வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (04/07/2017)

கடைசி தொடர்பு:15:21 (04/07/2017)

பசுவைக் காப்பாற்ற 75 அடி ஆழ கிணற்றில் குதித்த குடும்பத்தினருக்கு நடந்த சோகம்!

பசுக் கன்றைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட குடும்பத்தினர், ஒட்டு மொத்தமாகக் கிணற்றுக்குள் விழுந்தனர். அவர்களைத் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கிணற்றில் விழுந்தவரில் ஒருவர்

நெல்லை மாவட்டம் வீராணம் அருகே, நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரமசிவன். போதிய மழை இல்லாததால் விவசாய நிலத்தில் பயிரிடவில்லை. அதனால், குடும்பத் தேவைக்காகப் பசுக்களை வளர்த்துவந்தார். பரமசிவன், அவர் மனைவி வள்ளித்தாய் மற்றும் மகன் ஆகியோர் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். பரமசிவனின் மனைவி வள்ளித்தாய், பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, கன்றுக்குட்டி ஒன்று திடீரெனப் பாய்ந்து ஓடி, அருகில் இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே சென்றது.

அந்தக் கன்று கிணற்றுக்குள் விழுந்துவிடக் கூடாதே என்பதற்காக, வள்ளித்தாய் ஓடிச்சென்று அதைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள், கன்றுக்குட்டி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. அதே நேரம், வள்ளித்தாய் நிலைகுலைந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அதைக் கண்ட பரமசிவன், மனைவியை மீட்பதற்காகக் கிணற்றில் குதித்தார். தாயும் தந்தையும் கிணற்றுக்குள் தவறி விழுந்ததைக் கண்ட மகனும் கிணற்றில் குதித்தார். அந்தக் கிணற்றில் 4 அடி தண்ணீர் மட்டுமே இருந்ததால், குதித்தபோது மூவருக்கும் காலில் பலமாக அடிபட்டது.

பசுக் கன்றுடன் மூவரும் கிணற்றிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். தோட்டத்தில் பணியாற்றிய மூவரையும் காணாததால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அவர்களைத் தேடினர். அப்போது, கிணற்றிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு, அங்கு சென்று பார்த்தபோது, மூவரும் வெளியே வர முடியாமல் தவித்ததைக் கண்டனர். உடனடியாகத் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், பரமசிவன் குடும்பத்தினரையும் பசுக் கன்றையும் மீட்டனர். பலத்த காயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர். 

பசுக் கன்றுக்காக அடுத்தடுத்து ஒட்டு மொத்த குடும்பமும் கிணற்றுக்குள் விழுந்து கால்களை முறித்துக்கொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.