Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘இப்ப நாங்க சி.எம் மாதிரி...!’ - கொங்கு மண்டலத்தை ஆட்டுவிக்கும் அமைச்சர்கள் #VikatanExclusive

எடப்பாடி பழனிசாமி

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க அமைச்சர்களின் ஆதிக்கத்தைப் பார்த்து நிலைகுலைந்து போயிருக்கின்றனர் அடிமட்டத் தொண்டர்கள். 'கொங்கு மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களில் சிலர், நிழல் முதல்வராகவே வலம் வருகின்றனர். அரசு ஒப்பந்தம் முதல் அதிகாரிகள் மாற்றம் வரையில் அவர்கள் சொல்வதுதான் சட்டம். சட்ட விரோதக் காரியங்களும் அதிகரித்துவிட்டன' எனக் கொதிக்கின்றனர் அரசு ஊழியர்கள். 

முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பிறகு, எடப்பாடி பழனிசாமியைத் தேடி பதவி வந்தது. தொடக்கத்தில், சசிகலா குடும்பத்துடன் நெருக்கம் காட்டி வந்த பழனிசாமியும், காலப்போக்கில் தனித்து செயல்படத் தொடங்கிவிட்டார். ‘வாரிசு அரசியலை ஏற்க மாட்டோம்' என எடப்பாடி ஆதரவு எம்.பியான திருத்தணி கோ.அரி பேசியதுதான் இந்த விவகாரத்தின் முக்கிய ஹைலைட்ஸ். “வாரிசு அரசியல் முழக்கத்தை முன்னெடுப்பதன் மூலம், 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் நாங்கள் பயணிக்கிறோம்' என்பதை வெளிப்படையாகவே சுட்டிக் காட்டிவிட்டார் முதல்வர் பழனிசாமி. ஆனால், அவருக்கு நெருக்கமான கொங்கு மண்டல அமைச்சர்களின் ஆட்டம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. அமைச்சர்களின் வாரிசுளும் ஆட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கடந்த தி.மு.க ஆட்சிக்கு எந்தெந்த வழியில் எல்லாம் கெட்ட பெயர் ஏற்பட்டதோ, அதேபாதையில் இந்த அமைச்சர்களும் பயணிக்கின்றனர். இதனால், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகியுள்ளது" என விவரித்த மேற்கு மண்டல அ.தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர், 

“எடப்பாடி பழனிசாமியின் சமூகத்து அமைச்சர்களில் ஒரு சிலர், நிழல் முதல்வராகவே தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் கைகளில் வலுவான துறைகள் உள்ளன. தொடர்ந்து பதவியில் இருப்பதால், தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டனர். 'தங்களுக்கு எதிரிகளே இல்லை' என்ற சூழலை மாவட்டத்தில் உருவாக்கிவிட்டனர். அரசு கோப்பில் கையெழுத்து போடுவதற்கு முன்பு, அமைச்சரைக் கேட்டுவிட்டுத்தான் அதிகாரிகளே கையெழுத்துப் போடுகின்றனர். காவல்துறை அதிகாரிகளும் இதே பாணியைத்தான் கடைபிடிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள முக்கியப் பதவிகளுக்கு தங்கள் சமூகத்து ஆட்களைக் கொண்டு வந்துவிட்டனர். அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இந்த அதிகாரிகள் துணை போகிறார்கள். ஆக்ரமிப்புகள், சட்டவிரோத மதுபான விற்பனை, விளம்பர போர்டுகள் என மேற்கு மண்டலத்தில் இவர்களின் ஆதிக்கம் எல்லை மீறிச் செல்கிறது. உதாரணமாக, கொங்கு பகுதியில் என்.எச் 67 என்பது நாகப்பட்டினம் முதல் கூடலூர் வரையில் செல்கிறது. கோவை மாவட்டத்தில் திருச்சி சாலையைக் கடந்து இந்த நெடுஞ்சாலை பயணிக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடையையும் ஏழு பார்களையும் அப்புறப்படுத்திவிட்டனர். இந்த பார்களை எல்லாம் 100 மீட்டர் சுற்றளவுக்குள், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறித் திறந்துவிட்டார்கள். மாவட்டம் முழுவதும் சட்டவிரோத டாஸ்மாக் பார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ‘யாருக்கு பார் கொடுக்க வேண்டும்' என்பதை அமைச்சர் வீட்டில் கூட்டம் போட்டு முடிவு செய்கிறார்கள். இதைப் பற்றி மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்களும் கண்டுகொள்வதில்லை. காரணம். அமைச்சர் மீது அதிகாரி ஒருவர் காட்டும் அதீத விசுவாசம்தான். இத்தனைக்கும் அமைச்சரைவிட பத்து வயது மூத்தவர் அந்த அதிகாரி. சில நாட்களுக்கு முன்பு சர்க்யூட் ஹவுசில் வைத்து அமைச்சரிடம் பேசியிருக்கிறார். 'சார்...நான் நான்கு மாவட்டங்களில் வேலை பார்த்துவிட்டேன். எனக்கு சர்வீஸ் போதும். என் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்ததே பெரிய விஷயம். வேறு பதவிக்கு என்னை மாற்றிவிடுங்கள்' எனக் கேட்டிருக்கிறார். இதனால் கடுப்பான அமைச்சர், 'அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ உன் வேலையை மட்டும் பாரு' என ஒருமையில் எகிறிவிட்டார். இதற்கு மேல் பேச முடியாமல் அந்த அதிகாரி நகர்ந்துவிட்டார். இதே ஆதிக்க மனோபாவத்தில்தான் அனைவரையும் நடத்துகிறார் அமைச்சர். கட்சிக்காரர்களுக்கு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை" என்றார் ஆதங்கத்துடன். 

“வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும், தங்களை சந்திக்க வரும் உறவினர்கள், நண்பர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். ‘வீட்டுக்குள் நுழையும்போதே செல்போனை அணைத்துவிட வேண்டும்' என உத்தரவு போட்டுவிட்டே பேசுகிறார்கள். அண்மையில், நண்பர்களுடன் உற்சாகமாக இருந்தபோது பேசிய அமைச்சர், 'இப்ப நான் சி.எம். மாதிரி. நான் சொல்வதைத்தான் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். என்னை மீறி எந்த வேலையையும் அவர் செய்வது கிடையாது. சமீபத்தில் ஏழு கலெக்டர்களைத் தூக்கியது நான்தான். அடுத்து ஐ.பி.எஸ் லிஸ்ட்டையும் தயார் செய்து வருகிறேன். இங்கிருந்த உயர் அதிகாரி ஒருவருக்கு சென்னையில் பதவி வாங்கிக் கொடுத்ததும் நான்தான். என்னைத் தாண்டி இந்த ஆட்சியில் எதுவும் நடக்காது. கொங்கு மண்டலத்தில் மட்டும் அல்ல, இனி தமிழ்நாட்டில் தொடர்ந்து நம்ம ஆட்சிதான். 'என 'உற்சாகத்தில்' பேசியிருக்கிறார். தவிர, தி.மு.கவில் உள்ள நிர்வாகிகளும், சமுதாயரீதியாக அமைச்சரிடம் நெருங்கிவிட்டனர். மத்திய அரசுக்கு வேண்டிய பா.ஜ.க நிர்வாகிகளையும் வளைத்துவிட்டார். சட்ட விரோதமாக எந்த விவகாரம் வந்தாலும், ‘அவர் நம்ம ஆள். அமைதியாக இருங்கள்' என போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் போகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் நடத்திய ரெய்டைக் காட்டிலும், கொங்கு மண்டலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பார்வையைத் திருப்பினால் நன்றாக இருக்கும்" என்கிறார் கொங்கு மண்டல அ.தி.மு.க சீனியர் ஒருவர். 

‘ஜெயலலிதா இருந்தவரையில், கொங்கு மண்டலத்து ராஜாவாக வலம் வந்த பலரும், எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்த பிறகு, நிழல் முதல்வராகவே மாறிவிட்டனர். அதிகாரத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மற்றவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாளை வேறு ஒரு அதிகாரம் இவர்களை விரட்டத்தான் போகிறது' என்ற பொருமல்களும் அ.தி.மு.க வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement