வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (05/07/2017)

கடைசி தொடர்பு:21:00 (05/07/2017)

 வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தில் கொலைவெறித் தாக்குதல்: பதற்றத்தில் சிவகங்கை

சிவகங்கையில், மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் அறிவித்தனர்.


மாநில நிர்வாகியான பார்த்திபன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆட்சியரை பார்க்க வந்தபோது பார்க்கவில்லை. ஆகையால், ஆட்சியர் வளாகத்திலேயே, "ஆட்சியர் எங்களைப் பார்க்க மறுக்கிறார். ஆறாவது முறையாக நான் வந்திருக்கிறேன். சந்திக்க மறுக்கிறார்" என்று பத்திரிகையாளர்களிடம் குற்றம் சாட்டினார். மேலும், ஆட்சியர் மலர்விழியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

அதேபோல கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கமும் ஆட்சியரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்தது. ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம் என்று ஆட்கள் மூலமாக தூதுவிட்டதும் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இன்று சமாதானப் பேச்சு வார்த்தையை  தொடங்கினார் ஆட்சியர் மலர்விழி.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து கீழே இறங்கியதும், ஆட்சியருக்கு ஆதரவான வருவாய்த்துறை விடியல் சங்கம் தாக்குதலில் ஈடுபட்டது. இத்தாக்குதலில், போராட்டம் நடத்த இருந்த சங்க மாநில நிர்வாகி பார்த்திபன், மாவட்ட நிர்வாகி தமிழரசன், அசோக் ஆகியோர்களுக்கு காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இதற்குப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. ஆனாலும் எங்களின் சந்தேகமெல்லாம் ஆட்சியரையே சுற்றிவலம் வந்துகொண்டிருக்கிறது" என்கிறார்கள் நிர்வாகிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க