Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவலர்களின் இரக்கமற்ற செயலால் ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது

இந்துக்களின் புனித தலமாக விளங்குவது ராமேஸ்வரம். இங்குள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரசித்திப் பெற்ற இந்த கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இக் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளன. மேலும், கோயிலின் மதில் சுவரை ஒட்டியுள்ள கோயில் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக வடக்கு ரதவீதி பகுதியில் இருந்த கோயிலுக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு ரத வீதி நுழைவுப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் போடப்பட்டு அங்கு ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தைகள், வயதானோர் மற்றும் ரத வீதியைச் சுற்றி குடியிருப்போர் என அனைவரும் கால் நடையாகவே செல்லும் நிலை உள்ளது. மேலும், திடீரென உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும் யாத்திரீகர்களையோ, அப்பகுதியில் வசிப்பவர்களையோ மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.அதே வேளையில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் அவர்களது குடும்பத்தினர் என பலரது வாகனங்களை நீதிமன்ற உத்தரவையும் மீறி கோயிலின் பிரதான வாசல் வரை போலீஸார் அனுமதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று போலீஸாரின் கெடுபிடியினால் ஒரு உயிர் பலியாகியுள்ளது.

ராமேஸ்வரம் தெற்கு ரதவீதியில் வசிப்பவர் சஞ்சீவி (50), புரோகிதரான இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரம் ஆகும் என தகவல் வரவே அப்பகுதியில் இருந்த ஆட்டோவை அழைத்துள்ளனர். ஆனால் தெற்கு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் ஆட்டோவை அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லி மறுத்துள்ளனர்.

வேறு வழியின்றி சரக்கு ஏற்றி செல்லும் டிரை சைக்கிளில் சஞ்சீவியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். ஆனால், சிகிச்சைக்குச் செல்ல தாமதம் ஏற்பட்டதால் சஞ்சீவி வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்த சஞ்சீவியின் உடலை அதே டிரை சைக்கிளில் எடுத்து வந்து இன்று அடக்கம் செய்தனர்.

காவல்துறை உங்கள் நண்பன் என சொல்லிக் கொள்ளும் காவலர்களின் இரக்கமற்ற செயலால் ஒரு உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது.

ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களுக்கு சல்யூட் செய்து தடுப்புகளை திறந்து விடும் காவலர்கள் இனியாவது நோயாளிகளின் நிலை அறிந்து நடந்து கொள்வார்களா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement