Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மங்கைகளை அழகு படுத்தும் திருநங்கை காஜல்..!

திருநங்கை

ன்றைக்கு எவ்வளவோ உயர் ரக பியூட்டி பார்லர்கள் இருக்கலாம். 'எங்க பார்லருக்குக் கூட்டம் கூட்டமா ஆட்கள் வர்றாங்க'னு பெருமைப்படலாம். ஆனால், திருச்சி, அரியமங்களத்தில் இருக்கும் 'லுக் மீ' பார்லர், இதிலிருந்து வித்தியாசமானது; ரொம்பவே ஸ்பெஷல். அப்படி என்ன ஸ்பெஷல் கேட்கறீங்களா? இந்த பார்லரை நடத்தும் காஜல், ஒரு திருநங்கை. 'லுக் மீ' பார்லரின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும், புன்னகை பூத்த முகத்துடன் வரவேற்கிறார் காஜல். 

''பார்லர் வைக்கும் ஐடியா எப்படி வந்தது?'' 

''இதுக்கான வித்து, நான்கு வருஷங்களுக்கு முன்னாடி போடப்பட்டது. நான் படிச்ச பி.காம்., என்னை பிச்சை எடுக்கத்தான் வைக்குமோனு ஆரம்பத்தில் ரொம்பவே பயந்துட்டிருந்தேன். இடையில் படிச்ச பியூட்டிஷன் கோர்ஸ்தான் என்னைக் காப்பாத்தும்ன்னு நினைச்சுகூட பார்க்கலை. அப்போ இருந்த திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், என் திறமையைப் பார்த்து உதவ முன்வந்தார். பேங்க் லோன் வாங்க உதவ செய்தார். கொட்டுற மழைன்னுகூட பார்க்காமல், பார்லர் திறப்பு விழாவுக்கு வந்து, திறந்துவெச்சு பாராட்டினதை மறக்கவே முடியாது. அப்போ, சில கடைகளில் கொட்டேஷன் கேட்க போவேன். என்னைப் பார்த்ததும் விரட்டற மாதிரியே பேசுவாங்க. சில சமயம் எனக்குக் கோபம் வந்து, 'நான் ஒண்ணும் டொனேஷன் கேட்க வரலை. கொட்டேஷன் கேட்க வந்தேன்டா'னு திட்டிட்டு வந்துடுவேன். இப்படிப் பல சவால்களைச் சந்திச்சுதான் இந்த பியூட்டி பார்லரை ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் என் பார்லருக்கு வர்றதுக்கே பெண்கள் பயப்படுவாங்க. அப்படியே வந்தாலும் துணைக்கு யாரையாவது கூட்டிட்டு வருவாங்க. இப்போ, அவங்க வீட்டுக் கதைகளில் ஆரம்பிச்சு விடுகதைகள் வரை கலகலனு பேசறாங்க. என் தன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் கிடைச்ச பரிசா நினைக்கிறேன்.'' 

''பியூட்டி பார்லர் வைக்கிறதுக்கு முன்னாடி காஜல் யார்?'' 

''பல திருநங்கைகள் மாதிரி வீட்டைவிட்டு ஒதுக்கப்பட்ட கொடுமை எனக்கு இல்லை. அது எனக்குக் கிடைச்ச வரமா நினைக்கிறேன். அப்பா, அம்மானு குடும்பத்தோடுதான் இருக்கேன். திருச்சி புனித தூய வளனார் கல்லூரில் படிச்சேன். திருநங்கைக்கான மாற்றங்களும் எண்ண அலைகளும் சின்ன வயசுலேயே வந்துடுச்சு. கஷ்டப்பட்டு என் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கிட்டேன். பள்ளி, கல்லூரி படிப்பை நல்லபடியாக முடிச்சேன். என் கல்லூரி நாட்கள் ரொம்ப அழகானது. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை நேர்த்தியாக பண்ணுவேன். என் நுனிநாக்கு ஆங்கில பேச்சால் சில ஹோட்டல்களில் வரவேற்பாளரா இருந்தேன். அழகுக்கலை வகுப்புக்கும் போனேன். என் சுயமதிப்பை இழக்காத வேலைகளை செய்துட்டிருந்தேன். அப்போதெல்லாம் என் வீட்டுக்கே என்னைப் பற்றி தெரியாது. திருநங்கைகளுக்கான அசோஷியேஷன்லயும் பொறுப்பாளராக இருந்தேன். அங்கே நிறைய அனுபவங்கள் கிடைச்சது. அப்புறம்தான் திருநங்கையாக என்னை அடையாளப்படுத்திக்கிட்டேன். திருச்சியிலேயே திருநங்கைகளுக்கான SAFE என்ற அமைப்பைத் தொடங்கினேன். என் வீட்டில் என்னை எல்லோருமே புரிஞ்சு ஏத்துக்கிட்டாங்க.'' 

