டாஸ்மாக்கைத் திறக்க கோரி பேனர்... ராஜபாளையம் அட்ராசிட்டி!

ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு அடுத்தபடியாகத் தமிழகமெங்கும் கிராமம் முதல் நகரம் வரை மக்கள் போராடிக்கொண்டிருப்பது டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றுவதற்காகத்தான். இதில், பல கிராமங்களில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியும், மூடப்பட்ட கடைகளைத் திறக்கவிடாதபடி தொடர் போராட்டம் நடத்தியபடியே உள்ளனர். இதுமட்டுமல்லாமல், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலிருக்கும் கடைகளை அகற்றிட மனு கொடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர் மக்கள். 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா ஆவாரம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த மதுபானக் கடை தொடர் போராட்டத்தால் மூடப்பட்டது. இதனால், ஊரே சந்தோஷத்தில் இருக்க, குடிமகன்கள் மட்டும் பெரும் வருத்தத்துக்கு உள்ளானார்கள். மூடப்பட்ட டாஸ்மாக்கைத் திறந்திடக்கோரி இப்பகுதி குடிமகன்கள் இணைந்து, ராஜபாளையம் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கலால்துறை உதவி ஆணையர் , மாவட்ட எஸ்.பி, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் என எல்லா அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து, கடை திறப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படாததால், அரசின் கவனத்தை ஈர்க்க தங்கள் கோரிக்கையை டிஜிட்டல் போர்டாக மக்கள் பார்வைப்படும் இடத்தில் வைத்துள்ளனர்.

அதில், 'குடிமக்களால் வருவாய் ஈட்டும் தமிழக அரசே, குடிமக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை உடனே திறக்க நடவடிக்கை எடு, ஆவாரம்பட்டியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் கடையை மூடாதே, இதனால் தினமும் 2 கி.மீ தூரம் சென்று மது அருந்தி வருவதால் உயிருக்கு ஆபத்து. உயிரைப் பாதுகாக்க உடனே டாஸ்மாக் கடையைத் திறக்க மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு..!' எனத் தங்கள் கோரிக்கையைக் குறிப்பிட்டுள்ளனர்.

இதை, விவரமாகச் செய்தவர்கள், போர்டு வைக்க காவல்துறையிடம் அனுமதி வாங்கவில்லை. அனுமதி பெறாத குற்றத்துக்காக இதே கிராமத்தைச் சேர்ந்த முத்தையா, ரமேஷ், ராதாகிருஷ்ணன் மற்றும் குருசாமி ஆகியோர் மீது ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆனாலும், '’மூடப்பட்ட  எங்க ஊரு டாஸ்மாக் கடை திறக்கும் வரை ஓயமாட்டோம்" என்று நம்பிக்கையுடன் ஊருக்குள் சொல்லி வருகிறார்களாம், கடை அடைப்பால் பாதிக்கப்பட்ட குடிமகன்கள். இவர்களும் நம்பிக்கைதானே வாழ்க்கை என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!