Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“இன்றும் விஜய் அஜீத்துக்கு போட்டி எம்.ஜி.ஆர்தான்!” படையெடுக்கும் புத்தகங்கள்


எம்.ஜி.ஆர்

நிஜத்திலும் நிழலிலும் தன்னை ஒரே பிம்பத்தில் பொருத்திக்கொண்டு காலம் முழுவதும் தன்னை வெளிப்படுத்துவது என்பது எந்த ஒரு தனி மனிதனாலும் முடியாத காரியம். இதை வெற்றிகரமாக சாதித்தவர் எம்.ஜி.ஆர். ஒரு நாடக நடிகராக தன் சினிமா வாழ்க்கை துவக்கி தனக்கென தனிப்பட்ட குணாதிசயங்களோடு திரைப்படத்தில் பணியாற்றி அதை தன் பொதுவாழ்க்கைக்கு வெற்றிகரமாக முதலீடாக்கிய ஒரு நபர் எம்.ஜி.ஆர். நாம் கொண்டாடும் எம்.ஜி.ஆரின் பிரத்யேக அடையாளங்கள், அவரது சாம்பல் நிற புஸ் புஸ் தொப்பியும், கருப்புக்கண்ணாடியும்.

இயல்பான வாழ்வில் இந்த அடையாளங்களோடு நம் தெருவில் ஒருவர் நடந்துசெல்தைப் பார்த்தால் நிச்சயம் அவர் நம் கண்ணுக்கு கேலிப்பொருளாகத்தான் தெரிவார். ஆனால் இந்த அடையாளங்களோடு ஒரு மனிதர் நம்மிடையே நடமாடிச் சென்றிருக்கிறார் என்பது ஆச்சர்யம். சினிமாவுக்காகக் கூட சிகரெட், மதுவைத் தொடுவதில்லை, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட கதைகளில் நடிப்பதில்லை, பெண்களை அவமதிக்கும் காட்சிகளை ஒப்புக்கொள்வதில்லை என சினிமாவில் அவர் கடைபிடித்த விஷயங்கள் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டத்தை தந்தது. தனிப்பட்ட வாழ்வில் அவரது கொடுக்கும் குணம் இன்னும் அவர் மேல் மதிப்பைக் கூட்டியது. தமிழ்சினிமாவில் ஏழை எளியவர்களுக்கென இலவச மருத்துவமனை நடத்திய முதலும் கடைசியுமான நடிகர் அவர்தான். நடிகராக இருந்து நாடாளும் வாய்ப்பு கிடைத்தபின்னும் அவர் சித்தாந்தங்கள் வழி தன் ஆட்சியை நடத்தவில்லை. தன் அனுபவங்களில் எதிரொலியாகவே அவரது சட்டங்கள் இருந்தன. பற்பொடியும் கால்செருப்பும் சத்துணவும் அவருக்கு உதித்தது அப்படித்தான். 

எம்.ஜி.ஆர்மறைந்து 30 ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் அவர் மக்களால் போற்றப்படுகிறார். தமிழர் குடும்பங்களில் அவர்கள் வணங்கும் தெய்வம், உறவினர்களைத்தவிர்த்து மூன்றாவது ஒரு நபர் அவர்களின் புஜையில் இடம்பெற்றிருந்தால் அது எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். கட்சி மாச்சர்யமின்றி அன்றும் இன்றும் போற்றப்படுகிறார் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தின் வழிவந்து கருணாநிதியின் ஆகச்சிறந்த தொண்டனாக ஒரு காலத்தில் பணியாற்றிய வைகோ, அவரது நுாற்றாண்டுவிழாவை கொண்டாடுகிறார். 'யாரை அதிகம் மிஸ் செய்ததாக வருந்துகிறீர்கள்' என கருணாநிதியிடம் கேட்டால் எம்.ஜி.ஆர் என அவர் உருகுகிறார்.

கருணாநிதியின் அமைச்சரவையில் அதிகாரத்தில் இருக்கும்போதே, 'எனக்கு தந்தையைப்போன்றவர்' என கண்கலங்கி கட்டுரை எழுதுகிறார் துரைமுருகன். எம்.ஜி.ஆர் இருக்கையில் மேடையில் அவரை வறுத்தெடுத்து டி.ராஜேந்தர், 'அந்த மனிதனை திட்டியதற்காக இன்னமும் வெட்கப்படுகிறேன்' என ஒரு மேடையில் அழுது தீர்த்தார். இவர்களின் இந்த பண்பை  எடைபோட எம்.ஜி.ஆர்தான் எடைக்கல்.  தான் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் தன்னைப்பற்றிய பிம்பத்தை ஆழமாக பதியவைத்தது எம்.ஜி.ஆரின் சாதனை. 


இறந்து இத்தனை ஆண்டுகளானபின்னும் ஒருவருக்கு 10க்கும் மேற்பட்ட இதழ்கள் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் அவர் புகழ்பாடும் அமைப்புகள் உருவாகிக்கொண்டே இருப்பது உலகளவில் வேறு யாருக்காவது உண்டா என்பது சந்தேகமே. வெளியாகும் இந்த இதழ்கள் வணிக பத்திரிகைகளுக்கு ஈடாக வரவேற்பு பெற்றிருப்பதும் ஆச்சர்யம். அவரைப்பற்றி இன்னமும் ஆய்வு நோக்கில் தொடர்ந்து நுால்கள் வெளியிடப்படுகின்றன. திராவிட இயக்கத்தின் பண்பாட்டுத்தளத்திலிருந்து விலகி உருவான தலைவர் என அவரைச் சொல்வார்கள். ஆனால் திராவிட இயக்கங்களின் தலைவர்கள் வரிசையில் அதிகம் நுால்கள் வெளியானது இன்றுவரை அவர் ஒருவருக்குத்தான் என்பது ஆச்சர்யம் அளிக்கும் விஷயம். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் முன்னாள் டி.ஜி.பி மோகன்தாஸ் எழுதிய 'எம்.ஜி.ஆர், தி மேன் அன் தி மித்', எம்.எஸ். பாண்டியன் எழுதிய 'தி இம்பேக்ட் ஆஃப் எம்.ஜி.ஆர் ', உள்பட ஆங்கிலத்திலும் எம்.ஜி.ஆர் குறித்த நுால்கள் வெளியாகி உள்ளன. 

வார மாத பத்திரிகைகள் என எடுத்துக்கொண்டாலும் இன்றைக்கு புகழ்பெற்றுவிளங்கும் விஜய் அஜித் போன்ற உச்சநட்சத்திரங்களைவிடவும் எம்.ஜி.ஆர் பெயரில்தான் இதயக்கனி, உரிமைக்குரல், எம்.ஜி.ஆர் ரசிகன் என பல பத்திரிகைகள் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் திராவிட இயக்க விமர்சகர் ஆர். கண்ணன் எழுதியுள்ள எம்.ஜி.ஆர் ஏ லைஃப் என்ற நுால் கலைவாணர் அரங்கில் நாளை வெளியிடப்பட உள்ளது. எம்.ஜி.ஆரின் திரையுலக, அரசியல் வாழ்க்கை விறுப்பு வெறுப்பின்றி விமர்சனப்பார்வையுடன் எழுதப்பட்டிருக்கும் இந்நுாலின் வெளியீட்டு விழாவில் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராம், முன்னாள் அமைச்சர் ஆர் எம்.வீரப்பன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 

இறவாப்புகழ் என்பது இதுதானோ?!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement