வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (05/07/2017)

கடைசி தொடர்பு:11:38 (05/07/2017)

“வெடிகுண்டு கலாசாரம்... தூக்கில் போடுங்கள்” ‘பாட்ஷா’ விழாவில் நடந்தது என்ன? இவர் வழி... தனி வழியா.?! ரஜினியின் அரசியல் ரூட்! பகுதி 6

பாட்ஷா

1995-ம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’, ரஜினியின் திரைப்பட வரலாற்றின் திருப்புமுனை சினிமா!

ஆர்.எம்.வீரப்பனின் ‘சத்யா மூவிஸ்’ சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்து வந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவோடு மோதல்போக்கைக் கடைபிடித்த ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜானகி அணியை ஆதரித்தார். இதனால் ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்குமான பனிப்போர் தொடர்ந்துகொண்டிருந்தது. 1991-ல் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தபோது ஆர்.எம்.வீரப்பன் எம்.எல்.ஏ-வாக இல்லை. ஆனாலும், பழைய கசப்புகளை எல்லாம் மறந்து ஆர்.எம்.வீரப்பனை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அப்படி அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் ‘பாட்ஷா’ படத்தை 'சத்யா மூவிஸ்' தயாரித்தது.

தனது அரசியல் வாழ்க்கைக்கே ‘பாட்ஷா’ திரைப்படம் உலைவைக்கும் என ஆர்.எம்.வீரப்பன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் வாழ்வை அஸ்தமனம் ஆக்கிய அந்தப் படம்தான் ரஜினியை அரசியலுக்கு இழுத்து வர வித்திட்டது எனலாம். ஆர்.எம்.வீரப்பனுக்கு அஸ்தமனமும், ரஜினிக்கு சிவப்புக் கம்பளமும் விரித்த ‘பாட்ஷா’ படம்தான் 'பஞ்ச்' டயலாக் சினிமாவின் பிதாமகன். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘பாட்ஷா’வில் கதை, நடிப்பு, பாடல்கள், ஆக்‌ஷன் என சகல அம்சங்களும் சிறப்பாக அமைந்ததால் படம் இமாலய வெற்றி பெற்றது. ரஜினி நடித்து அதுவரை வெளிவந்த எல்லாப் படங்களின் வசூலையும், ‘பாட்ஷா’ முறியடித்து விட்டது. 1995 பொங்கல் பண்டிகை அன்று வெளியான ‘பாட்ஷா’ வெள்ளிவிழா கொண்டாடியது. சென்னையில் 184 நாள்கள் ஓடியது. கோவையில் ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது.

‘பாட்ஷா’ திரைப்படத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போதுதான், ‘‘தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பரவியுள்ளது’’ என்கிற பரபரப்பை ரஜினி பற்றவைத்தார். பெரிய புயலைக் கிளப்பிய, அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படக்காரணமான ‘பாட்ஷா’ படத்தின் வெள்ளி விழா, 1995 ஜுலை 14-ஆம் தேதி நடைபெற்றது. சென்னை ‘அடையாறு பார்க்’ ஹோட்டல் விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. மாலைநேரம் வெளியே மழைத்தூறலுடன் ஏரியா குளிச்சி ஆகிக்கொண்டிருக்க...ஹோட்டலுக்கு உள்ளே அனல் வீசத் தொடங்கியது. சத்யா மூவிஸ் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகியிருந்தன. அதற்காகக் குறும்படம் ஒன்றைத் தயாரித்திருந்தார்கள். அதை விழாவில் முதலில் திரையிட்டார்கள். சத்யா மூவிஸ் தயாரித்தப் படங்களில் இருந்து சில காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் காட்சிகளைத் தொடர்ந்து,  ரஜினி நடித்த படங்களின் சீன்களைக் குறும்படத்தில் சேர்த்திருந்தார்கள். அந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு 'எம்.ஜி.ஆருக்குப் பிறகு ரஜினிதான்' என்று உணர்த்துவதுபோன்று காட்சிகள் அமைந்திருந்தன. அநீதியை எதிர்த்து ரஜினி குரல் கொடுத்துப் பேசும் வசனங்களைப் பார்த்து விழாவில் விசில் சத்தம் அதிகளவில் பறந்தது. 