திருநங்கை

''திருநங்கைகள் பிச்சை எடுப்பது, பாலியல் தொழில் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன?'' 

''யாரும் விருப்பப்பட்டு இப்படிச் செய்யறதில்லை. வாழ வழியில்லாமல்தான் செய்யறாங்க. அதை குற்றம்னு சொன்னா, அந்தக் குற்றத்தில் சமூகத்தின் பங்கும் இருக்குன்னுதான் சொல்வேன். அவங்களுக்கான உரிமைகளைக் கொடுத்து உதவி செஞ்சா, மாற்றம் ஏற்படும். அவங்களுக்கான கல்வியும் சுயதொழில் வாய்ப்பும் தடையில்லாமல் கிடைக்கணும்.'' 

''உங்களின் இந்த நிலையை நினைச்சு கவலைபடறதுண்டா?'' 

''நிச்சயமா இல்லை. என்னைச் சுற்றி இருக்கிறவங்க ஒரு பெண்ணாகத்தான் என்னைப் பார்க்கிறாங்க. நடத்துறாங்க. உலகத்துல என்னை மாதிரி சந்தோஷமா யாருமில்லைனுதான் ஒவ்வொரு நாளும் நினைச்சுக்கிறேன். இப்போ நான் திருச்சி திருநங்கை அசோசியேட் பிரஸிடண்ட். திருநங்கைகளுக்காகப் பல மேடைகளில் பேசிட்டிருக்கேன். ஆண்களுக்காகவும் ஒரு பார்லர் ஆரம்பிக்கும் திட்டம் இருக்கு. ஒரு ஃபேஷன் ஷோ நடத்தும் ஆசை இருக்கு. திருநங்கைகள் சம்பந்தமாக குறும்படம் எடுக்கும் திட்டமும் இருக்கு. எல்லோரையும் மாதிரி என்னாலும் எல்லாத்தையும் செய்ய முடியும்போது எதுக்காக கவலைப்படணும்'' புன்னகையுடன் தன் அழகுக்கலை வேலையில் ஈடுபட ஆரம்பிக்கிறார் கஜோல். 

தன் பார்லருக்கு வருபவர்களுக்கு கஜோல் தரும் டிப்ஸ்... 

* தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். 

*ஃபேஷியல் மட்டும் போட்டால் முகம் மிளிராது. அதற்கேற்ப பிளிசிங், மசாஜ், ஃபேஸ்பாக் போட்டால்தான் நன்றாக இருக்கும். 

* தலைமுடி நன்றாக வளர, ஒரு கப் தயிரைத் தினமும் குடிக்க வேண்டும். சாதம் வடித்த கஞ்சியைத் தலைக்குத் தேய்த்து குளிப்பது நல்ல பலனை கொடுக்கும். 

* அரோமா ஆயில்கள், சுத்தமான தேங்காய் எண்ணெய் சர்ம பராமரிப்புக்கு ஏற்றது. 

* முகம் உடல்போல கால்களுக்கும் பராமரிப்பு அவசியம். உறங்கும் முன்பு இரண்டு சொட்டு விளக்கெண்ணெயை பாதங்களில் தேய்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். 

* உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, பல நோய்களை அண்டவிடாமல் செய்யும். 

* எவ்வளவுதான் ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அழகுப்படுத்திக்கொண்டாலும் மனம் மகிழ்ச்சியாக இல்லை எனில் எல்லாம் வீண்தான். எனவே, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். 

- ரா.நிரஞ்சனா, ஹ.ச.ஷஃபியுல்லா (மாணவப் பத்திரிக்கையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement