Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊருக்குத் தண்ணீரை ஃபார்வர்டு செய்த வாட்ஸ்அப் க்ரூப்..!

சிவகங்கையில் இருந்து 9 கி.மீ  தூரத்தில் அமைந்துள்ளது கூட்டுறவுபட்டி கிராமம். இந்த கிராம மக்கள் கடந்த ஒரு வருட காலமாக தண்ணீருக்காக அரசு அதிகாரிகளிடம் மனு கொடுக்க நடையாய் நடந்தும்  எந்த நடவடிக்கையும் இல்லை. இறுதியில் வெறுத்தப்போனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதற்காக சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது போலீஸ்.சிறைக்கு செல்லவிரும்பாத மக்கள் அபராதத்தை கட்டி விட்டு வெளியே வந்து சபதமெடுத்தார்கள். அவர்கள் எடுத்த சபதம் இனிமேல் அரசாங்கத்தை நம்பக்கூடாது என்பது தான். அது வெறும் கோபமல்ல; வைராக்கியம். 

கூட்டுறவுபட்டி ஊருக்குத் தண்ணீரை ஃபார்வர்டு செய்த வாட்ஸ்அப் க்ரூப்..!

    உடனே, ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள்; வாட்ஸ்அப் குரூப் ஒன்றைத் தொடங்கினார்கள்: இதே ஊரைச் சேர்ந்த சிலர் வெளிநாட்டிலும் வசிக்கிறார்கள் என்பதால், அவர்களிடம் நடந்த சோகங்களை ஒவ்வொன்றாக சொன்னார்கள். அவர்கள் உதவ முன்வர உடனே பணவசதிகள் கிடைக்க ஆரம்பித்தது. அதன்மூலம் தங்கள் கிராமத்திற்கான தண்ணீரை தாங்களாகவே பெறும் அளவிற்கு தற்போது முன்னேறியுள்ளனர் கூட்டுறவுபட்டி கிராமமக்கள். இதற்கு பின்னால் இருப்பது அந்த ஊர் இளைஞர்களின் சாமர்த்தியமும், கடின உழைப்பும்தான். அந்தக் கதையைத் தெரிந்துகொள்ள உடனே அந்தக் கிராமத்திற்கு சென்றோம்.

கூட்டுறவுபட்டி கிராமம்

அப்போதுதான் ஊரே மெச்சும் இளைஞர் லிங்கேஸ்வரன் பற்றி தெரியவந்தது. அவரை சந்திக்க சென்றோம். கிராமத்தின் கதையை உற்சாகமாக சொல்லத் தொடங்கினார் லிங்கேஸ்வரன். "நாங்க பல முறை தண்ணிக்காக பெட்டிசன் கொடுத்தோம்.எந்த நடவடிக்கையும் இல்ல. எல்லாரும் சேர்ந்து சாலை மறியல் பண்ணுனோம்.போலீஸ் கேஸ் போட்டாங்க. 

