ஆயுர்வேத மருந்துக்கு 18%; அமெரிக்க மருந்துக்கு 3% வரியா? பிரதமருக்கு சு.சுவாமி திடீர் கோரிக்கை

'அதிகார வரம்பை மீறிச் செயல்படும் புதுச்சேரி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்' என்று பா.ஜ-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இன்று வருகை தந்த பா.ஜ-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’ஜிஎஸ்டி தொடர்பான மென்பொருள் தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக, சில தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டுடன் செயல்படக்கூடியவையாக இருக்கின்றன. அதனால், அந்த நிறுவனங்களைக் கண்காணிக்கவேண்டியது அவசியம்குறித்து பிரதமரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். 

ஜிஎஸ்டி வரிவிதிப்பால், ஆயுர்வேத மருந்துப் பொருள்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் மருந்துப் பொருள்களுக்கு, 3 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த விவகாரங்களில், பிரதமர் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்கள் மீது  மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்வது தவறானது. அப்படி எந்த மாநிலத்தின் மீதும் பா.ஜ.க. ஆளுமை செலுத்தவில்லை. தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க. அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால், இந்த அரசுக்கு ஆபத்து எதுவும் கிடையாது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இப்போதுதான் செயல்படத் தொடங்கியிருப்பதால், இந்த அரசை இப்போது விமர்சிக்க இயலாது. செப்டம்பர் மாதத்துக்குப் பிறகுதான் இந்த அரசின் செயல்பாடுகள் பற்றிப் பேச முடியும்.

புதுச்சேரி மாநிலத்தின் முதல்வரான நாராயணசாமிக்கு சட்டம் தெரியவில்லை. துணைநிலை ஆளுநரைப் பதவி நீக்கம்செய்ய தீர்மானம் நிறைவேற்றியது தவறான செயல். சட்டத்துக்குப் புறம்பான முறையில் புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரக்கூடிய காங்கிரஸ் ஆட்சியை, பிரதமர் மோடி உடனடியாக  டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!