வெளியிடப்பட்ட நேரம்: 20:36 (06/07/2017)

கடைசி தொடர்பு:20:36 (06/07/2017)

தலைவர்களுக்கு கரன்ஸி மாலை... கம்யூனிஸ்ட் கட்சிகளின் திராவிட ஆசை!

“இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம்” என்ற கோஷத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரசார இயக்கம் ஒன்றைத் துவக்கி,  கடந்த மாதம் 29ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது 
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியக்குழு உறுப்பினர்கள் தா.பாண்டியன், ஆர்.நல்லகண்ணு மற்றும்  சி.மகேந்திரன் உள்ளிட்டத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தலைவர்கள், ஜி.எஸ்.டி வரிவிதிப்பை கொண்டுவந்த பிரதமர் மோடியை வறுத்தெடுத்தனர்   
 “வெளிநாட்டுப் பிரச்னைகளுக்கு சமூக வலைத் தளங்களில் உடனடியாக எதிர்வினையாற்றும் பிரதமர் மோடி, டெல்லியில் 42 நாட்களாக விவசாயிகள்  நடத்திய போராட்டம் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரானதாக பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. ஒருபக்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லக்கு தூக்கிக்கொண்டு, விவசாயிகள், தொழிலாளர் வர்க்கத்தினரை நசுக்குகிறது. 'ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம்' என்றனர்; பின்னர்,‘ஒரே தேசம், ஒரே வரி’என்றார்கள் என்று சொல்லி ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தி மக்களை வாட்டி வதைக்கிறார்கள். தற்போது ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என முழங்க ஆரம்பித்துள்ளார்கள்.  இப்படி எதைச் செய்தாலும் உடனே 'புதிய இந்தியா பிறந்துவிட்டது' என்றும் மறக்காமல் சொல்லிவிடுகிறார்கள்.  

‘அமைச்சர்கள் அரசுக்கு இந்தியில்தான்  கடிதம் எழுத வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வெறும் 10 மாநிலங்களில் மட்டுமே, பேசப்படும் இந்தி மொழியை இந்தியா முழுக்க மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதை கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது.

 தமிழகத்தில் சமீப காலமாக நிலவிவரும் அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி வகுப்புவாத, மதவாத சக்திகள் காலூன்ற முயற்சிக்கின்றன. அ.தி.மு.க அமைச்சர்கள் மீது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. உண்மையில் அவர்கள் மேல் தவறென்றால் கைது நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே.

ஆர்.எஸ்.எஸ். தொண்டரான ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க. சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் தற்போது குடியரசு தலைவர் வேட்பாளராக தலித் ஒருவரை நியமித்து தலித்துகளின் பாதுகாவலர்கள் போல நாடகமாடுகிறது. பல நெருக்கடிகளைக் கொடுத்து, தங்கள் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு அ.தி.மு.கவை ஆதரவைப் பெற்றுள்ளனர்.  கோவா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க தலைமை எத்தகைய நிலைப்பாட்டை எடுத்தார்களோ, அதேநிலையை எதிர்காலத்தில் தமிழகத்திலும் எடுக்கக்கூடும். அதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.” - பொரிந்து தள்ளினார் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, 
மாநிலச் செயலாளர் முத்தரசன், “தமிழகத்தில் எண்ணெய் வளம் குறித்து அறிய 110 இடங்களில் ஓ.என்.ஜி.சி  ஆராய்ச்சி செய்து வருகிறது. விளைநிலங்களில் விவசாயிகளின் அனுமதியின்றி நடைபெறும் இந்த ஆய்வுக்கு எதிராக நெடுவாசல் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

தா. பாண்டியன்

கதிராமங்கலத்தில் தமிழகக் காவல்துறை நடத்திய அடக்குமுறையை கண்டித்தும் அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்கள் நடத்தும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துதல், கீழடியில் அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ளவும், மீனவர்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதந்தோறும் நிவாரணம் வழங்குவது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது, ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வது, மணல் கொள்ளையை தடுப்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம் நடத்தும்” என அறிவித்தார். 
தா.பாண்டியன் பேசியபோது, “பா.ஜ.க அரசினால் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பறிக்கப்படுகிறது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் பட்டாசு தொழில், ஜவுளி, உணவு, கைத்தறி, சிறு வணிகம்’ உள்ளிட்ட தொழில்கள் நலியும் அபாயத்தில் உள்ளன. மாறாக முதலாளிகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டியினால் இட்லி முதல் சட்டினிவரை தனித்தனியே வரி வசூலிக்கப்படுகிறது. இப்படி மக்களை பாதிக்கும் சட்டங்களை கொண்டுவந்த அரசு, அதில் பெட்ரோலையும், டீசலையும் சேர்க்கவில்லை. காரணம் தனியார் முதலாளிகளிகளின் வளர்ச்சிக்காக.

 ஒரே சட்டம், ஒரே வரி, ஒரே சந்தை என்ற கொள்கை ஆபத்தில்போய் முடியும். ஒற்றைக் கலாசாரத்தை ஆதரித்தால், இந்தியாவின் பன்முகத்தன்மை சிதையும். நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் போராடும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டால் அதனை செங்கோடி தாங்கி முறியடிப்போம்” என்றார்.

இறுதியாக பேசிய தேசிய செயலாளர் டி.ராஜா, “தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமையும்’ எனச் சொல்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு துளியும் இல்லை. நாம் என்ன சாப்பிடவேண்டும். எங்கு சாப்பிட வேண்டும் என்பதை மோடி அரசு முடிவு செய்கிறது. இந்தியாவின் மாண்பாக விளங்கும் மதச் சார்பின்மையை அழித்துவிடவும், அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்கவும் இந்த அரசு முயற்சிக்கிறது. இப்படியான மக்கள் விரோத அரசை அகற்றுவது மக்களின் கடமை. அதற்கான போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.
 கூட்டத்தில் தலைவர்களுக்கு பண மாலைப் போடப்பட்டது. திராவிட பாணியிலான இந்த வழக்கத்தை மேடையின் கீழ் இருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முகச் சுழிப்புடன் பார்த்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்