லிங்கேஸ்வரன்உடனே வெளிநாட்டுல இருக்குற எங்க ஊர் பசங்க கிட்ட பேசினோம். ஊர்ல கொஞ்ச பேருக்கிட்ட நிதி வாங்கி 3 லட்ச ரூபாய் செலவுல ,மூணு இடத்துல சுமார் ஐந்நூறு அடிக்கு மேல போர் போட்டோம். பிறகுதான் எங்கள் பிரச்னை தீர்ந்தது. இன்னைக்கு எங்களுக்கு தண்ணி மிச்சமாகவே இருக்கு. இதோட சேர்த்து பக்கத்து ஊரான உசிலம்பட்டி,முனியாண்டிபட்டி கிராமங்களுக்கு தண்ணி கொடுக்குறோம். 
முதல்ல ஒரு குடும்பத்துக்கு 20 குடம் தண்ணி காசு வாங்காம கொடுத்தோம். கணக்கு இல்லாமல் தண்ணி பிடிக்க ஆரம்பித்தார்கள். தேவையில்லாமல் தண்ணி பயன்படுத்துற மாதிரி இருந்துச்சு. கட்டுப்பாடு வேணும்னு நெனச்சோம். ஒரு குடம் தண்ணி ஒத்த ரூபாய் முடிவு செஞ்சோம். பிள்ளைகளுக்காக சேர்ப்பது சொத்துக்கள் மட்டுமல்ல தண்ணீரும் தான். இனி வரும் காலத்தில் பிள்ளைகளுக்கு நாம் சேர்க்கும் சொத்து தண்ணீர்தான்" என்றவர் தொடர்ந்து பேசினார். போர் மட்டுமல்ல. எங்க ஊர் பள்ளிக்கூடத்திற்கு பெயின்ட், மராமத்து பணிகள், கம்பி வேலியெல்லாம் கூட நாங்களேதான் போட்டோம். ஊர்ல அரசியல் பண்ணமுடியாதேன்னு சிலபேரு புறம் பேசுனாங்க. எதையும் காதுல வாங்கிக்கல. இப்போ நாங்களே பள்ளிக்கூடத்திற்கு கூடுதலா டீச்சர் போடலாம்னு பேசிட்டு இருக்கோம். மாலைநேர வகுப்புகள் நடத்தி பிள்ளைகளுக்கு இங்க்லீஷ் கோச்சிங் கிளாசும் நடத்தப்போறோம். இந்த ஆண்டு அரசுப்பள்ளியில் கூடுதலாகவே பிள்ளைகளை சேர்த்திருக்கோம்" என்கிறார் பெருமையாக!

பவானிதேவிஇதுபற்றி, கிராமத்தில் வசித்துவரும் பவானிதேவி கூறுகையில், "ஊர்ல ஒரு வருஷமா தண்ணி இல்ல தம்பி. கடைசில வயலை சுத்தி ஒன்பது போர் போட்டோம். அப்பவும் தண்ணி வரல; புகைதான் வந்துச்சு. ஏதோ இன்னைக்கு லிங்கேஸ்வரன் எடுத்த முயற்சியால சந்தோஷமா இருக்கோம். இப்போ எல்லாம் வீட்ல இருக்க பைப்லையே தண்ணி வருது. எங்க ஊருக்கு மட்டுமில்லாம, பக்கத்து ஊருக்கும் கூட தண்ணி தராங்க. அரசியல்வாதிங்க, அதிகாரிங்க எல்லாம் செய்யாதத, எங்க ஊர் இளவட்ட பசங்க செஞ்சுருக்காங்க. இவங்க இல்லாட்டி ஊரையே காலி பண்ணியிருப்போம். எல்லாம் இளைஞர்கள் வாட்ஸ்அப் க்ரூப் ஆரம்பிச்சு செஞ்ச வேலைதான்" என்கிறார் பூரிப்புடன்.

கூட்டுறவுபட்டி கிராம மக்கள்

மற்றொரு கிராமவாசியான சிதம்பரம் என்ன சொல்கிறார் தெரியுமா? " இனிமேல் எங்க ஊருக்குள்ள எந்த அரசியல்வாதியும் வரக்கூடாது. இனி நாங்க பணத்துக்காக எல்லா ஓட்டை விற்க மாட்டோம். ஆடு, மாடுங்க கூட குடிக்க தண்ணி இல்லாம, நூறு ரூபாய் கொடுத்து தண்ணி வாங்குன கொடுமையெல்லாம் இப்பதான் மாறியிருக்கு. இப்போ எங்க ஊர் தண்ணீர் வசதில இப்போ தன்னிறைவா இருக்கு" என்றார். 

மக்கள் சக்தியால்தான், தேசத்தில் பலமாற்றங்களும் நிகழ்கின்றன; அதற்கு கூட்டுறவுபட்டி கிராமம் சரியான உதாரணம்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close