' அடுத்த 13 ஆண்டுகளில் தமிழகத்தின் நிலை!' - ஆய்வின் அதிர்ச்சி முடிவுகள்

தமிழகத்தில் அடுத்து பத்தாண்டுகளில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து அதிர்ச்சிகர புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. ' நகர்ப்புறமயமாதலில் தமிழகம் முன்னணியில் இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. கிராமப்புறங்கள் படிப்படியாக அழிந்து வருவதையே இது சுட்டிக் காட்டுகிறது' என்கின்றனர் ஆய்வாளர்கள். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட தமிழகம் தொழில்துறையில் இருந்து நகர்ப்புற வளர்ச்சி வரையில், முன்னேற்றத்தை நோக்கி வளர்ந்து வருகிறது. ஆனால், தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அண்மையில் வெளியான அரசின் ஆய்வு முடிவு ஒன்று, சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் நாட்டிலேயே ’நகரமயமான மாநிலங்கள்’ பட்டியலில்  தமிழகம் முன்னிலையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தின் 67 சதவிகித மக்கள் தொகையினர் நகர்ப்புறங்களில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்கிறது அந்த ஆய்வு முடிவு. முன்னேற்றம் என்ற ஒற்றை வார்த்தையை நோக்கிப் பயணித்தாலும், நாட்டின் முதுகெழும்பாகக் கருதப்படும் கிராமங்களின் நிலை என்னவாகும்? அதன் பங்களிப்புகள் இல்லாத நாட்டின் முன்னேற்றத்தால் ஏற்படப் போகும் வளர்ச்சியால் என்ன பயன் என்ற கேள்விகளும் சேர்ந்தே எழுகிறது. 

" தற்போது இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியிலும் நகரமயமாக்கலிலும் வளர்ந்துவரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. வரக்கூடிய நாள்களில் இந்த வளர்ச்சி அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் மக்கள் தொகை எண்ணிகையும் கூடிக்கொண்டே போகிறது. தமிழகத்தின் தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை 5.92 கோடி ஆகும். அடுத்த வாக்காளர் பட்டியல் வெளிவரும்போது, இந்த எண்ணிக்கை ஆறு கோடியைத் தாண்டியிருக்கும். தமிழக பட்ஜெட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 428 கோடி ரூபாய் நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும், உள்கட்டமைப்பு வசதிக்காக ஆறாயிரத்து 492 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, அதில் ஐந்தாயிரத்து 615 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ஆனால், கிராமப்புற வளர்ச்சிக்காக கடந்து ஐந்து ஆண்டுகளில் ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கத் தகவல் என்னவென்றால், தமிழகத்தில் நிலப்பரப்பின் அடிப்படையில் 53 சதவீதம் கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. நகரம் என்றாலும் கிராமம் என்றாலும், கால மாற்றத்துக்கான வளர்ச்சிப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்பதே பல தரப்பிலிருந்து எழுப்பப்படும் குற்றச்சாட்டு ஆகும். நகரங்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக சென்னையை எடுத்துக்கொண்டால் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு, போக்குவரத்து, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை என கவனிக்கப்பட வேண்டியவை ஏராளம். ஆனால், இதற்கானப் பணிகளை முன்னெடுக்க முடியாத அளவுக்கு மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாத நிலையில், நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் கூட்டம் படையெடுப்பதால், அந்நகரத்தின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதே உண்மை" என்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். 

சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தியிடம் பேசினோம். " நாட்டின் வளர்ச்சி என்பது கிராமம், நகரம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் இருக்கவேண்டும். அதுதான் நடைமுறையும் கூட. ஆனால், ஒரு அரசு தன் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் நகரம் நோக்கிக் கொண்டுவந்தால், கிராமத்தில் இருப்பவர்கள் பள்ளி, கல்லூரி, வேலை என அனைத்துக்கும் நகரங்கள் நோக்கி வரத்தான் செய்வார்கள். அரசின் வளர்ச்சித்திட்டங்கள் ஒரே இடத்தில் குவியும்போது அது பின்னாளில் மக்கள் தொகை என்னும் பெரும் பாரமாக அரசின் தலையிலேயே வந்து விழும். அப்போது அரசின் நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கோட்பாடு மறைந்து, மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையே ஏற்படும். அதையும் மீறி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டாலும், அதன் தரம் கேள்விக்குறியுடன்தான் நிற்கும்" என்றார் கவலையுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!