வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (06/07/2017)

கடைசி தொடர்பு:18:08 (06/07/2017)

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி! #ZimVsSL

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, இரண்டாவது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று 1-1 என்ற சமநிலையில் இருந்தனர். இந்நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. 

டாஸ் ஜெயித்த இலங்கை அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. முதல்போட்டியில் சதம் அடித்த சாலமன் மிர் 13 ரன்களில் வெளியேறினார். பிறகு ஜோடி சேர்ந்த ஹாமில்டன் மசகட்சா - மசகன்டா இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது. ஹாமில்டன் மசகட்சா 98 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தனது 5-வது சதத்தைப் பதிவு செய்தார். தவிர, மசகன்டா 48 (57), சீன் வில்லியம்ஸ் 43 (47), கடைசிநேரத்தில் அதிரடி காட்டிய  பீட்டர் மூர் 24 (11), சிகந்தர் ராசா 25 (17) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பில் 310 ரன்கள் குவித்தது ஜிம்பாப்வே அணி. கடைசி இரண்டு ஓவர்களில் ஜிம்பாப்வே 30 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

ஜிம்பாப்வே - இலங்கை 3வது ஒருநாள் போட்டி

50 ஓவர்களில் 311 ரன்கள் என்ற இலக்கோடு தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிரோசன் - குணதிலகா இருவரும் சதம் அடித்ததோடு, முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்தனர். பந்துவீச்சு, ஃபீல்டிங் என இரண்டிலும் ஜிம்பாப்வே வீரர்கள் சொதப்ப, 47.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை எட்டிய இலங்கை வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி வருகிற 8-ம் தேதி நடக்கவிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க