரும் சிறுவணிகர்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இல்லை என்கிறபோது, எப்படிச் சில்லறை வர்த்தகம் அழியும்?''

“உண்மைதான். ஆனாலும் நடைமுறையில், அவர்களும் கொள்முதல் கணக்கு பராமரிக்கணும், ஆடிட்டர் வைத்து கணக்குக் காட்டித்தான் ஆகவேண்டும். இதிலும்கூட ஆடிட்டர் உதவி இல்லாமலேயே ஜி.எஸ்.டி கணக்குகளை இணையம் வழியாகத் தாக்கல்செய்துவிட முடியும் என்று சொல்கிறார்கள்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல் - என்ற குறள்தான் இதற்குப் பதில். 

மோடி

அடுத்ததாக, ஆன்லைன் வர்த்தகம் பல்கிப்பெருகி ஆக்கிரமித்துக்கொண்ட பிறகு சிறு கடைக்காரர்களுக்கு எப்படி வியாபாரம் நடைபெறும்? ஆக, வியாபாரமே இல்லாமல்போனபிறகு, அவர்களுக்கு எப்படி வரி போடமுடியும்? ஆக, உள்ளூர் வணிகத்தை ஒழித்து வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் முயற்சிதான் ஜி.எஸ்.டி. அன்றைக்கு வியாபாரம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்து, நாட்டையே அடிமைப்படுத்தினார்கள். இப்போது, அதே வெளிநாட்டுக்காரர்களை மறுபடியும் இந்தியாவுக்குள் வந்து வியாபாரம் செய்யச்சொல்லி, வடிகட்டிய எட்டப்பத்தனம் செய்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். 

மத்திய பி.ஜே.பி அரசு அதிகாரப்பூர்வமாக இந்தத் தப்பைச் செய்கிறது. மாநில அரசுகளும் சாதாரண மக்களைப் போல... 'என்ன செய்ய... என்ன செய்ய... என்ன செய்ய...?' என்று தப்புக்குத் துணைபோகிறார்கள். கடைந்தெடுத்த இந்த எட்டப்பத்தனம் பற்றி மக்களுக்கு இனிமேல்தான் தெரியவரும்.''

“எந்த அடிப்படையில், பணக்கார மேலைநாடுகளைக் குற்றம் சாட்டுகிறீர்கள்?''

“இந்தியாவில் கொண்டுவரப்படுகின்ற ஜி.எஸ்.டி போன்ற புதிய சட்டத் திட்டங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை ‘உலகப் பொருளாதார ஒப்பந்தம்'தான். அவைதான் இங்குள்ள அரசியல்வாதிகளையும் கட்டுப்படுத்துகிறது. உலகப் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்கு இந்தியாவைச் சந்தைப் பொருளாக்கவும், உள்நாட்டு வணிகத்தை முடக்கி உலகப் பெரு முதலாளிகளுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் வேலையைச் செய்யச்சொல்லியும் இவர்களைத் தூண்டுவதே இந்த உலகப் பொருளாதார ஒப்பந்தம்தான்.

மகாபாரதத்தில், திரவுபதையின் துகில் உரியப்பட்டபோதும் தருமன் எதுவும் செய்யமுடியாமல், நின்றான். காரணம் ஏற்கெனவே மனைவியை ஈடாக வைத்து சூதாடிய சூதாட்ட ஒப்பந்தம்தான் தருமனை எதுவும் செய்யமுடியாமல் தடுத்தது, கட்டிப்போட்டது. அதேபோல், உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப் பிறகு, பணக்கார நாடுகள் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டுகிற, எதுவும் செய்யமுடியாத நிலையில்தான் இந்திய அரசியல் தலைவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதே உண்மை!''


டிரெண்டிங் @ விகடன்