வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (06/07/2017)

கடைசி தொடர்பு:17:40 (06/07/2017)

கொடநாடு மர்மங்கள் - முதல்வர் பழனிசாமி பதில்

 கொடநாடு விவகாரம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது" என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், கொடநாடு எஸ்டேட்டில் தொடர்ச்சியாகப் பல மர்மங்கள் நடந்து வருகின்றன. காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இருக்க, இரண்டு நாள்களுக்கு முன்னர், அங்கு நீண்ட நாள்களாகப் பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரம் குறித்து, இன்று சட்டசபையில் காவல்துறைக்கான மானிய கோரிக்கையின்போது தி.மு.க உறுப்பினர் அன்பழகன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "கொடநாடு விவகாரத்தில் 7 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவத்தில் கனகராஜ் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார். பங்களாவில் கைக்கடிகாரம், சில அலங்காரப் பொருள்கள் மட்டுமே திருட்டுப் போய் உள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மட்டும் இதுவரை கொடநாடு எஸ்டேட் சார்ந்து 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.