Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேக்குமரம் வெட்டியதாக கைதான  போலீசார்... வில்லங்கமாகும் ஏலகிரி விவகாரம்!

தேக்குமரம் வெட்டியதாக பிடிபட்ட போலீசார்

நாளேடுகளில் வரிக்குவரி விடாமல் வாசிப்போரின் கண்களில் ஒரு செய்தி நிச்சயம் பட்டுவிடும். அதாவது, "மரம் வெட்டியதாகப் போலீஸார் கைது, வனத்துறையினர் புகாரின் பேரில் காவல் உயர் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை" என்ற தன்மையில் அந்தச் செய்தி போகும். இதன் பின்னணியை ஆராய்ந்தால் பல திடுக்கிடும் உண்மைகள் புதைந்துகிடப்பதை அறியலாம். அந்த வகையில், 'ஏலகிரி மலைக் காப்புக் காட்டில் தேக்கு மரம் வெட்டியதாக வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இரண்டு போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு போலீஸார் தப்பித்து ஓடிவிட்டனர்' என்றொரு செய்தி தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி மரம் வெட்டியதாகப் பிடிப்பட்ட போலீஸார் இருவரில் ஒருவருக்கு ஏலகிரிதான் சொந்த ஊர். சொந்த ஊரிலேயே இப்படித் திருட்டுத்தனமாக மரம் வெட்டிய வழக்கு விவகாரத்தில் சிக்கிக் கொள்ளவா அந்தப் போலீஸ்காரர் வேலைக்கு வந்தார். மரங்களை வெட்டி விற்று அதில் காசுபார்த்து சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன கட்டாயம்? அதுவும் பணியில் இருக்கும் நேரத்தில் உயரதிகாரிகளுக்குத் தெரியாமல் இப்படி மரத்தை வெட்ட முடியுமா ? இப்படி எண்ணற்ற கேள்விகள் இதன் பின்னால் அணிவகுத்துக் கிடக்கின்றன.

பொதுவாகக் காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸார், அவர்கள் பணியாற்றும் காவல் நிலைய எல்லையில் கொஞ்சம் செல்வாக்கோடு, அதிகாரத் தோரணையோடு இருப்பது இயல்பு. ஆயுதப்படை, சிறப்புப் பட்டாலியன் போன்ற பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள் அப்படி எங்கும் செல்வாக்கைக் காட்ட முடியாது. ஏனெனில், அப்படி அவர்கள் நடந்துகொண்டால் அதற்கான தண்டனை என்பது அதிகாரிகள் மூலம் மிகக் கடுமையாகவே வந்துசேரும். நிலைமை இப்படியிருக்க, குறிப்பிட்ட பட்டாலியனில் உள்ள தலைமை நிறுமத்தில் (ஹெட் குவார்ட்டர்ஸ்) இருக்கும் போலீஸ் வாகனத்தை  எடுத்துக்கொண்டு நான்கு போலீஸார் தேக்குமரம் வெட்டச் சென்றனர் என்பதே டன் கணக்கில் 'லாஜிக்' இடிக்கும் விஷயம்.

