Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“மரம் வளர்த்தால் தங்க மூக்குத்தி, நாணயம்” - கிராமப் பெண்களை உற்சாகப்படுத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் #CelebrateGovtSchools

மாணவர்களுடன் ஆசிரியர் தமிழரசன்

“ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவங்க செஞ்ச பண உதவியாலும்தான் இன்றைக்கு எங்கள் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையான வசதிகளோடு சிறப்பாக இயங்கி வருது. பள்ளிக்கு உதவி செய்த மக்களின் நலனில் அக்கறை செலுத்த நினைச்சப்போ, உருவானதுதான் தங்க மூக்குத்தி மற்றும் கால் பவுன் தங்கக் காசு வழங்கும் திட்டம்" என அன்பாகப் பேசுகிறார் தமிழரசன். விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், பள்ளிகுளம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித ஆசிரியர். தனது சமூகப் பணியில் மாணவர்களையும் இணைத்துச் சிறப்பாகச் செய்துவருகிறார். 

“மாணவர்கள் படிப்புடன், பயனுள்ள சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தணும் என்பது என் எண்ணம். சுகாதாரமான, ஆரோக்கியமான சூழலில் மக்கள் வசிக்கணும். அதுக்காக, மூணு வருஷங்களுக்கு முன்னாடி 'மாபெரும் மரம் வளர்ப்புப் போட்டி'யை அறிமுகப்படுத்தினேன். ஆண்டுதோறும் நானும் மாணவர்களும் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் போய், மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுப்போம். அடிக்கடி அந்த வீடுகளுக்குப் போய் மரத்தை நல்லா வளர்க்கிறாங்களானு பார்ப்போம். பள்ளி ஆண்டு விழாவின்போது, அந்த ஆண்டில் சிறப்பாக மரம் வளர்த்த மூன்று வீட்டின் குடும்பத் தலைவிகளுக்குத் தங்க மூக்குத்தியும், 10 பெண்களுக்குச் சிறப்புப் பரிசும் வழங்குவோம். இந்தத் திட்டத்துக்கு நல்ல பலன் கிடைச்சது. இப்போ, பெரும்பாலான வீடுகளில் ஒரு மரமாவது இருக்கு" என்கிற தமிழரசன், தற்போதைய புதிய திட்டம் பற்றி கூறுகிறார். 

மாணவர்களுடன் ஆசிரியர் தமிழரசன்

"எங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லை. அதனால், பள்ளிக்கு எதிர்புறத்தில் இருக்கிற ஒன்றரை ஏக்கர் நிலத்தைக் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியோடு மைதானமாகப் பயன்படுத்தி வந்தோம்.தங்கம் வழங்கும் திட்ட துண்டு பிரசுரம் ஆனால், இந்த ஊரின் 415 வீடுகளில், 80 வீடுகளில் மட்டுமே கழிப்பிட வசதி இருக்கு. மத்தவங்க இந்த மைதானத்தைத் திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இதனால், மைதானத்தைப் பயன்படுத்துறதில் பிரச்னை ஏற்பட்டுச்சு. சுகாதாரச் சீர்கேடும் உண்டாக ஆரம்பிச்சது. இதைச் சரிசெய்ய நினைச்சேன். பேரன்ட்ஸ் மீட்டிங் ஏற்பாடு செஞ்சு, திறந்தவெளி கழிப்பிடத்தால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி வீடியோக்கள் மூலமா எடுத்துச் சொன்னேன். வீடுகளில் கழிப்பிடம் கட்ட அரசு வழங்கும் மானியங்கள் பற்றியும் சொன்னேன். என் முயற்சிக்குப் பலனாக, 40 வீடுகளில் கழிப்பிடம் கட்டினாங்க. ஆனால், அவங்களில் சிலர் மழைக்காலத்தில் விறகுகள் நனையாமல் பாதுகாக்கும் ஸ்டோர் ரூமாகக் கழிப்பிடத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்சதைப் பார்த்து நொந்துபோனேன். 

என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ, 'தங்க மூக்குத்தி' மாதிரி இன்னொரு திட்டத்தை கொண்டுவரலாம்னு முடிவுப் பண்ணினேன். 'கழிப்பறை கட்டுங்க... கால் பவுன் தங்கம் வெல்லுங்க' என்ற திட்டத்தைத் தொடங்கினேன். நானும் பள்ளிச் சுற்றுச்சூழல் மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் மாணவ, மாணவிகளும் ஒவ்வொரு வீடாகப்போய் துண்டுப் பிரசுரம் கொடுத்து, திட்டத்தைப் பற்றி விளக்கினோம். இப்போ, பலரும் கழிப்பறையை முறையாகப் பராமரிச்சுட்டிருக்காங்க. திறந்தவெளியைப் பயன்படுத்துவது ரொம்பவே குறைஞ்சு இருக்கு. இனி, ஆண்டுதோறும் கால் பவுன் தங்க நாணயமும், பத்து குடும்பத்துக்கு சிறப்புப் பரிசும் கொடுக்கப்போறோம்'' என்கிற தமிழரசன் பேச்சில் சமூக அக்கறை ஒளிர்கிறது.

ஊர் மக்களுடன் ஆசிரியர் தமிழரசன் 

"ஓர் ஆசிரியரின் கடமை என்பது பள்ளியோடு முடிஞ்சுடலை. சமூகத்தில் மாற்றங்களை உருவாக்குவதிலும் தூண்டுகோலாக இருக்கணும். அதனால், என் செலவில் தொடர்ந்து இந்தத் திட்டங்களையும் செயல்படுத்துவேன். வீடுதோறும் மரங்களும், கிராமத்தின் எல்லா மனிதர்களும் ஆரோக்கியமாகவும் இருக்கணும். எதிர்காலத்தில் கிராம மக்கள் எல்லோரையும் இயற்கை விவசாயம் செய்யவைக்கும் எண்ணமும் இருக்கு.'' என்று முத்தாய்ப்பாகச் சொல்லி வியக்கவைக்கிறார் தமிழரசன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close