‘பன்னீர்செல்வமே முதல்வராக இருந்திருக்கலாம்!’  -‘கொங்கு லாபி’யை கதிகலக்கும் தினகரன் #VikatanExclusive | Panneerselvam could've been the CM - TTV Dinakaran's U-turn shock

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (06/07/2017)

கடைசி தொடர்பு:14:42 (06/07/2017)

‘பன்னீர்செல்வமே முதல்வராக இருந்திருக்கலாம்!’  -‘கொங்கு லாபி’யை கதிகலக்கும் தினகரன் #VikatanExclusive

தினகரன்

பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் டி.டி.வி.தினகரன். இந்தச் சந்திப்பில் அரசியல்ரீதியான விஷயங்கள் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானாலும், குடும்ப நிலை பற்றியே சசிகலா அதிகம் கவலைப்பட்டிருக்கிறார். ‘எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்தும் குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கை பற்றியும் சசிகலாவிடம் விரிவாக எடுத்துரைத்தார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முதல்வர் ஜெயலலிதா குறித்தும் கட்சியில் தன்னுடைய செயல்பாடுகள் குறித்தும் சசிகலாவின் கணவர் நடராசன் அளித்த பேட்டி அ.தி.மு.கவுக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க காலத்தில் இருந்தே கட்சிக்காக எந்த வகையில் எல்லாம் பாடுபட்டேன் என்பதையும் நடராசன் விளக்கியிருந்தார். அ.தி.மு.கவுக்குள் தங்களுக்கான உரிமை குறித்து, அவர் விளக்குவதாகவே இந்தப் பேட்டி அமைந்தது. இந்தப் பேட்டியைத் தினகரன் ரசிக்கவில்லை. கூடவே, நடராசனும் திவாகரனும் தனக்கு எதிராகச் செயல்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர் கவனித்தே வந்தார். 'ஆகஸ்ட் 5 ஆம் தேதியோடு நான் கொடுத்த கெடு முடிகிறது. அதன் பிறகு என்னுடைய நடவடிக்கைகளைப் பாருங்கள்' என முதல்வர் பழனிசாமிக்குச் சில நாள்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தார் தினகரன்.

கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து தினகரன் முழுமையாக ஒதுங்கியிருப்பதை அவருடைய ஆதரவாளர்கள் விரும்பவில்லை. 'மீண்டும் அவர் பழையபடி கட்சிப் பணியில் ஈடுபடுவார்' என உறுதியாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார் தினகரன். இந்தச் சந்திப்பு குறித்து பேட்டியளித்த தினகரன், 'இரண்டு அணிகளையும் நிச்சயமாக இணைக்க முடியும். இதுகுறித்து பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை வழங்கி உள்ளார். ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் கட்சி பணிகளைத் தொடங்க இருக்கிறேன். அணிகள் இணையும் என்ற நம்பிக்கையில்தான் 60 நாள்களாக விலகி இருக்கிறேன். பயத்தின் காரணமாக அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு எதிராகப் பேசி வருகிறார். விரைவில் அவர் என்னுடன் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாகும்' என்றார். கூடவே, நடராசன் பேட்டி குறித்து கேட்டபோதும், ‘அவர் அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் அல்ல' எனவும் விளக்கினார். 

சசிகலாமன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம். “கட்சி அலுவலகத்துக்குள்கூட தினகரனால் நுழைய முடியவில்லை. அந்தளவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக உள்ளனர். 'ஒருமுறை தினகரனிடம் இறங்கிப் போய்விட்டால், மலையளவு பாதிப்பு ஏற்படும்' என்பதை உணர்ந்து வைத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. எம்எல்ஏ-க்களை வைத்து எடப்பாடி பழனிசாமியை அசைத்துப் பார்க்கவும் முடிவு செய்தார் தினகரன். ஆனால், இதைப் பற்றியெல்லாம் முதல்வர் பழனிசாமி கவலைப்படவில்லை. நேற்று சசிகலாவைச் சந்தித்த தினகரன், இதைப் பற்றித்தான் விரிவாகப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பில் பேசிய தினகரன், 'நமக்குள் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதால், கட்சியில் நம் குடும்பத்தினர் யாருக்கும் எந்த முக்கியத்துவமும் கிடைக்கப் போவதில்லை. உங்களையும் சேர்த்து அவர்கள் விலக்கி வைத்துவிடுவார்கள். நாம் நினைத்தது போல எடப்பாடி பழனிசாமி இல்லை. முதல்வர் பதவியில் பன்னீர்செல்வமே தொடர்ந்திருக்கலாம். நமக்கு ஆதரவாக வெற்றிவேல் பேசியபோது, எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்களோ, நமது குடும்பத்துக்கு எதிராகப் பேசுகின்றனர். சிறைத் தண்டனை முடிந்து நீங்கள் வெளியே வந்தாலும், 'அரசியல் பணிகளில் நீங்கள் ஆர்வம் காட்ட மாட்டார்' என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நினைக்கின்றனர்.

பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களை நாம் மிகச் சாதாரணமாக நினைத்துவிட்டோம். கட்சிக்குள் நாம் பலமாக கால் ஊன்ற வேண்டும். நமது குடும்பத்திலேயே எனக்கு மட்டும்தான் ஜெயலலிதா எம்பி சீட் கொடுத்தார். 'சிறப்பாக கட்சி வேலை பார்த்தேன்' என்ற பெயரும் கிடைத்தது. நமது குடும்பத்தில் வேறு யாருக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மற்றவர்கள் விரும்பி வந்தாலும், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா மீதுள்ள மனஸ்தாபத்தில்தான் நடராசன் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது கட்சியிலும் ஆட்சியிலும் நமக்கு எந்தப் பிடிமானமும் இல்லை. பன்னீர்செல்வம் பக்கம் இருந்த எம்எல்ஏ-க்களையும் எடப்பாடி பழனிசாமி தன்பக்கம் திருப்பிவிட்டார். இனியும் நாம் அடித்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. அடுத்த மாதத்தில் இருந்து கட்சிப் பணிகளைத் தீவிரமாகக் கவனிக்க இருக்கிறேன்' என விவரித்திருக்கிறார். சசிகலாவும், 'குடும்பத்தில் ஒற்றுமை இருந்தாலே, அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எந்தக் காரியம் என்றாலும் நிதானமாகவே செய்' எனக் கூறிவிட்டு, சில ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்" என்றார் விரிவாக. 

“சிறையில் சசிகலா-தினகரன் சந்திப்பு குறித்த தகவல்கள் அனைத்தும் முதல்வர் கவனத்துக்கு உடனுக்குடன் சென்றுவிட்டது. கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் கிடைத்துள்ள வாய்ப்பை விட்டுக் கொடுக்கவும் அவர் தயாராக இல்லை. ‘சசிகலா குடும்பத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால்தான், மக்கள் தலைவராக வர முடியும்' எனக் கொங்கு மண்டல அமைச்சர்கள் அவரிடம் உறுதியாகக் கூறிவிட்டனர். இதுகுறித்து, பா.ஜ.க தொடர்பில் இருக்கும் முக்கிய நபரிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ‘திவாகரனுடன் எனக்கு எந்த கருத்து மோதலும் இல்லை' என தினகரன் கூறுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறார். 'குடும்பச் சண்டையில் அவர்களே வீழ்வார்கள்' என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இருவரும் இணைந்துவிட்டால், ஆட்சிக்கு எதிராக எதையாவது செய்வார்கள் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார். சசிகலா உறவுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் இருக்கும் உளவுத்துறை" என்கிறார் கொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்.


டிரெண்டிங் @ விகடன்