‘‘ ‘பாட்ஷா’ படத்தின் வெற்றியானது, அதன் திரைக்கதையை உருவாக்கிய ஆர்.எம்.வீரப்பனையே சேரும். படத்தின் வெற்றிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் என் நன்றி’’ என்றபடியே பேசத் தொடங்கினார் ரஜினி. ‘‘இந்த விழாவில் முக்கியமான ஒரு பிரச்னை பற்றிப் பேச விரும்புகிறேன். சமீபத்தில் டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு என் மனதை மிகவும் சங்கடப்படுத்தி விட்டது. அதுமட்டுமல்ல, அடுத்தடுத்து பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்கள். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழக முதலமைச்சருக்கு (ஜெயலலிதா) இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாசாரத்தை ஒழிக்கச் சட்டம் கொண்டு வாருங்கள்.

ரஜினி

சிங்கப்பூரில் போதைமருந்து வைத்திருந்ததால், அவர்களை விசாரணை இல்லாமல் தூக்கில் போடுகிறார்கள். அதேபோல் வெடிகுண்டு, துப்பாக்கி வைத்திருப்பவர்களை விசாரணை இன்றி தூக்கில் போடவேண்டும். ஒரு 10 பேரைத் தூக்கில்போட்டால் போதும். எல்லாம் சரியாகிவிடும். குற்றம்செய்தவர்களைப் பிடித்துத் தண்டியுங்கள். ஆனால் ஒரு குற்றவாளிகூட இன்னமும் தண்டிக்கப்படவில்லையே ஏன்? தமிழகப் போலீஸார் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. திறமைவாய்ந்த அவர்களிடம் அந்த இடத்தைக் கொடுங்கள். தலையிடாதீர்கள். அவர்கள் அடக்கிக்காட்டுவார்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டுக் கலாசாரமே இல்லையென ஆக்கிவிடுவார்கள். தமிழகத்தில் இனி வெடிகுண்டு, துப்பாக்கி வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நடந்தால், அதற்கு அரசாங்கமே பொறுப்பு. இதை நான் ரஜினிகாந்தாகச் சொல்லவில்லை. நாட்டில் வாழும் குடிமக்களில் ஒருவனாகச் சொல்கிறேன்.’’

இப்படி ரஜினி பேசிக்கொண்டே போனபோது, மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முகத்தில் எந்தச்சலனமும் இல்லை. ஆனால் உள்ளத்தில் லேசான உதறல் இருந்திருக்கும். ரஜினி பேசி முடித்ததும் அவருடன் கைகுலுக்கி, உபசரித்து தட்டிக்கொடுத்து ரஜினியை வழியனுப்பி வைத்தார் ஆர்.எம்.வீரப்பன். ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பற்றிப்பேசுவதற்கு ‘தில்’ வேண்டும். அது, அப்போது ரஜினியிடம் இருந்தது. ரஜினியின் பேச்சு, உடனடியாக அரசின் காதுகளுக்குப் போய்ச்சேர்ந்தது. அதைவிட ஆர்.எம்.வீரப்பன் அந்தமேடையில் இருந்தார் என்பது அன்றைய அமைச்சர் எஸ்.டி.எஸ் மூலம் ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் இந்தப் பேச்சுக்கு மக்களிடம் ஏக வரவேற்பு. ரஜினியின் வீட்டுக்குத் தினமும் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தார்கள்.

ஆளும் கட்சியில் இருந்து ரஜினிக்கு அடுத்தடுத்து எதிர்ப்புகள் வரத் தொடங்கின. ஆர்.எம்.வீரப்பனுக்கு அதைவிட அதிர்ச்சிகள் காத்திருந்தன. ‘பாட்ஷா’ பட வெற்றி விழாவில் ரஜினி பேச்சுக்குப் பிறகு என்ன நடந்தது?

-தொடரும்.

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க க்ளிக் செய்யவும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்