தினகரனை வீழ்த்திய செங்கோட்டையன்! - எம்எல்ஏ-க்களை திசைதிருப்பிய பின்னணி #VikatanExclusive | MLAs no more plan to support Dhinakaran, Senkottaiyan behind this

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (04/07/2017)

கடைசி தொடர்பு:15:07 (04/07/2017)

தினகரனை வீழ்த்திய செங்கோட்டையன்! - எம்எல்ஏ-க்களை திசைதிருப்பிய பின்னணி #VikatanExclusive

செங்கோட்டையன்

அ.தி.மு.க அம்மா அணிக்குள் நடக்கும் உள்கட்சி மோதலை முடிவுக்குக் கொண்டு வர இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அணி. ‘தினகரனின் ஆதிக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டார்கள். சொத்துக் குவிப்பு வழக்கின் மறுசீராய்வு மனுவின் தீர்ப்பும் சசிகலாவுக்குச் சாதகமாக வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் டெல்லி சென்றன. ‘எங்கள் ஆதரவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியச் சென்று ஆதரவு கொடுத்தனர். இதில், தன்னுடைய வலிமையைக் காட்ட அ.தி.மு.க எம்எல்ஏ-க்களில் 34 பேரைத் தன் பக்கம் வரச் செய்தார் தினகரன். இதனால், ஆட்சிக்குச் சிக்கல் என்ற தகவல் வெளியானது. இந்தப் பிரச்னையை மிக எளிதாகக் கையாண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு மண்டல அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகி ஒருவர், “எடப்பாடி பழனிசாமி இந்தளவுக்குத் தைரியமாக வலம் வருவதற்குக் காரணமே செங்கோட்டையனின் செயல்பாடுகள்தான். அவரால்தான், அனைத்து எம்எல்ஏ-க்களையும் வழிக்குக் கொண்டு வர முடிந்தது. கூவத்தூர் ஆப்ரேஷனில் அனைத்து எம்எல்ஏ-க்களும் ஆதாயம் அடைந்தாலும், அமைச்சரவைக்குள் ஆதாயம் அடைந்தது செங்கோட்டையனும் ஜெயக்குமாரும்தான். ‘நான்கு பேரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும்' என சசிகலா கூறியபோது, ‘இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். மூத்தவர் என்ற முறையில் செங்கோட்டையன் இருக்கட்டும். ஜெயக்குமாருக்கு நிதித்துறையைக் கொடுப்போம்' என வழிமொழிந்தார் தினகரன்.

தினகரன்இதன்பிறகு தொடர்ந்து தினகரனுடன் வலம் வந்தார் செங்கோட்டையன். திகார் சிறையில் இருந்து தினகரன் திரும்பிய பிறகு, ஒவ்வொரு எம்எல்ஏ-க்களாக அவரைச் சென்று சந்தித்தனர். இதனால் அதிர்ந்து போன எடப்பாடி பழனிசாமி, எம்எல்ஏ-க்களை வளைக்கும் பொறுப்பை செங்கோட்டையனிடம் ஒப்படைத்தார். அவரும் ஒவ்வொரு எம்எல்ஏ-க்களையும் நேரில் சந்தித்து, ‘அம்மா வளர்த்த கட்சி நல்லா இருக்கனும். நீங்கள் இப்படிச் செய்வதால் யாருக்கு லாபம்? உங்களுக்கு எது வேண்டும் என்றாலும், நேரடியாகக் கேளுங்கள். செய்து கொடுக்கிறோம்' என உருக்கமாக வேண்டுகோள் வைக்க, ‘எங்களுக்கெல்லாம் நீங்கள் மூத்தவர். உங்கள் பேச்சைத் தட்ட மாட்டோம்' என எம்எல்ஏ-க்களும் உறுதியாகக் கூறிவிட்டனர். தினகரனால் அமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட செங்கோட்டையனே, இப்படிச் செய்வார் என தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னணியில் சில காரணங்கள் இருக்கின்றன" என விவரித்தவர், 

“துணைப் பொதுச் செயலாளராக தினகரன் பதவியேற்ற நாளில் இருந்து, தலைவராக உருவெடுக்கும் வேலைகளில் ஆர்வம் காட்டினார். ஆனால், அவருடன் வலது மற்றும் இடதுமாக இருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும், அரசுப் பணியாளராக இருந்த உதவியாளர் ஒருவரும்தான் இந்தளவுக்கு வீழ்ச்சியடையக் காரணம். தலைமைச் செயலகத்தில் உள்ள ஓர் அறையில் அமர்ந்துகொண்டு, ஒவ்வொர் அமைச்சரையும் அழைத்து உத்தரவுகளைப் போட்டார் முன்னாள் அமைச்சர். ‘சார்...இதைச் செய்ய சொன்னார். இந்த வேலையை இவருக்குக் கொடுத்துவிடுங்கள்' என தினம் தினம் அழுத்தம் கொடுக்க, கொங்கு மண்டலத்தின் இரண்டு மணியான அமைச்சர்களும் தினகரனிடம் நேரடியாகச் சண்டை போட்டனர். இதன் தொடர்ச்சியாகத்தான், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கார்டனில் மோதல் வெடிக்கவும் காரணமாக அமைந்தது. ஏற்கெனவே, குடும்ப உறுப்பினர்களின் கோபத்தைத் தினகரன் சம்பாதித்திருந்தார். அவர்களும் கொங்கு மண்டல அமைச்சர்களுடன் கை கோத்தனர். 'இரண்டு அணிகளும் இணைவதில் எனக்கு மகிழ்ச்சிதான். கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்' என தினகரனைப் பேச வைத்தனர். தற்போது திவாகரனின் கட்டுப்பாட்டில் கொங்கு அமைச்சர்கள் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. நேரடியாக, சசிகலா குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்தால், டெல்லியில் இருந்து சிக்கல் வரும் என்பதால் அமைதியாக இருக்கின்றனர். இதை உணர்ந்து திரைமறைவில் காய் நகர்த்தி வருகிறார் திவாகரன். இனி தினகரன் தலையெடுப்பது சிரமம்” என்றார் விரிவாக. 

“பெங்களூரு சிறையில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார் சசிகலா. ‘மறு சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலே, ஜாமீன் கிடைத்துவிடும்' என தினகரன் தரப்பினர்தான் சட்டரீதியான வேலைகளைச் செய்துவந்தனர். இதைப் பற்றி சசிகலாவிடம் பேசிய திவாகரன் தரப்பினர், ‘பெயில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. வழக்கின் மனுவைத் தாக்கல் செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. சட்ட நிபுணர்களைத் தவறாக வழிநடத்துகிறார் தினகரன்' என்றெல்லாம் கூறியுள்ளனர். ‘ஆறாம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் காட்சிகளைப் பொறுத்து, சசிகலா குடும்பத்தில் புயல் வீசலாம்' எனவும் பேசி வருகின்றனர். மறுபுறம், ‘ஆட்சி நீடிப்பதால்தான் கட்சி அதிகாரத்தில் இவ்வளவு குழப்பம் வருகிறது. அமைச்சர்களும் தன்னிச்சையாக ஆட்டம் போடுகின்றனர். ஆட்சி பறிபோய்விட்டால், கட்சி நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாவிட்டால், அதற்கான பணிகளில் இறங்கலாம்' எனவும் குடும்ப உறவுகள் ஆலோசித்து வருகின்றனர். மறு சீராய்வு மனுவின் தீர்ப்பைப் பொறுத்தே, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட இருக்கிறது சசிகலா குடும்பம்" என்கின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close