கள்ள லாட்டரி அதிபர் மீது குண்டாஸ், 11 போலீஸார் இடமாற்றம்! பரபரக்கும் திருச்சி | The lottery mafia leader arrested under Goondas act... 11 policemen transferred!

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (06/07/2017)

கடைசி தொடர்பு:14:01 (06/07/2017)

கள்ள லாட்டரி அதிபர் மீது குண்டாஸ், 11 போலீஸார் இடமாற்றம்! பரபரக்கும் திருச்சி

லாட்டரி

“லாட்டரி மோகத்தால் உழைப்பாளிகள்தான் அதிகமாகச் சீரழிகிறார்கள்!” என்று கூறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் லாட்டரிக்குத் தடைவிதித்தார். ஆனாலும் தொடர்ந்து லாட்டரி விற்பனை ஜோராக நடந்தது. குறிப்பாக, திருச்சியை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்தது.

இதற்கு மூளையாகச் செயல்பட்டுவந்த, லாட்டரி அதிபர் எஸ்.வி.ஆர். மனோகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 20 பேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதும், இந்தக் கும்பலுக்குத் துணைபோனதாக 11 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதும்தான் பேரதிர்ச்சி. அதைவிட லாட்டரி அதிபர் எஸ்.வி.ஆர் மனோகரன் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்திருப்பது ஹாட்நியூஸ்.

மனோகரன்இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த சித்திரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரின் மகன்கள் வரதன், மனோகரன் ஆகியோர், குடும்ப வறுமையின் காரணமாக திருச்சி உறையூர் சர்ச் காலனியில் குடியேறினார்கள். முதலில் ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தியவர்கள், புத்தூர் பகுதியில் எஸ்.வி.ஆர் மெஸ் என்ற பெயரில் சிறு ஹோட்டல் நடத்தத் தொடங்கினர். லாட்டரி அதிபர் மார்ட்டினுடன் பழக்கம் ஏற்படவே, ஹோட்டல் தொழிலுடன், லாட்டரி தொழிலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். லாட்டரி பிசினஸில் இவர்கள் உச்சத்தை அடைந்தனர்.

திருச்சி மட்டுமல்லாமல் தஞ்சை, நாகப்பட்டினம், கரூர், ராமநாதபுரம் எனப் பல மாவட்டங்களிலும் லாட்டரி விற்பனையில் இறங்கியதுடன், குறுகிய காலத்திலேயே இத்தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்கள்..

மனோகரனின் லாட்டரி தொழில் குறித்துப் பேசிய போலீஸார், “ஒருகட்டத்தில் மார்ட்டினுக்கும், எஸ்.வி.ஆர். பிரதர்ஸ்-க்கும் தொழில்போட்டி ஏற்படவே, மார்ட்டினிடம் இருந்து பிரிந்தனர். ஆனாலும் லாட்டரி தொழிலை மனோகரன் விடவில்லை. இந்நிலையில்தான் ஜெயலலிதா, லாட்டரிக்குத் தடைவிதித்தார். திருச்சியில் லாட்டரி தொழிலில் கொடிகட்டிப் பறந்த அதிபர்கள்கூட, தங்களின் தொழிலை மாற்றிக்கொண்டனர். ஆனால், மனோகரனால் இந்தத்தொழிலை கைவிட மனமில்லை.

அதனால், டெக்னாலஜியைப் பயன்படுத்தி, லாட்டரிகளை விற்க ஆரம்பித்தார் அவர். வெளிமாநில லாட்டரி சீட்டுகளைப் பிளாக் மார்க்கெட்டில் வாங்கி நேரடியாகவும், ஏஜென்டுகள் மூலமாகவும், செல்போன் மற்றும் லேப்டாப் மூலமாகவும் விற்றார்.

உழைக்கும் ஏழைமக்கள் மற்றும் நடுத்தர மக்களைக் குறிவைத்து தன் பிசினஸை நகர்த்தினார் மனோகரன். துண்டுச்சீட்டில் நம்பர் எழுதிக்கொடுப்பார்கள். அதிர்ஷ்டம் விழுந்தால், ‘பம்பர் பரிசு’ என ஆசைவார்த்தைகளை அள்ளித்தெளித்து, கோடிகளை அள்ளினார்கள். தங்கள் தொழில் பாதிக்கக்கூடாது என்பதால், தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களோடு நெருக்கம் காட்டினார்.

