வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (05/07/2017)

கடைசி தொடர்பு:15:58 (05/07/2017)

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக வழக்கு! மத்திய- மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரி இடங்களையும் கவுன்சலிங் மூலம் நிரப்ப உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஜூலை 14-ம் தேதி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவில், ''தமிழக அரசு 2017 - 2018-ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் அட்மிஷன் கையேட்டினை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே கவுன்சலிங் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தில் உள்ள 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரியின் 1650 இடங்கள் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத் துறைச் செயலர், அந்த இடங்கள் மத்திய அரசு மூலம் நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது.

மருத்துவச் சேர்க்கை விதிப்படி ஒவ்வொரு மாநிலத்தின் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் 15% இடங்கள் மட்டுமே அனைத்திந்திய கோட்டாவின் கீழ் மத்திய அரசால் நிரப்பப்படும். மீதமுள்ள 85% இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படும். ஆனால் தற்போதைய கருத்தால் , நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரியின் 85% இடங்கள் அந்தந்த கல்லூரியின் நிர்வாகக் கோட்டாவின் கீழ் நிரப்ப முயற்சி நடைபெறுகிறது. அந்தக் கல்லூரிகளில் ஓர் ஆண்டுக்குச் சுமார் 25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது யு.ஜி.சி நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத்தை விட அதிகமானது. எனவே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரி இடங்களையும் கவுன்சலிங் நிரப்ப உத்தரவிட வேண்டும். அதுவரை அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, இது தொடர்பாக மத்திய , மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.