பத்பநாபசுவாமி கோயில் வைரங்கள் மாயமான விவகாரம்! விசாரணையைத் தொடங்கியது போலீஸ் | Trivandrum Padhpanapana Swamy temple began with inquiry into diamonds

வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (07/07/2017)

கடைசி தொடர்பு:17:42 (07/07/2017)

பத்பநாபசுவாமி கோயில் வைரங்கள் மாயமான விவகாரம்! விசாரணையைத் தொடங்கியது போலீஸ்

திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் காணாமல் போனது தொடர்பாக முதற்கட்ட விசாரணையைக் கோயில் ஊழியர்கள் மற்றும் பூசாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸார் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே 8 வைரங்கள் காணாமல் போய் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் அறிக்கை தாக்கல் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான வைர, தங்க நகைகள் இருப்பதாகக் கடந்த சில வருடங்களுக்கு முன் தகவல் வெளியானது. அதன் பின், பத்பநாபசுவாமி கோயிலுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.

கோபால் சுப்ரமணியம் சிறப்பு வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். கோயில் நகைகளைக் கணக்கெடுக்க முன்னாள் மத்திய தலைமை கணக்கு அதிகாரி பினோத்ராய் தலைமையில் ஒரு குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோயில் நகைகள் பலமுறை திருடப்பட்டுள்ளதாக, ஏற்கெனவே இந்தக் குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்திருந்தது.

பத்பநாப சுவாமிக்கு இடப்படும் நாமத்தில் உள்ள வைர நகைகள் காணமல்போனது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாமத்தில்
8 வைர கற்கள் இருக்கும். இந்த நகைகள் தினமும் பத்பநாப சுவாமிக்கு வழிபாடு நடைபெறும்போது அணிவிக்கப்படும். அதன்பின்பு சந்நிதானத்தில் உள்ள காப்பகத்தில் பத்திரமாக வைக்கப்படும்.கோயில் நகைகள் குறித்த ஆய்வு நடக்கும்போது இந்த நகைகள் எப்போது காணமல் போனது என விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன் கோபால் சுப்பிரமணியம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பத்பநாப சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 8 வைரங்கள் கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் காணாமல் போய் உள்ளன. அதன் பின்னர், 2016 மார்ச் மாதம்  மீண்டும் இந்தக் குறிப்பு கோயில் ஆவணத்தில்  எழுதப்பட்டுள்ளது. அதன்பின் 5 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் இதுபற்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் மதிப்பு பல கோடி இருக்கலாம். இந்த வைரங்கள் கோயில் தலைமை பூசாரியின் கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளன. இந்தப் பல கோடி மதிப்புடைய 8 வைரங்கள் மிகவும் பழமையானவை. காணாமல்போன வைரங்கள் அடங்கிய நகைகள் சேதமடைந்துள்ளன என கோயில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக்கொண்டிருந்தார். பத்பநாமநாபசுவாமி கோயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 வைரங்கள் காணாமல் போனதாகக் கோயில் மேலாளர் ஸ்ரீகுமார் திருவனந்தபுரம் போர்ட்டு போலீஸில் புகார் கொடுத்திருந்தார். சிறப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் 8 வைரங்கள் காணாமல்போனது தொடர்பாகத் தகவல் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து கேரள அரசு குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து குற்றப்பிரிவு ஐஜி ஸ்ரீஜித் விசாரணையைத் தொடங்கினார். வைரங்கள் காணாமல்போனது தொடர்பாக முதற்கட்ட விசாரணையைக் கோயில் ஊழியர்கள் மற்றும் பூசாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸார் தொடங்கி உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க