கலைஞர் பெயரில் செம்மொழி விருதுகள் - 6 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி! | Award announced in the name of Karunathi but central Tamil

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (04/07/2017)

கடைசி தொடர்பு:16:17 (04/07/2017)

கலைஞர் பெயரில் செம்மொழி விருதுகள் - 6 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி!

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கலைஞர் கருணாநிதி பெயரிலான விருதுகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.  

தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடியை வைப்புத் தொகையாகச் செலுத்தி, அதிலிருந்து வரும் வட்டித்தொகையிலிருந்து ஆண்டுதோறும் விருது வழங்கும் வகையில் அறக்கட்டளை நிறுவியுள்ளார், முன்னாள் முதல்வர் கருணாநிதி. 
ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த விருதுகுறித்து மத்திய தமிழாய்வு மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது, கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் சேர்த்து, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கான பரிந்துரைகளை வரவேற்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த விருதுடன், 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும், ஐம்பொன்னாலான மு.கருணாநிதி உருவமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், பண்டை இலக்கணமும் மொழியியலும், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கணம்  மற்றும் இசை, நடனம், நாடகம், ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 
தனித்தன்மையும் மேன்மையும் உலகளாவிய ஏற்பும் பெற்ற ஒரு நூலுக்காக அல்லது வாழ்நாள் பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.