எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! | Today is last day of MBBS / BDS Medical application

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (07/07/2017)

கடைசி தொடர்பு:13:44 (07/07/2017)

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்புக்கும் விண்ணப்பம் பெற இன்றே (7.7.2017) கடைசி நாள். விண்ணப்பங்கள் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது. நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பெற்றிருப்பவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் ஜூலை 8-ம் தேதி (08.07.2017).

மருத்துவப் படிப்பு

மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் வழங்கிய முதல் நாளில் (27.06.2017), அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பம் பெறவேண்டி இருந்தது. முதல் நாளிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு, பல மையங்களில் விண்ணப்பங்கள் தீர்ந்துவிட்டன. விண்ணப்பங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், இணையத்தில் (http://www.tnhealth.org) `விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்' என அறிவித்தது மருத்துவக் கல்வி இயக்ககம். 

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை, `மருத்துவக் கல்வி இயக்ககச் செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை - 600010' என்ற முகவரிக்கு நாளை (08.07.2017) மாலை 5 மணிக்குள்  சேர்ந்துவிடும் வகையில் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனவா என்ற விவரத்தை, இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறது மருத்துவக் கல்வி இயக்ககம். 

வியாழக்கிழமை (06-07-17) வரை 42,818 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் 30,894 விண்ணப்பங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 11,924 விண்ணப்பங்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மேனேஜ்மென்ட் கோட்டாவுக்குமானவை. கடந்த ஆண்டு 26,000 விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 17,000-க்கு அதிகமான விண்ணப்பங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.

நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று, அரசு வழங்கிய விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து அனுப்பியவர்களே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேனேஜ்மென்ட் கோட்டாவிலும் சேர முடியும். தமிழ்நாட்டில் ஒன்பது மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சேர, மத்திய சுகாதாரப் பணி இயக்குநரகம் கலந்தாய்வை நடத்துகிறது. இதில் கலந்துகொள்ள, மத்திய சுகாதாரப் பணி இயக்குநரக இணையதளத்தின் (http://www.mcc.nic.in) வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது மத்திய சுகாதாரப் பணி இயக்குநரகம் விண்ணப்பம் வழங்கிவரும் நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேர அந்தந்த மாநில அரசே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். 

மருத்துவப் படிப்பு

தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,050 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவிகித இடங்களாக 456 இடங்கள் உள்ளன. மீதம் உள்ள இடங்கள் 2,594. இதில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கான 85 சதவிகிதம் ஒதுக்கீட்டு இடங்களாக 2,203 பேரும், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மற்றும் பிற தேர்வு வாரியங்களில் படித்த மாணவர்களுக்கான 15 சதவிகிதம் ஒதுக்கீட்டில் 401 இடங்கள் உள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 783. இதில் மாநிலப் பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 85 சதவிகிதம் ஒதுக்கீட்டின்படி 664 இடங்களும், மீதம் உள்ள 15 சதவிகித ஒதுக்கீட்டில் சி.பி.எஸ்.இ., மற்றும் இதர தேர்வு வாரியங்களில் படித்தவர்களுக்கு 119 இடங்களும் உள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் பல் மருத்துவப் படிப்புக்கு 200 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டின்படி 30 இடங்களும், மாநிலப் பாடங்களில் படித்தவர்களுக்கு 144 இடங்களும், பிற தேர்வு வாரியத் தேர்வு எழுதியவர்களுக்கு 26 இடங்களும் உள்ளன. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,190. இதில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 1,011 இடங்களும், பிற தேர்வு வாரியத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு 179 இடங்களும் உள்ளன. 

விண்ணப்பம் செய்தவர்களை நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியலைத் தயாரித்து 14.7.2017 அன்று வெளியிடுகிறது மருத்துவ கல்வி இயக்ககம். அன்றைய தினமே பெரும்பாலான மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறுமா... நிறைவேறாதா என்பதும், ஜூலை- 17-ம் தேதி தொடங்க இருக்கும் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியுமா என்பதும் தெரிந்துவிடும். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close