3டி திரையரங்குகள் இனி அவசியம்!.. ‘2.0’ குழுவின் மிகப்பெரிய திட்டம்!

ரஜினி, ஷங்கர், அக்‌ஷய்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி இவர்களுடன் லைகா நிறுவனமும் இணைந்ததில் பிரமாண்டமாகத் தயாராகிவருகிறது 'எந்திரன்' இரண்டாம் பாகமான ‘2.0’. 

2.0

படத்தின் பட்ஜெட் 400 கோடிக்கு மேல், படமும் 3டியில் உருவாகிவருகிறது. முதல் பாகத்தின் தயாரிப்பு, டெக்னாலஜி என அனைத்துமே இரண்டாம் பாகத்தில் அப்டேட் வெர்ஷன். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ். ஆனால், படம் வெளியாவதில் சின்ன பிரச்னை ஒன்று இருக்கிறது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் 3டி செட்டப்  இல்லை. படத்தை 3டியில் மட்டுமே வெளியிட தயாரிப்பு தரப்பு விரும்புகிறது. எனவே, லைகா நிறுவனம் ‘3டி டிஜிட்டல் மீட்’ என்ற கருத்தரங்கை இன்று சென்னையில் நடத்தியது. 

திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பல திரையரங்க உரிமையாளர்களை இந்தக் கருத்தரங்குக்கு அழைத்திருந்தது லைகா. “டால்ஃபி அட்மாஸ், க்யூப் எனப் பல டெக்னாலஜிகளை ரசிகர்களுக்காக அப்டேட் செய்தது போல, 3டியும் இனி திரையரங்கில் அவசியம். டிஜிட்டலில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த திரையரங்கை அப்டேட் செய்ய வேண்டும். சீனாவில் 20,000-க்கும் மேல் 3டி திரையரங்குகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 1,500 மட்டுமே உள்ளன', என்று சாதாரண தியேட்டரை 2.0 அப்டேட் வெர்ஷனாக மாற்றுவது குறித்து பேசினார் லைகா  செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம். 

ரஜினியின் ‘2.0’ படத்தை 3டி-யில் ரிலீஸ் செய்தால் மட்டுமே தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு லாபம் கிடைக்கும். அதனால் அனைத்து திரையரங்கையும் 3டி-யில் மாற்றுவது குறித்து இப்போதே பேசத்தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம். 

ஜிஎஸ்டி பிரச்னைக்குச் சரியான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. திரையரங்க டிக்கெட் விலை உயர்ந்தால், மக்கள் எப்படி திரையரங்குக்கு வருவார்கள் என்ற சந்தேகமும் இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்குள் ‘2.0’ வுக்காக 3டி திரையரங்காக மாற்ற வேண்டுமா?என்ற யோசனையில் இருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!