குற்றால படகு சவாரியிலும் பங்கு கேட்கும் ஜிஎஸ்டி வரி!

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக படகு சவாரிக்கான கட்டணமும் உயர்ந்திருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குற்றாலத்தில் ஜூன் முதல் வாரத்தில் சீசன் தொடங்கும். தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில் தொடங்கும் இந்த சீசன் சிறப்பாக இருந்தால் ஆகஸ்ட் மாதம் வரையிலும் நீடிக்கும். மலைகளில் தவழும் மேகக் கூட்டத்தின் பின்னணியில் தெரியும் பசுமையும் சாரல் மழையின் குளுமையும், மலை முகட்டில் இருந்து தவழ்ந்து வரும் இதமான தென்றல் காற்றின் உற்சாகமும் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கொள்ளைக் கொள்ளும். அத்துடன், மூலிகைக் காடுகளின் ஊடாக ஓடோடி வரக்கூடிய அருவிகளில் குளித்து மகிழ்வது மனதையும் உடலையும் புத்துணர்வு பெறச் செய்வதாக அமையும். 

குற்றாலம்

குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, பழைய குற்றாலம், புது அருவி என முக்கியமான அருவிகள் உள்ளன. அத்துடன், குற்றாலத்தின் அருகில் உள்ள குண்டாறு அணைக்கட்டைச் சுற்றிலும் நெய்யருவி மற்றும் தனியாருக்குச் சொந்தமான பல அருவிகள் இருக்கின்றன. குற்றாலத்தின் அருவிகளில் எப்போதும் கூட்டம் அதிகம் இருப்பதால் குடும்பத்துடன் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குண்டாறு அணையின் அருகில் உள்ள இந்த அருவிகளுக்கு விரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்துடன், குற்றாலத்தின் அருகில் கேரள எல்லையில் உள்ள கும்பாவுருட்டி அருவி மற்றும் பாலருவிக்கும் பயணிகள் செல்வது வழக்கம்.   

இந்த ஆண்டு குற்றாலத்தில்  ஜூன் மாதம் முதல் வாரத்தில் சீசன் தொடங்கியது. கேரளாவில் தொடங்கிய தென் மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்த்ததால் அருவிகளில் தண்ணீர் அதிகமாக வந்தது. சில நாள்கள் அனைத்து அருவிகளிலும் குளிக்க முடியாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பின்னர், மலைப் பகுதியில் மழை குறைந்தது. அதனால் அருவிகளில் தற்போது குறைவான அளவுக்கே தண்ணீர் வருகிறது. இந்த அருவிகளில் குளிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருவதால் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

பொதுவாக குற்றாலத்தில் சீசன் தொடங்கிய ஒரு வாரத்திலேயே ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் படகு சவாரி தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு படகு சவாரி நடக்கும் வெண்ணமடைக் குளம் நிரம்பவில்லை. போதுமான தண்ணீர் இல்லாததால் படகு சவாரி நடத்துவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. குற்றால சீசன் தொடங்கி ஒரு மாத காலத்தைக் கடந்த பின்னரும் படகு சவாரி தொடங்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். குடும்பத்துடன் வருபவர்கள் குழந்தைகளுடன் ஆனந்தமாக படகு சவாரி செல்லமுடியாத நிலைமை இருந்ததால் அதிருப்தி அடைந்தனர்.

சுற்றுலா படகு

தற்போது சாதகமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து,  இன்று படகு சவாரி தொடங்கப்பட்டது. தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் நடைபெறும் படகு சவாரியை நெல்லை எம்.பி-யான பிரபாகரன், நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த படகுக் குழாமில் இருவர் செல்லும் வகையிலான 5 மிதி படகுகளும் 4 பேர் செல்லும் வகையிலான 20 மிதி படகுகள் உள்ளன. அத்துடன் குடும்பத்துடன் செல்லும் வகையிலான 5 துடுப்புப் படகுகளும் உள்ளன. அத்துடன், தனி நபர்கள் ஹாயாகச் செல்லும் வகையிலான ஹயாக் வகைப் படகுகள் 4 உள்ளன.

படகுக் குழாமில் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. இருவர் செல்லும் மிதி படகுகளுக்கு மணிக்கு 230 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரை மணி நேரத்துக்கு 115 கட்டணம் செலுத்தலாம். நான்கு பேர் பயணம் செய்யும் மிதி படகுக்கு அரை மணி நேரத்துக்கு ரூ.145 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குடும்பத்தினர் செல்லும் துடுப்புப் படகுக்கான கட்டணமாக ரூ.180 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி நபர் செல்லும் ஹயாக் வகைப் படகுக்கான கட்டணமாக அரை மணி நேரத்துக்கு 90 வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கட்டணம் சற்று உயர்ந்துள்ளது. 

இதுபற்றி தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ’’இந்த ஆண்டு குளத்துக்கு தண்ணீர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே நீண்ட தாமதத்துக்குப் பின்னர் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெண்ணமடைக் குளத்தில் 6 அடி தண்ணீர் உள்ளது. அதனால் படகில் செல்லும் பயணிகளுக்கு உயிர் காக்கும் கவசங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றைக்  கட்டாயமாக அணியுமாறும் வலியுறுத்துகிறோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ஒவ்வொரு வகையான படகுக்கும் 5 ரூபாய் கட்டணம் அதிகரித்து இருக்கிறோம். ஜிஎஸ்டி வரியின் காரணமாகவே இந்தக் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!