வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (04/07/2017)

கடைசி தொடர்பு:18:00 (04/07/2017)

ஆணவக்கொலையைத் தடுக்கத் தனிச் சட்டம்? எடப்பாடி பழனிசாமியின் அடடே பதில்

சாதி ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்குத் தனிச்சட்டம் இயற்றுங்கள் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் நேரில் வலியுறுத்தியபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில் அடடே ரகம்.

Edappadi Palanisamy

தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், அதைத் தடுப்பதற்குத் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஜூன் மாதம் சேலம் முதல் சென்னை வரை 16 நாள்கள் நடைபயண இயக்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தினர் கடந்த வாரம் தமிழக முதல்வரைச் சந்தித்து, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

“முதல்வரிடம் என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்தீர்கள். அதற்கு, முதல்வர் சொன்ன பதில் என்ன?” என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜிடம் கேட்டோம்.

“இந்தியாவிலேயே, சாதி ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 185 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள், சொந்த உறவினர்களாலேயே கொலைசெய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகள் குறித்த புகார்கள், காவல்நிலையங்களில் உரிய முறையில் வழக்குகளாகப் பதிவுசெய்யப்படுவதில்லை. போராட்டங்கள் போன்ற அழுத்தம் காரணமாக சில இடங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. அப்படிப் பதியப்படும் வழக்குகளை நடத்துவதிலும் உரிய அக்கறை காட்டப்படுவதில்லை.

ஆணவக்கொலைகள், தற்கொலை வழக்குகளாகவும் பதியப்படுவதும் நடக்கிறது. தனிச்சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே ஆணவக்கொலைகளைத் தடுக்க முடியும்.அதற்காகத்தான், ஜூலை 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சேலம் முதல் சென்னை வரை நடைபயண இயக்கம் நடத்தினோம். ஜூன் 29-ம் தேதி முதல்வரைச் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினோம். அப்போது சில முக்கியமான விஷயங்களை அவரிடம் எடுத்துரைத்தோம்.

சாதி ஆணவக்கொலைகளை எதிர்க்கும் சாமுவேல்ராஜ்ஐ.மு.கூட்டணி ஆட்சியின்போது, நாடு முழுவதும் சாதி ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியின் பின்னணியில், அதற்கான சட்ட முன்வடிவைத் தயாரித்தது. அதன் மீதான தனது பரிந்துரையை மத்திய சட்ட ஆணையம் 2012-ல் வழங்கியது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் தனிச்சட்டம் கொண்டுவரலாம் என்று எங்கள் அமைப்பின் தலைவர் பி.சம்பத், முதல்வரிடம் சொன்னார். அதற்கு, ‘பார்க்கலாம்’ என்ற ஒரு வார்த்தையில் தனது பதிலை முதல்வர் முடித்துக்கொண்டார்.

2016-ல், மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சார்பில், ஆணவக்கொலைக்கு எதிரான சட்ட வரைவு ஒன்றை சட்டமன்றக் குழுத் தலைவரான அ.சவுந்தரராசன் தமிழக சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார். அதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம் என்று சொன்னோம். அதற்கும், ‘பார்க்கலாம்’ என்ற பதில்தான் முதல்வரிடம் இருந்து வந்தது.

சாதிமறுப்புத் திருமணம் செய்த உசிலம்பட்டி விமலாதேவி, அவருடைய உறவினர்களாலேயே ஆணவக்கொலை செய்யப்பட்டார். அதில், சி.பி.ஐ விசாரணை கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில், விமலாதேவியின் கணவர் திலீப்குமார் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று 2016, ஏப்ரல் 13-ம் தேதி நீதிபதி ராமசுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், சாதி ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கும், சாதி மறுப்புத் தம்பதிகளைப் பாதுகாப்பதற்கும் அடிப்படையான சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறி, தமிழக அரசுக்கு சில வழிகாட்டல்களை நீதிபதி வழங்கினார். சிறப்பான பல அம்சங்களைக் கொண்டது அந்த வழிகாட்டல். அதை நிறைவேற்ற மூன்று மாத காலம் அவகாசத்தை நீதிபதி அளித்தார். உயர் நீதிமன்றத்தின் அந்த வழிகாட்டல் படி, நிர்வாக உத்தரவின் மூலம் சில ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யலாம் என்று சொன்னோம். அதற்கும், ‘பார்க்கலாம்’ என்பது மட்டுமே முதல்வரின் பதிலாக இருந்தது. சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்னை இது என்பதால், பொறுப்பான ஒரு உறுதிமொழியை முதல்வர் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவருடைய பதில் எங்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது” என்றார் சாமுவேல்ராஜ்.

‘பார்க்கலாம்’ என்று பதில் சொல்வதற்கு ஒரு முதல்வரா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்