காவல் உயர் அதிகாரிகள் சொல்லாமல், போலீஸ் வாகனத்தை போலீஸார் இம்மியளவும் வெளியில் நகர்த்திக்கொண்டு போக முடியாது. ஏனெனில், ஆயுதப்படை, சிறப்புப் பட்டாலியன் போன்ற பிரிவுகளில் பணியாற்றும் போலீஸாரின் பணி என்பது, அதிகாரிகளின் நிமிட நேர உத்தரவுக்கு உட்பட்டது. உள்ளூர் காவல் நிலையங்களில்தான், ஏதாவது 'மைக்' மெசேஜ் என்றாலும், உடனே ஜீப்பை எடுத்துக்கொண்டு ஸ்பாட்டுக்கு போகிற கட்டாயம் இருக்கிறது. ஆயுதப்படை, சிறப்புப் பட்டாலியன்களில் இருக்கும் போலீஸார், நேரடியாக அப்படி எங்கும் நகரமுடியாது. காவல் உயர் அதிகாரியின் ஆணைக்கு ஏற்றபடிதான் 'பந்தோபஸ்து' உள்ளிட்ட  எந்தப் பணியையும் அமைத்துக்கொள்ள முடியும். சொல்லப்போனால், தூங்குவது, சாப்பிடுவது உள்பட அனைத்தும் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படியே நடக்கும் ஒன்றாகும். விவகாரம் இப்படியிருக்க, போலீஸ் வாகனத்தை  எடுத்துக்கொண்டு போய் குறிப்பிட்ட நான்கு போலீஸார், மரங்களை வெட்டி, விற்றுவர வாய்ப்பே இல்லை. ஆயுதப்படை, சிறப்புப் பட்டாலியன்களில்  போலீஸ் ஜீப்புக்கு டீசல் நிரப்ப வேண்டுமென்றால்கூட மோட்டார் வாகன எழுத்தர்  ஒருவர்  போலீஸ் டிரைவரோடு உடன் செல்வார். அதிகாரிகளின் கவனத்துக்கு வராமல் போலீஸ் வாகனம் எங்காவது நகர்ந்தால், குறிப்பிட்ட போலீஸ் ஜீப்பைக் காணவில்லை என்று,  அருகில் உள்ள பொது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் வாகனத்தோடு நான்கு போலீஸாரும் சேர்ந்து பலமணி நேரங்களுக்குக் காணவில்லை என்றால், புகார் கொடுக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.

                                                        தேக்குமரத்தை கடத்திய போலீஸ் வாகனம்

"நாங்கள் நேற்றிரவே வாகனத்துக்கு டீசல் போட பணம்(?!) கொடுத்து, அவர்களை (அதாவது நான்கு பேரை?!) அனுப்பிவைத்தோம்... போனவர்கள், திரும்பவே இல்லை. அவர்கள் வாகனத்துக்கு டீசல் போடப் போவதாகச் சொல்லிவிட்டு தேக்குமரம் வெட்டியதாக வந்த தகவலைக் கேட்டு எங்களுக்கே அதிர்ச்சி" என்று உயர் அதிகாரிகள் ஃபைலைக் க்ளோஸ் செய்துள்ளதாகத் தகவல். அந்தப் பகுதி போலீஸார் நம்மிடம், "ஆயுதப்படை, சிறப்புப் பட்டாலியன்களில் இருக்கும் போலீஸார், தங்களின் விடுமுறைச் சலுகைக்காக உயர் அதிகாரிகளில் சிலர் சொல்லும் வேலைகளை கண்மூடித்தனமாகச் செய்து இப்படிச் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். இந்த மரக் கடத்தல் விவகாரம், பல மாவட்டங்களில் ஒரு சில தவறான அதிகாரிகளால், ஆண்டாண்டுக் காலமாக  நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட ஒரு உயரதிகாரி சென்னை அம்பத்தூரில் கட்டும் வீட்டுக்கு பயன்படுத்தவே தேக்குமரம் வெட்டப் பட்டிருக்கிறது. மீடியாக்களுக்கு இந்த விஷயம் தெரிந்து அங்கே திரண்டு விட்டதால் வனத்துறையினரும்,'பிடி, அவர்களை விடாதே பிடி'' என்று பிடித்து உட்கார வைத்துள்ளனர். எய்தவன் எங்கோ இருக்க அம்பைப் பிடித்து ஆளே இல்லாத வனத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். இப்படி துரோகத்தில் சிக்கிக் கொள்ளும் காக்கிகளின் அழுகை பல மாவட்டங்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எந்தெந்த மாவட்டங்களில் இப்படி இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது என்ற தகவலை  முதல்வருக்கு போலீசார்  புகார்மனுவாகவே அனுப்பி வைத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close