வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (04/07/2017)

கடைசி தொடர்பு:20:52 (04/07/2017)

'ஓ.என்.ஜி.சி-க்கு ஆதரவாகப் போராட வேண்டும்' - ஹெச். ராஜா கருத்து!

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் 2002-ம் ஆண்டு எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்படுத்தியது. இதனால் கதிராமங்கலம், தற்போது தண்ணீர் இல்லாமல் பாலைவனமாகி விட்டது. குறிப்பாக, ஆழ்குழாய் கிணற்றுநீரில் எண்ணெய் கலந்து வருவதால், அந்தக்கிராம மக்கள் ஓ.என்.ஜி.சிக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். 

H. Raja


இந்நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி, அங்கு நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் எண்ணெய்க் கசிவு தொடங்கியுள்ளது. இதனால், கிராம மக்களும் தங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே, தீப்பற்றி எரிந்ததை பார்வையிட வந்த அதிகாரிகளை கிராம மக்கள் அனுமதிக்கவில்லை. இதனால், இரு தரப்பினருக்குமிடையே 'தள்ளு, முள்ளு' ஏற்பட்டது. இதனால், போராட்டத்தைக் கலைக்க போலீஸார் கூடியிருந்த மக்கள் மீது தடியடி நடத்தினர். 


இதனால், கதிராமங்கலத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச். ராஜா இந்தப் போராட்டம் குறித்து சென்னையில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கள்ளச் சந்தையை முற்றிலுமாக ஒழிக்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டியால் வரி குறையும்.


எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட இடத்தை, சரி செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது மக்களின் தவறு. ஓ.என்.ஜி.சி-க்கு ஆதரவாக ஒவ்வொரு குடிமகனும் போராட வேண்டும். அது நம் அனைவரின் கடமை.  ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை அழிக்கும் முயற்சியில் இடதுசாரிகள் ஈடுபட்டுள்ளன" என்றார்.