Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘மலையாள திரையுலகில் ஒரு பெண்ணுக்கு இவ்வளவுதான் மரியாதையா?!" - கொதிக்கும் நடிகை ரஞ்சனி

ரஞ்சனி

கேரளாவில் வசித்துவரும் நடிகை ரஞ்சனி, கேரள எம்.பி இன்னொசென்ட் தெரிவித்திருக்கும் கருத்தை எதிர்த்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. மலையாள சினிமாவில் வாய்ப்பு தேடிவரும் புதுமுக நடிகைகள், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கேரள நடிகைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தது. பாவனா கடத்தல் சம்பவத்தில், கேரள நடிகர் சங்கத்துக்கும் கேரள நடிகைகள் கூட்டமைப்புக்குமான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் பெரியதாகிவந்தது. 

இந்நிலையில், கேரள நடிகர் சங்கத்தின் (Association of Malaiyalam Movie Artists - AMMA) 23-வது பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான இன்னொசென்ட், ''மலையாளத் திரைப்பட உலகம், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையிலே உள்ளது. நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதில்லை'' என்று சொல்லியிருந்தார். இது, கேரள நடிகைகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக நடிகைகள் கூட்டமைப்பு, தங்கள் விளக்கத்தைச் சமூக வலைதளத்தில் பதிவுசெய்திருக்கிறது. 

ரஞ்சனி

‘‘நடிகர் சங்கத் தலைவர் இன்னொசென்ட் முற்றிலும் தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். ஆதிக்கம் படைத்தவர்களின் அதிகார துஷ்பிரயோகம், மலையாள சினிமாவில் உள்ளது. இளம் நடிகைகளும் வாய்ப்பு தேடி வரும் புதுமுகங்களும் இங்கே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை யாரும் மறுக்க முடியாது. தான் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடும் என்கிற நினைப்பில் இன்னொசென்ட் சொல்லும் பொய்யை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று தெரிவித்திருக்கிறார்கள். 

கேரளாவில் வசித்துவரும் நடிகை ரஞ்சனி, இன்னொசென்டின் அறிவிப்பை எதிர்த்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். கேரள சினிமாவில் பெண்களுக்கு எதிராக அப்படி என்னதான் நடக்கிறது என்று ரஞ்சனியிடம் கேட்டோம். 

‘‘கேரள இன்டஸ்ட்ரியில் எக்ஸிகியூட்டிவ் மெம்பர்களாக பெண்கள் இல்லை. நடிகைகளுக்கு ஒரு பிரச்னை என்றால், சொல்வதற்கு நம்பகத்தன்மையான அமைப்பு எதுவும் இல்லை. நடக்கும் பாலியல் கொடுமைகளை வெளியில் சொன்னால், அடுத்தப் படத்தில் வாய்ப்பு கிடைக்காது என்ற பயத்தினால் பல நடிகைகள் மனம் புழுங்குகிறார்கள். நடிகைகள், தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளைச் சொல்வதற்கான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். புகார் அளிக்கும்போது அது ரகசியமாக விசாரிக்கப்பட வேண்டும். புகார் சொல்லும் நடிகையை அது எந்த வகையிலும் பாதிப்பதாக இருக்கக் கூடாது. 

நம் கண் முன்னால் நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால், எதுவுமே நடக்காததுபோல இன்னொசென்ட் பேசிவிட்டுச் செல்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவர் பேசியதைக் கேட்டு கோபமும் அதிர்ச்சியும் அடைந்தேன். முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிப் பொறுப்பில்லாமல் பேசுவது வேதனையானது. சினிமாவில் உள்ள பெண்களை அவர் எப்படி மதிக்கிறார் என்பதை இந்தப் பேச்சு உணர்த்துகிறது. நடிகர் சங்கம் என்பது நகைச்சுவையும் விளையாட்டும் நடக்கிற இடம் கிடையாது. பெண்களை மதிக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், இவர் பொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தும்படி பேசுகிறார். கேரள காவல் துறை அதிகாரிகளிடமும் தேசிய மகளிர் ஆணையத்திடமும் நான் கேட்டுக்கொள்வது இதுதான். பெண்களைக் கேவலப்படுத்தும்படி பேசிய அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்குக் கொடுக்கப்படும் தண்டனை, மற்றவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்கள் சகோதரி பாவனாவுக்கு நீதி கிடைக்கும் வரை மலையாள திரை உலகுக்கு இருண்ட காலம்தான்’’ என்று கொதித்தார் ரஞ்சனி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement