அடுத்தடுத்து நடக்கும் தீ விபத்துகள்... அச்சத்தில் பொது மக்கள்

கடந்த சில வாரங்களாக திருச்சியில் அடிக்கடி தீப்பிடிக்கும் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு, திருச்சி அரியமங்கலம் குப்பைக்கிடங்கு தீப்பற்றி எரிந்தது. அதைத் தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர். அப்போது எழுந்த புகை மூட்டத்தின் காரணமாகப் பலருக்கு சுவாசப்பிரச்னை, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பிரச்னையைத் தீர்க்க வழிவகை செய்யப்படும் என நேற்று சட்டசபையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தவேளையில், அடுத்தபயங்கரம் ஆரம்பித்துள்ளது. திருச்சி அரியமங்கலம் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துள்ளன. திருச்சி அரியமங்கலம் சிப்காட் தொழிற்சாலையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்தில் முகம்மது ஜான் என்பவருக்குச் சொந்தமான பழைய பிளாஸ்டிக் கழிவுகள் குடோனில் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகம்மது ஜானின், பிளாஸ்டிக் குடோனில் இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயில், பிளாஸ்டிக் கருகுவதால், வெளியாகும் கரும் புகையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்த 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த 32 தீயணைப்பு வீரர்கள் சுமார் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அரியமங்கலம் போலீஸார் நடத்திய விசாரணையில், “மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் தீக்கிரையானது. தீயை அணைக்கக் கூடுதலாக 4 தண்ணீர் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. குடோனுக்கு வெளியே கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகளில் ஏற்பட்ட தீ காற்றின் வேகத்தால் பரவியதே குடோனுக்குள் சென்று முழுவதும் பற்றி எரிந்ததாகத் தெரியவந்துள்ளது.

கடந்த மே 20-ம் தேதி திருச்சி அரியமங்கலத்தில் சிவா எண்டர்பிரைசஸ் என்னும் பெயரில் பூச்சிக் கொல்லி மருந்து சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 7 கோடிப் பொருள்கள் சேதமானது. மேலும் கடந்தவாரம் முசிறி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 லட்சத்துக்கும் மேலான பொருள்கள் முற்றிலும் சேதமடைந்தன. அடுத்தடுத்து உண்டாகும் தீ விபத்துக்களால் திருச்சி மக்கள் பயத்தில் உறைந்து கிடக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!