திருச்சியில் உள்ள காவல்நிலையங்களில், மனோகரன் மீது சுமார் 43-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆனாலும், திருச்சி முழுக்க, லாட்டரி விற்பனை நின்றபாடில்லை. லாட்டரி தொழிலில் நாள்தோறும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்தார். கூடவே, தமிழகம் முழுவதும் நிலங்கள் வாங்கிக்குவித்ததோடு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில், ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டதும், துணை கமிஷனர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார், லாட்டரி விற்பனையைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். அடுத்த சில தினங்களில் திருச்சி பால்பண்ணையில் லாட்டரி விற்ற கும்பல் சிக்கியது. ஆனாலும், வரதராஜனையும், அவரது தம்பி மனோகரனையும் போலீஸாரால் நெருங்க முடியவில்லை.

போலீஸாரின் தீவிர வேட்டையில் மூன்று மாதங்களுக்கு முன்பு வரதன் சிக்கினார். அப்போதும், மனோகரன் மிஸ்ஸிங். இந்நிலையில் ‘மனோகரன் ஊருக்கு வருவதே இல்லை’ என லோக்கல் போலீஸார், கமிஷனர் அருணுக்கு அறிக்கை கொடுத்தனர். இதில் சந்தேகமடைந்த போலீஸ் கமிஷனர் அருண், ரகசிய விசாரணை நடத்தியதில், லாட்டரி அதிபர் மனோகரன் திருச்சிக்கு அடிக்கடி வந்துபோவதும், அவருக்குச் சில போலீஸார் துணைபோவதும் தெரியவந்தது.

இதில் கடுப்பான கமிஷனர், உறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து, மனோகரனுக்கு உதவிவந்த போலீஸாரின் செல்போன்களைக் கண்காணிக்க உத்தரவிட்டார். போலீஸாரின் தீவிர வேட்டையில் கடந்த 21-ஆம் தேதி சென்னையில் தங்கியிருந்த மனோகரன் திருச்சிக்கு வந்தபோது கைதுசெய்யப்பட்டார். அதோடு, மனோகரனின், விநியோகஸ்தர்களான புத்தூர் தங்கதுரை, கல்லாங்காடு சிவா, நாச்சிக்குறிச்சி குண்டு கண்ணன், அரியமங்கலம் பாபு, பாலக்கரை கார்த்திக், காந்தி மார்க்கெட் கணேசன் என 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், எஸ்.வி.ஆர் மனோகரன், திருச்சி முழுக்க உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் பணத்தை அள்ளிக்கொடுத்துள்ளார் என்பதும், அதனால் லாட்டரி விற்பனையை போலீஸார் கண்டுகொள்ளவில்லை என்பதும், பணம் வாங்கியதால் மனோகரனுக்கு விசுவாசமாக போலீஸார் செயல்பட்டதும் தெரியவந்தது. இந்தத் தகவலையடுத்து, இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், சிவக்குமார், கோசலைராமன், துணை ஆய்வாளர்கள் சண்முகப்பிரியா, மதியழகன் உள்பட 11 காவல்துறையினரை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

மனோகரனை வெளியில் விட்டால் சரிவராது என்று கருதிய கமிஷனர் அருண், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததுடன், அப்படி விற்கப்படும் சீட்டில் பரிசு விழுந்தாலும், அந்தப் பணத்தை அளிக்காமல் ஏழை மக்களையும், கூலித் தொழிலாளர்களையும் ஏமாற்றி வந்ததால் மனோகரனைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் அடைக்க உத்தரவிட்டார்.

லாட்டரி தொழிலில் கொடிகட்டிப் பறந்த மனோகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கு உதவிய போலீஸார் மாற்றப்பட்டிருப்பது, திருச்சியில் பெரும் அதிர்வை உண்டாக்கியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்